பதிவு செய்த நாள்
03
ஆக
2013
10:08
சின்னமனூர்;குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில், ஆடித் திருவிழாவை முன்னிட்டு, சனீஸ்வரருக்கும், நீலாதேவி அம்மனுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. தேனி மாவட்டம் குச்சனூரில், பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடித் திருவிழா, கடந்த ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ல் இரண்டாவது சனிவார விழா நடைபெற்றது. ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஆக 2 நடந்தது. சனீஸ்வரர் உற்சவ மூர்த்தியாக வலம் வந்து, கோயில் வளாகத்தில் அமர்த்தப்பட்டார். பின்னர் ஏற்கனவே வெண்கல கும்பத்தில் தீர்த்த வடிவில் மஞ்சளுடன் கொண்டு வரப்பட்ட நீலாதேவி அம்மன் சனீஸ்வரரின் இடதுபுறத்தில் அமர்த்தப்பட்டார். முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு, கணபதி ஹோமம், யாகம் வளர்க்கப்பட்டது. அம்மன் மஞ்சள் பட்டும், பகவான் கருநீல பட்டும் உடுத்தி திருமணக்கோலம் பூண்டனர். கோயில் தலைமை பூசாரி திருமலை ஜெயபால்முத்து, மங்கள நாணை வழங்க, அம்மன் கழுத்தில் தாலி கட்டப்பட்டு திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஆக 3 மூன்றாவது சனிவார பெருந்திருவிழா நடைபெறும். தொடர்ந்து 5 ம் தேதி, லாடசித்தர் பூஜையும், 13ல், நான்காவது சனிவாரமும், 12ல் சோணை கருப்பணசாமி பொங்கல், 17ல் ஐந்தாவது சனிவார விழாவுடன் ஆடித்திருவிழா நிறைவடையும். விழா ஏற்பாடுகளை தக்கார் சுரேஷ், நிர்வாக அதிகாரி விஸ்வநாத் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.