பதிவு செய்த நாள்
08
மார்
2011
05:03
அரசே! இந்த ஆடையைப் போர்த்திக் கொண்டால் நீ உன் உண்மை உருவை அடைவாய். ஆனால், இப்போதைக்கு இதை அணியாதே. உன் நன்மைக்கே சொல்கிறேன். இனி நீ வாகுகன் (அழகு குறைந்தவன்) என அழைக்கப்படுவாய். இங்கிருந்து அயோத்தி செல். அந்நாட்டு மன்னன் இருதுபன்னனுக்கு தேரோட்டியாகவும், சமையல் காரனாகவும் இரு, என சொல்லி விட்டு மறைந்து விட்டது. நளனும் அயோத்தி வந்து சேர்ந்தான். அரசனை சந்திக்க அனுமதி பெற்றான். இருதுபன்னனிடம் பேசி சமையல்காரன் ஆனான். இதனிடையே கணவனைப் பிரிந்து தந்தை வீட்டில் இருந்த தமயந்தி, ஒரு புரோகிதரைஅழைத்து, நீர் என் கணவர் நளனை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து வாரும். அவர் ஒருவேளை மாறுவேடத்தில் இருந்தாலும், அடையாளம் காண ஒரு வழி சொல்கிறேன். காட்டிலே கட்டிய மனைவியை தனியே விட்டு வருவது ஒரு ஆண்மகனுக்கு அழகாகுமா? என்று நீ சந்தேகப்படுபவர்களைப் பார்த்துக் கேளும். இந்தக் கேள்விக்கு யார் பதிலளிக்கிறார்களோ அவர் யார் எனத்தெரிந்து அழைத்து வாரும், என்றாள். அவரும் கிளம்பி விட்டார். பல இடங்களில் சுற்றி, அயோத்தியை வந்தடைந்தார். பொது இடத்தில் நின்று கொண்டு, தமயந்தி தன்னிடம் சொல்லியனுப்பிய கேள்வியைச் சத்தமாகச் சொன்னார். அப்போது தற்செயலாக அங்கு நின்ற நளன் காதில் இது கேட்டது. அவன் புரோகிதர் அருகே வந்தான்.புரோகிதரே! நான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. விதிவசமாக நாங்கள் பிரிந்தோம்,என்று பதிலளித்தான். அவனது உருவத்தைப் பார்த்தால் அவன் நளனாக தெரியவில்லை புரோகிதருக்கு. யாரோ ஒருவன் நம் கேள்விக்கு பதிலளிக்கிறான் என நினைத்து நாடு திரும்பி விட்டார். அவர் வரவுக்காக காத்திருந்த தமயந்தி,புரோகிதரே! நான் சொன்ன கேள்விக்கு யாராவது பதிலளித்தார்களா? என்று கேட்டாள்.
அம்மா! ஒரே ஒருவன் தான் என் கேள்விக்கு பதிலளித்தான். அவனது உடல்வாகு மன்னன் போல இருக்கிறது. ஆனால், அவன் கருப்பு நிறத்தவன், மன்னனாகத் தெரியவில்லை, என்றார். அப்படியா? என்ற தமயந்தி,புரோகிதரே! ஒரு யோசனை. மீண்டும் அயோத்தி செல்லும்! எனக்கு மீண்டும் சுயம்வரம் நடக்கப்போவதாக அயோத்தி மன்னரிடம் சொல்லும். ஒருவேளை அங்கிருப்பவர் எனது கணவராக இருந்தால், அவர் பதறிப்போய் மன்னனுக்கு தேரோட்டி இங்கு வருவார், என்றாள். இரண்டாம் சுயம்வரமா? இது பெண்களுக்கு ஏற்புடையதல்லவே என்று இருதுபன்னன் யோசித்த வேளையில், நளன் மன்னனிடம், அரசே! கற்புடைய பெண் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடவே மாட்டாள். நளன் பிரிந்து விட்டான் என்ற காரணத்துக்காக அவள் இப்படி செய்வாள் என என்னால் நம்ப முடியவில்லை, என்று மன்னனைப் போக விடாமல் நளன் தடுத்தான். வாகுகா! நீ சொல்வது பற்றி எனக்கு கவலையில்லை. அந்த தமயந்தி கடந்த சுயம்வரத்திலேயே எனக்கு கிடைத்திருக்க வேண்டியவள். அந்த நளன் அவளைப் பறித்துக் கொண்டு போய்விட்டான். இரண்டாம் தாரமாக இருந்தாலும் பரவாயில்லை. நான் அவளோடு வாழ முடிவு செய்து விட்டேன், எடு தேரை, என உத்தரவு போட்டுவிட்டான் இருதுபன்னன். நளன் வருத்தப்பட்டான். இருப்பினும், தன்னைப் பற்றி புரோகிதர் சொன்னதைக் கேட்டு சந்தேகப்பட்டு, தன்னை வரவழைக்க இப்படி செய்திருக்கலாம் என்று முடிவு செய்து கிளம்பினான். தேர் விதர்ப்ப நாடு நோக்கி மனோவேகத்தை விட வேகமாகப் பறந்தது. அயோத்தி மன்னன் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. இப்படி ஒரு தேரோட்டியா! இந்த வேகத்தில் தேரோட்ட யாராலும் முடியாதே. இவன் இப்படிப் போகிறானே! எதற்கும் இவன் யாரென சோதனை செய்து பார்ப்போம் என முடிவு செய்து, வாகுகா! அதோ! ஒரு மரம் தெரிகிறதே! அதில் பத்தாயிரம் கோடி காய் இருக்கும் என்கிறேன். சரியாவென்று எண்ணிப்பார்த்துக் கொள், என்றான். நளனும் அம்மரத்தின் கீழே தேரை நிறுத்தி அண்ணாந்து பார்த்து,நீங்கள் சொல்வது சரிதான், என்றான்.
அயோத்தி மன்னன் அவனிடம், நளனே! எதையும் எண்ணிப் பார்க்காமலேயே இதில் இத்தனை தான் இருக்கும் என்று சொல்லும் கலையில் நான் வல்லவன். நீயோ அதிவேகமாக தேரோட்டும் கலையில் வல்லவனாக இருக்கிறாய். நம் தொழில்களை ஒருவருக்கொருவர் சொல்லித் தருவோமா? என்று கேட்டான். கேட்டதுடன் நிற்காமல், நளனுக்கு எண்ணாமலேயே கணக்கிடும் கலையைச் சொல்லியும் தந்தான். பின் இருவரும் விதர்ப்ப நாட்டை அடைந்தன். தமயந்தியின் தந்தை வீமராசன் ஆச்சரியத்துடன், அயோத்தி மன்னா! நீ என்னைக் காண எதற்காக வந்தாய்? எனக்கேட்டார். உன்னைப் பார்க்கத்தான், என்று பதிலளித்தான் இருதுபன்னன். இதற்குள் குதிரைகளை இளைப்பாற வைத்தான் நளன். பின் சமையலறைக்குள் சென்றான். வந்திருப்பவனை தமயந்தியால் அடையாளம் காண முடியவில்லை. இவன் இவ்வளவு கருப்பாக இருக்கிறானே! ஏதும் வர்ணம் பூசி மறைத்திருப்பானோ? எதற்கு சந்தேகம்? என நினைத்தவள், ஒரு பணிப்பெண்ணை அழைத்து, நீ மறைந்திருந்து அந்த சமையல்காரன் செய்யும் வேலைகளைக் கவனித்து வந்து சொல், என்றாள். இன்னொருத்தியை அழைத்து, நீ என் மகன் இந்திரசேனனையும், மகள் இந்திரசேனையையும் அந்த சமையல்காரனுடன் நீண்டநேரம் விளையாட வை, என்றாள். அந்தக் குழந்தைகள் நளன் அருகே சென்றனர். அவர்களை அழைத்த நளன்,நீங்கள் என் பிள்ளைகள் போலவே உள்ளீர்கள். நீங்கள் யார்? என்று கேட்டான். தாயை விட்டு தந்தை பிரிந்த கதையையும், தங்கள் தந்தை நளமகாராஜா என்றும் அவர்கள் சொல்ல அவன் மனதுக்குள் அழுதான். குழந்தைகளிடம் அவன் பேசியதை பணிப்பெண் வந்து சொன்னாள். இன்னொருத்தி வேகமாக வந்து, இளவரசி! அந்த சமையல்காரன் தீயின்றியே சமைத்தான். அவன் உள்ளே சென்றதுமே உணவு தயாராகி விட்டது, என்றாள். இதைக்கேட்டதும் தமயந்தி மயக்கநிலைக்குப் போய்விட்டாள்.