பதிவு செய்த நாள்
20
ஜூலை
2013
10:07
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிகளில் சிவன் கோவில் மற்றும் நரசிம்மர் கோவிலில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு நடக்கிறது. நரசிம்மர் பிரதோஷத்தன்று பிறந்ததாலும், சிவனுக்கு உகந்தது பிரதோஷ நாள் என்பதாலும் நரசிம்மர் மற்றும் சிவன் ஆலயங்களில் இந்நாளில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். இம்முறை இன்று (20ம் தேதி) பிரதோஷ நாளாக அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் சுற்றுப்புற கோவில்களில் சிவன் மற்றும் நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு இன்று நடக்கிறது. விஷ்வக்சேனர் ஆராதனை நிகழ்ச்சியுடன் பூஜை துவங்குகிறது. இதை தொடர்ந்து வாசுதேவ புண்யாகாஜனம், மகா சங்கல்பம், கலச ஆவாஹனம், பஞ்சசூக்த பாராயணம், மூல மந்திரங்கள் ஜபம், சாற்றுமறை, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு தேன், இளநீர், தயிர், சந்தனம், குங்குமம், பால், திருமஞ்சன பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகமும், அலங்கார நைவேத்திய பூஜை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடக்கின்றன. சிவனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. பக்தர்கள் அனைவரும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கலாம் என கோவில்களின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.