பதிவு செய்த நாள்
10
ஆக
2013
10:08
திருச்சி சமயபுரத்தில் இருந்து சுமார் 3. கி.மீ தொலைவில் உள்ளது இருங்களூர். இங்கிருந்து அரியலூர் நோக்கிச் செல்லும் சாலையில் 10. கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குமுளூர். இந்தக் கிராமத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் பால தண்டாயுதபாணி சுவாமி. ஒரு காலத்தில், கண்டமங்கலம் எனும் கிராமத்தில்தான் பாலதண்டாயுதபாணியின் விக்கிரகம் இருந்தது. அப்போது, திடீர் வெள்ளத்தில் அந்த ஊரே மூழ்கும் நிலையில்..... ஊர்மக்கள் சிலர், பாலதண்டாயுதபாணியின் விக்கரகத்தை எடுத்துக் கொண்டு, அந்த ஊரை விட்டுக் கிளம்பிச் சென்றனர். வழியில் சிறியதொரு மலையின் அடிவாரத்தில் அனைவரும் இளைப்பாற..... அசரீரியாக வந்த உத்தரவையடுத்து, மலையில் சிறிதாகக் கோயில் அமைத்து, விக்கரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள், என்கிறது ஸ்தல வரலாறு! திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், இந்தத் தலத்துக்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டுள்ளார். அத்துடன், இந்தக் கோயிலின் திருப்பணியையும் கும்பாபிஷேகத்தையும் செய்தருளியுள்ளார். பழநி, பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் ஆகிய தலங்களில் உள்ளது போல், இந்தத் தலத்திலும் முருகக் கடவுள் மேற்கு நோக்கியபடி சன்னதி கொண்டிருக்கிறார். எனவே, இது பழநியம்பதிக்கு நிகராக உள்ளதால் கீழ்ப்பழநி என்று அழைக்கப்படுகிறது. பழநிக்கு வருவதாக வேண்டிக் கொண்டு, செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து வழிபட, தீராத கவலைகளும் தீரும் என்பது ஐதீகம். மலையின் வழி நெடுக, வள்ளி-தெய்வானையுடன் முருகன், அவ்வைக்கு காட்சி தந்த முருகன், விநாயகர், பாம்பாட்டியுடன் கூடிய நாகம், வேடன், காவடியான் என சிலைகளைக் காண முடிகிறது. இவை, முருகனின் அருளால் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதால், பக்தர்கள் பலரும் நேர்த்திக்கடனாக வைத்த சிலைகள்! விநாயகர், சிவ பெருமான், இடும்பன் மற்றும் நவகிரகங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. பல ஊர்களில் இருந்தும் பால் குடம் ஏந்தியும் காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து குமுளூருக்கு டவுன் பஸ் வசதி உள்ளது.