கோவை -சென்னை சாலையில், கோவையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அவிநாசி கரணாம்பிகை சமேத அவிநாசியப்பர் ஆலயம். சுந்தரர், முதலை உண்ட பாலகனை மீண்டும் உயிருடன் வரவழைத்த அற்புதத் தலம் இது! எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே.... என்று துவங்கும் பதிகத்தைப் பாடி, கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே என முடிக்கும்போது, முதலையின் வாயில் இருந்து உயிர் பிழைத்து வந்தான் சிறுவன். குளத்துக்கு அருகில் சுந்தரருக்கு சன்னதியும் உண்டு. பங்குனி மாதத்தில், பாலகனை மீட்ட வைபவம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. சுந்தரரின் பதிகத்தைப் பாடி, ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு நெய்விளக்கேற்றி வழிபட்டால், குழந்தைகள் கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்!