பதிவு செய்த நாள்
07
ஆக
2013
11:08
மாமல்லபுரம் : கடம்பாடி மாரி சின்னம்மன் கோவிலில், நாளை மறுநாள் (9ம்தேதி) தீமிதி திருவிழா நடைபெறுகிறது. மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தில், பழமை வாய்ந்த, மாரி சின்னம்மன் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில், காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்ட பகுதி பக்தர்களுக்கு, குலதெய்வ கோவிலாக பிரசித்தி பெற்றது. இங்கு, ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி உற்சவ விழா சிறப்பு பெற்றது. பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்த, விழாவில் தீமிதிப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு ஆடி உற்சவம், இன்று மாலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு காப்புக்கட்டி துவங்குகிறது. இன்று இரவு 7:00 மணி மற்றும் நாளை காலை 10:00 மணிக்கு, சக்தி கரக வீதியுலா நடைபெறும். நாளை மறுநாள், பகல் 12:00 மணிக்கு, அம்மன் சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு, உற்சவ மூர்த்திகளுக்கு பாலாபிஷேகம் மற்றும் நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4:00 மணிக்கு, திருக்குளத்தில் காப்புக்கட்டி கங்கைநீர் எடுத்து, அம்மன் சன்னிதியில் அலகு நிறுத்தப்படுகிறது. பக்தர்கள், திருக்குளத்திலிருந்து பூங்கரகம் கொண்டு சென்று, அம்மனை தரிசித்து, மாலை 6:00 மணிக்கு, தீ மிதிக்கின்றனர். அதை தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளை அலங்கரித்து, இரவு 8:00 மணிக்கு, வீதியுலா நடைபெறும்.