இதென்ன கேள்வி...நாராயணன் என்பது தான் சரி, காலம் காலமாக அப்படித்தானே எழுதி வருகிறோம் என்பீர்கள். அது எப்படி சரியாகும். நாரம்+அயனன் என்பதே நாராயணன் ஆயிற்று. அயனன் என்பதிலுள்ள ன இரண்டு சுழி உள்ளது தானே! அப்படியானால், நாராயனன் தானே சரியானது என்றும் வாதம் செய்யலாம் இல்லையா! ஆனால் ண என்ற மூன்று சுழி எழுத்தைப் பயன்படுத்த காரணம் என்னவென்று கேளுங்கள். பிரஜாபதி என்ற சொல்லுக்கு பிரம்மா என பொருள். ஆனால், இதை நாராயணன் என்ற பொருள் வரும்படியாகவும் பயன்படுத்துவார். இப்படி ஒரு சொல்லே இரட்டை அர்த்தம் தருவதாக இருந்தால் அதற்குரிய விதிப்படி தான் எழுத வேண்டும். மடி என்பதை மடித்து வைத்தல் என்றும் சொல்லலாம். மடிக்கணினி என்றும் பயன்படுத்தலாம். ஆனால், ஒரு சொல், ஒரு நபரையோ அல்லது ஒரு பொருளையோ மட்டும் குறிக்குமானால், அதற்கு ண என்ற எழுத்தைப் பயன்படுத்த வேண்டுமென பாணினி மகரிஷி இலக்கணம் வகுத்து விட்டார். அதனால், நாராயனன் என்ற சொல்லை நாராயணன் என்கிறோம். நாரம் என்றால் தண்ணீர். அயனன் என்றால் சயனித்திருப்பவர். பாற்கடலில் படுத்திருப்பவர் நாராயணன் என்பது உட்பொருள்.