கிருஷ்ண ஜெயந்தியன்று தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை, எனவே கிருஷ்ண ஜெயந்தியன்று, வீட்டைச் சுத்தப்படுத்தி, அலங்கரித்து, குழந்தை கண்ணனை வர வேற்கும் விதத்தில், வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், அவனது பாதச்சுவடுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம். இதனால், கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரகோலம் (ரங்கோலி), மலர் அலங்காரம், பூக்கோலம் இடுவர். அதை நமது இல்லங்களிலும் செய்து கிருஷ்ணரை வரவேற்க வேண்டும். இதனால் கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து நடந்து வந்து, பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக்கொள்கிறார் என்பதாகும்.
ஸ்ரீ கிருஷ்ண பாதம்
உலகினை அளந்திட்ட பாதம்! உயிர்களுள் இழைந்திட்ட பாதம்! அலர்மேலு அணைத்திட்ட பாதம்! அணைத்துயிர் பிணைத்திட்ட பாதம்! புலர் காலை துயில் எழுப்ப புவியுயிர் மலரிட்ட பாதம்! மலர் மங்கை ஆண்டா ளுமே மகிழ்வுடன் மனம் தொட்ட பாதம்!
பவள வண்ணன் பரிமள ரங்க பாதம்! பாண்டவ தூதனின் கல்யாண நாரயண பாதம்! தவமென வரம் தரும் வேங்கட கிருஷ்ண பாதம்! தர்மத்தின் வழி நின்ற நாராயணர் பாதம்! நவமணி ஒளி தரும் லட்சுமி வராஹ பாதம்! சயனப் பெருமாள் சாந்த நரசிம்ம பாதம்! கவலைகள் களைந்திடும் தெய்வநாயகன் பாதம்! வெண்சுடர்ப் பெருமாள் பேரருளாளன் பாதம்!
சத்திய மூர்த்தியின் ஜகந் நாத பாதம்! நீலமுகில் வண்ணன் ஆதிப்பிரான் பாதம்! நித்திரை அழகுடை வைகுந்த பாதம்! நீர் வண்ண நாயக கள்வரின் பாதம்! வைத்த மாநிதி வடபத்ர சாயீ பாதம்! கோலவில் ராமனின் புண்டரீ காட்சன் பாதம்! வித்தக பெரிய பெருமாள் சௌரிராஜ பாதம்! சொன்ன வண்ணம் செய்த நம்பெருமாள் பாதம்!
தாமரைக் கண்ணுடையன் தேவிப் பெருமாள் பாதம்! தானென துனணவரும் நந்தா விளக்கு பாதம்! தாமரையாள் கேள்வன் வேதராஜ பாதம்! வயலாளி மணவாள கோபால கிருஷ்ண பாதம்! ராமஜெனகை நாராயண சலசயனர் பாதம்! நம்பிக்கை ஒளியூட்டும் நான் மதியர் பாதம்! வாமனனாய் உருவெடுத்த உலகளந்தோன் பாதம்! வளங்கள் பெற வரங்கள் தரும் ஸ்ரீவாரி பாதம்!