பதிவு செய்த நாள்
21
டிச
2010
03:12
முற்றும் துறந்தவர் அந்த முனிவர். அவரது உயிர் இருந்தாலும், போனாலும், யாரும் கவலைப்படப் போவதில்லை. அவர் என்ன செய்திருக்க வேண்டும்? அப்பனே! நானோ முற்றும் துறந்தவன், நீயும், உன் மனைவியுமே வழக்கம் போல் உள்ளே படுத்துக் கொள்ளுங்கள். நான் வெளியே இருக்கிறேனே! என்று சொல்லியிருக்க வேண்டும். அப்படி செய்யாமல், இரண்டு உயிர்கள் பலியாகக் காரணமாகி விட்டதன் விளைவாக அவர் மனித நிலையில் இருந்து தாழ்ந்து அன்னமாகப் பிறந்தார். முற்பிறவியில் செய்த பாவத்திற்கு பரிகாரமாக, இப்பிறவியில் அந்த தம்பதியரை மீண்டும் இணைத்து வைக்க உதவி செய்தார். நிடத நாடு...வயல்களில் செந்நெல் விளைந்து கயல்மீன்கள் துள்ளும் செழிப்பான பூமி. தேன் சிந்தும் பூக்களைக் கொண்ட ஏராளமான சோலைகள் பார்ப்பவர் கண்களைக் குளிர வைக்கும். தாமரையில் அமர்ந்திருக்கும் லட்சுமியைப் போல் லட்சணமான மங்கையர்கள் அங்கே நிறைந்திருந்தார்கள். மணம் மிக்க மலர்களை அவர்கள் கூந்தலில் சூடியும், மார்பில் சந்தனக்குழம்பு பூசியுமே வெளியே செல்வார்கள். அவ்வாறு அவர்கள் சூடிய மலர்களின் மிச்சமும், சந்தனக்குழம்பின் சொச்சமும் தெருவெங்கும் சேறு போல கிடந்தது. அந்தச் சேற்றிலே நடக்கும் யானைகள் வழுக்கி கீழே விழுந்தனவாம். அந்தளவுக்கு அங்கே செல்வச் செழிப்பு. எல்லாருமே பணக்காரர்கள் என்பதால் அங்கே இன்பம் மட்டுமே பொங்கி வழிந்தது. இப்படிப்பட்ட செழிப்பான நிடதநாட்டின் தலைநகரம் மாவிந்தம். இங்கே அறிஞர்களும், கவிஞர்களும் ஏராளமாக வாழ்ந்தனர். அதாவது, கலைமகளுக்கு சொந்த இடம் பிரம்மலோகம் என்றால் யாரும் நம்பமாட்டார்கள். அவளது ஊர் எது எனக் கேட்டால் அது மாவிந்தம் என்று சொல்லக்கூடிய நிலைமை இருந்தது.
நமது ஊரில் மழை பெய்தால், தூறல் தரையிலே விழுந்து மண்வாசனை எழும். அந்த மண் மணமே நமக்கு ஒரு மயக்கத் தைத் தரும். ஆனால், நிடதநாட்டில் மழை பெய்தால் சாம்பிராணி போல் மணக்குமாம். ஏன் தெரியுமா? இளம்பெண்கள் நீராடிவிட்டு, கூந்தலை காயவைக்க அகில் புகை இடுவார்கள். அந்தப் புகை ஊரையே நிறைத்திருக்கும். மழை பெய்யும் போது, புகை நீரில் கரைந்து மழைநீருக்கே மணம் வந்துவிடுமாம். அந்த ஊரிலுள்ள பெண்களின் கற்புநெறியைப் பற்றி சொல்ல வேண்டுமே! கேட்டால், கண்களில் நீர் துளிர்க்கும். நளன் ஆண்ட நிடதநாட்டில் குடிசையே கிடையாது. எல்லாருமே மாடமாளிகைகளில் தான் வசித்தனர். மாளிகை மாடத்திலே நிற்கும் பெண்கள் எட்டி எட்டி பார்ப்பார்கள், வேலைக்கும், வியாபாரத்திற்கும் சென்ற தங்கள் கணவன்மார் திரும்பி வருகிறார்களா என்று! தூரத்தில் யாரோ ஒருவர் வருவது தெரிந்தவுடன், ஆஹா..அவர் தான் வருகிறார் என்று முகம் சிவக்க காத்திருப்பார்களாம். அருகில் வந்ததும், வேறு யாரோ எனத் தெரிந்ததும், அவர்கள் அழுதே விடுவார்களாம். ஏன் தெரியுமா? பிற ஆண்மகன் ஒருவனை தன் கணவன் என எண்ணி, இவ்வளவு நேரமும் எட்டி எட்டி பார்த்தோமே என்று! எத்தகைய கற்புத்திறனுக்கு சொந்தக்கார நாடாக நமது தேசம் இருந்திருக்கிறது! இப்படி ஒரு யுகத்தில் நம்மால் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் கூட பிறக்கிறதல்லவா! அந்த ஊரிலே அலறல் சப்தம் ஆங்காங்கே கேட்கும்...ஐயோ! பசிக்கிறதே, ஐயோ, என் கணவன் என்னை அடிக்கிறானே, ஐயோ! என் மனைவி இப்படி கத்துகிறாளே என்கின்ற அலறல் அல்ல அது! அவ்வூர் பெண்கள் தங்கள் கால்களில் அணிந்திருக்கும் தங்கச் சலங்கைகளின் சப்தமே அது! அது இனிய இசை போல் ஒலிக்குமாம்!
அந்த நாட்டி<லுள்ள குளங்களில் தாமரை மலர்கள் வேண்டுமானால் தத்தளிக்கும். ஆனால், மக்களின் மனம் தத்தளித்ததாக சரித்திரமில்லை. அங்குள்ள மக்களுக்கு தெளிவாகத் தெரிபவை நல்ல நல்ல புத்தகங்களிலுள்ள அறிவு சார்ந்த வரிகள். ஆனால் தெரியாத வரிகள் பெண்களின் இடுப்பு வளைவுகள். புடவை கட்டுவதில் அப்படி ஒரு ஒழுக்கம்.அங்கு அம்மா தாயே என்ற ராப்பிச்சைக் குரலை யாருமே கேட்டதில்லை. எல்லாருமே பணக்காரர்கள் என்பதால் பொறாமைக்கும், வஞ்சனைக்கும் இடமில்லை. எல்லா வீட்டாரும் மனதாலும் குணத்தாலும் ஒன்றுபட்டே வாழ்ந்தனர். இப்படிப்பட்ட சிறப்புடைய நிடதநாட்டின் மன்னனே நளன். பிற நாட்டு மன்னர்கள் இவனைப் பார்க்கவே அஞ்சுவார்கள். அந்தளவுக்கு மரியாதை...பயம். எதிரிகள் வருவதே இல்லை. தப்பித்தவறி ஆசைப்பட்டு வந்தால், வந்த வேகத்திலேயே புறமுதுகிட்டு ஓடி, தங்கள் நாட்டையும் இவனிடமே ஒப்படைத்து விட்டு உயிர் பிழைத்தால் போதுமென கண்காணாத இடத்திற்கு ஓடிவிடுவார்கள். வீரத்தில் மட்டுமல்ல, அழகிலும் மன்மதன். இவனை விரும்பிய கன்னிப்பெண்களுக்கு எண்ணிக்கையில்லை.இவன் பல சமயங்களில் வீதிவழியே தேரில் கம்பீரமாக உலா வருவான். பொதுவாக, பெண்களுக்கு வீரமான ஆண்கள் மீது நாட்டம் அதிகம். அவர்கள் பருந்தையும், கிளியையும் ஒரே கூட்டில் அடைத்து வைத்து, அவற்றுக்கு உணவூட்டியபடியே அவன் தேரில் செல்வதை ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். தங்கள் மேல் அவன் பார்வை பட்டு, அவனுடைய மனைவியாகும் பாக்கியம் தங்களுக்கு கிடைக்காதா என்ற ஏக்கம் அந்த அழகுக் கண்களில் வெளிப்படும். இங்கே, இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதெப்படி...பருந்தையும், கிளியையும் ஒரே கூட்டில் அடைத்து வைக்க முடியும்? கிளியின் வாழ்வு அதோகதியாகி விடாதோ என்று நீங்கள் நினைப்பது நியாயம் தானே!