புதுச்சேரி : குருசுக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு, அம்மனுக்கு 108 பால் குட அபிஷேகம் நடந்தது. வைத்திக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் 28ம் ஆண்டு ஆடித்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலை, கணபதி ஹோமம், அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலாவும் நடந்தது. இதைதொடர்ந்து, 108 குடம் பால் அபிஷேகமும், அம்மன் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனையும் நேற்று நடந்தது. இரவு, சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. 9ம் தேதி தேர்த் திருவிழா, 10ம் தேதி முத்துப்பல்லக்கு, 11ம் தேதி ஊஞ்சல் தீப ஆராதனையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.