பதிவு செய்த நாள்
24
ஜூலை
2013
10:07
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே, மலைக் குகையில், 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய, சமணர் கற்படுக்கை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருநகரில் இருந்து, இளநகருக்கு செல்லும் கிராம சாலை அமைந்து உள்ளது. இச்சாலையின் இடது புறத்தில், கிராம முகப்பு அருகே, சிறிய அளவிலான மலைக் குன்று ஒன்று உள்ளது. இங்கு, தரைத் தளத்தில் இருந்து, 5 அடி உயரத்தில், சிறுகுகை உள்ளது. இதில், சமண ஆய்வாளர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது, 10 அகலம், 5 அடி நீளம் கொண்ட, சமண கற்படுக்கை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கற்படுக்கையின் மேற்புறத்தில் குறியீடுகள், மருந்து தயாரிப்பதற்கான உரல் போன்ற அமைப்பு, விளக்கு ஏற்றுவதற்கான, 3 குழிகள், படுக்கையின் மேற்கு திசையில், 15 அடி தூரத்தில் பாறை ஒன்றின் மீது, குறியீடுகள் வரையபட்டு இருப்பதும், கிழக்கு திசையில், கற்கால நாகரிகத்தை சேர்ந்த கற்படை வட்டம் ஒன்று உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, ஆய்வு குழுவினர் கூறியதாவது: சமண கற்படுக்கைகள் பொதுவாக தலையணையுடன் காணப்படும். இங்குள்ள கற்படுக்கை தலையணையின்றி உள்ளது. எனவே, இது, 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என, கருதுகிறோம். இதன் அருகில், மற்றொரு சிறிய அளவிலான குகை ஒன்று உள்ளது. அங்கு, துறவிகள் தியானம் செய்திருக்கலாம். குகைக்குள் தீர்த்தங்கர் சிலை இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. குகை மண்ணால் புதையுண்டு, சுற்றிலும் புதர்கள் நிறைந்திருப்பதால், அங்கு, ஆய்வு மேற்கொள்ள முடியவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.