காரைக்கால்: காரைக்கால் தலத்தெரு சிவலோகநாதர் கோவிலில் விதைதெளி உற்சவ விழா நடந்தது. காரைக்கால் கோட்டுச்சேரி தலத்தெருவில், சிவபெருமான், உழவன் வேடத்தில் வந்து நிலத்தை உழுது விதை தெளித்து கரையேறியதாகவும், அப்போது மழை பெய்து, விவசாயம் செழித்து வறுமை நீங்கி மக்கள் செழிப்புடன் வாழ்ந்ததாகவும் ஐதீகம். அந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக, ஆண்டுதோறும் தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதர் கோவிலில் விதை தெளி ஊற்சவம் நடந்து வருகிறது. இந்து ஆண்டு விதை தெளி உற்சவம் நேற்று நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து ருத்ர கலச பூஜைகள் மற்றும் ருத்ர பாராயணத்துடன் ஹோமம், மகா பூர்ணாஹூதி தீபாராதனை, ருத்ர கலச அபிஷேகம் நடந்தது. விதைதெளி உற்சவம் நேற்று நடந்தது. இதில், சிவகாமி அம்பாள் சமேதராக சிவலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கோவிலின் எதிரே உள்ள நிலத்தில், விதை தெளி உற்சவம் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விதை தெளித்து சாமி தரிசனம் செய்தனர்.