Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சமணரைக் கழுவேற்றிய படலம்! சமணரைக் கழுவேற்றிய படலம்!
முதல் பக்கம் » 64 திருவிளையாடல்
வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 மார்
2011
05:03

சோழநாட்டிலுள்ள வணிகர் ஒருவரின் வாழ்வில் தன் விளையாடலைச் செய்தார் சிவபெருமான். அந்த வணிகருக்கு திருமணமாகி, நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது. வணிகர் தனது மகளை, மதுரையில் வசிக்கும் தனது தங்கை மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக அவள் இளமையாக இருக்கும்போதே பேசி முடித்திருந்தார். தங்கையும், அவளது மகனும் கூட இதற்கு சம்மதம் தெரிவித்தனர். அந்தப் பெண் வயதுக்கு வந்துவிட்டாள். அந்த வாலிபனும் இளம் காளையானான். ஆனால், தன் மாமா மகளை மணப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை மீறி, மதுரையில் வசித்த இன்னொரு பணக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொண்டான். மாமா மகள் அதிர்ச்சியடைந்தாள். மாமனார் மருமகனிடம், என் மகளை மணப்பதாக வாக்குறுதி அளித்து அதை மீறி விட்டாயே, என தங்கை மகனைக் கண்டித்தார். அதனால் என்ன மாமா! உங்கள் மகளையும் திருமணம் செய்து கொள்கிறேன், இரண்டாம் தாரமாக. கொஞ்சம் பொறுங்கள், என்றான். இந்தக் கவலையிலேயே வணிகரும், அவரது மனைவியும் இறந்து விட்டனர். அனாதையாகி விட்டாள் அந்த அபலைப் பெண். அவள் பட்ட துயரத்திற்கு அளவேயில்லை. இருப்பினும், சில நல்ல உறவுக்காரர்கள் அவளுக்கு ஆறுதல் கூறி, பெண்ணே! அத்தை மகனை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை. உன் விருப்பமும், உன் தந்தையின் விருப்பமும் அதுவாகத்தானே இருந்தது, என்றனர்.

வணிகர் மகள் ஊர் பஞ்சாயத்தில், தன் அத்தை மகனின் வாக்குறுதிப்படி, தன்னை இரண்டாம் தாரமாக அவருக்கே மணமுடித்து வைக்கவேண்டுமெனக் கோரிக்கை வைத்தாள். பஞ்சாயத்திலுள்ள உறுப்பினர்களும், அனாதையான அவள் மீது இரக்கம் கொண்டு, அந்தப் பையனையே அவளுக்கு மணம் முடித்துவைக்க தீர்மானம் நிறைவேற்றி மதுரையில் இருந்த அவனுக்கு ஓலை அனுப்பினர். அந்தப் பையன் சோழநாட்டுக்கு வந்து அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு, வண்டியில் ஊர் திரும்பினான். அவனுடன் அந்தப் பெண்ணின் உறவினர்கள் சிலரும் வந்தனர். திருப்புறம்பியம் என்ற ஊருக்கு அவர்கள் வந்தார்கள். அவ்வூர் பந்தல், தோரணம், விளக்குகள் என விழாக்கோலம் பூண்டிருந்தது. சம்பந்தர் அங்கு வந்திருப்பதாகவும், அவரை வரவேற்கவே ஊர் விழாக்கோலம் பூண்டுள்ளதையும் அறிந்தனர். உடனே வண்டியில் வந்த எல்லாரும், இரவில் அங்கு தங்கி, மறுநாள் சம்பந்தரை தரிசித்து விட்டு மதுரைக்கு பயணத்தைத் தொடரலாம் என முடிவெடுத்தனர். ஒரு வன்னி மரத்தடியில் தங்கி களைப்பில் அயர்ந்து உறங்கினர். அப்போது ஒரு பாம்பு அங்கு வந்து வணிகரின் மருமகனைத் தீண்டி விட்டது. அவன் அலறினான். எல்லோரும் விழித்து பார்த்தபோது அவன் துடிதுடித்து இறந்தான். வணிகர் மகள் அழுது புரண்டாள். இரண்டாம் தாரமாகவாவது உங்களுடன் வாழலாம் என இருந்தேனே! இப்போது என்ன செய்வேன்? என தரையில் விழுந்து புரண்டாள். பொழுது விடிந்தது. ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்கு இந்த தகவல் கிடைத்து விட்டது. அவர் வன்னிமரத்தடிக்கு வந்தார். சம்பந்தரின் பாதங்களில் விழுந்து அந்தப் பெண் கதறினாள். பெற்றவர்களை இழந்த நான் கணவராக இருந்தவரையும் இழந்தேனே என அவள் வருந்தி அழுதது கண்டு, சம்பந்தரே உருகிப் போனார்.

கவலைப்படாதே மகளே! அந்த சிவபெருமான் தேவர்களுக்காக ஆலகால விஷத்தை உண்டு அவர்களைக் காத்தது போல, உன்னையும் காப்பார், என்றார். அந்த சிவனை நினைத்து, இறைவா! இவனை நம்பித்தானே இரண்டு சுமங்கலிகள் உள்ளனர்! அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உன் கடமை இல்லையா? என உருக்கமாக வேண்டினார். என்ன ஆச்சரியம்! அவனது உடலில் இருந்த விஷம் படிப்படியாக இறங்கியது. அவன் உயிர் பெற்று எழுந்தான். சுற்றியிருந்தவர்களும், மணப்பெண்ணும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மகனே! நீ இந்தப் பெண்ணை என் முன்னிலையிலேயே திருமணம் செய்து கொள், என்றார். அதற்கு அந்த பையன், ஐயனே! என் உற்றார் மதுரையில் உள்ளனர். அவர்களை சாட்சியாக வைத்து மணந்தால்தானே நன்றாக இருக்கும், என்றான். அதற்கு சம்பந்தர்,இவ்வூர் சிவனே உன்னைக் காத்தார். அதற்கு காரணம் இந்தப் பெண் உன் மீது கொண்ட அன்பு தான். உனக்கு சாட்சி தேவை என்றால் இந்த வன்னிமரத்தையும், இவ்வூர் சிவாலயத்திலுள்ள கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கின்றன. இதை விட வேறென்ன சாட்சியைத் தேடப்போகிறாய்? நான் சொல்வதைத் தட்டாதே. அவள் கழுத்தில் தாலிகட்டு, என்றார். வணிகன் மகன் அதற்கு மேல் மறுத்துப் பேசவில்லை. சம்பந்தரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தான். திருமணம் இனிதே நடந்தது. அவர்கள் அவரிடம் ஆசிபெற்று மதுரை சென்றனர். வணிகர் மகள் தன் தந்தை இறந்து போனதால் அவரது முழு செல்வங்களையும் இங்கு கொண்டு வந்திருந்தாள். எனவே, மூத்த மனைவியும், அத்தையும் அவளை அன்போடு வரவேற்றனர். பணத்துக்கு எங்குமே மதிப்பு தானே! ஆனால், இந்த சந்தோஷம் வெகுநாள் நீடிக்கவில்லை. தன் இரண்டாம் மனைவி கொண்டு வந்த செல்வத்தைக் கொண்டு, அந்த இளைஞன் தன் வியாபாரத்தை பலமடங்கு பெருக்கினான்.

அவர்களது இனிய இல்லறத்தில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், மூத்த மனைவி ஏராளமான குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒருவனுக்கு ஒரு மனைவி என்றால் தான் இன்பம்! இன்னொருத்தி பக்கம் தலை வைத்து விட்டால், அவனுக்கு அன்றே நிம்மதி போய்விடும்! இந்த இளைஞனோ, சூழ்நிலைக் கைதியாய் இரண்டாம் திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானவன். இரண்டாம் மனைவிக்கு குழந்தை பிறக்காத வரையில் பிரச்னை இல்லாமல் இருந்தது! ஆனால், பிறந்தவுடன் மூத்தவளின் பிள்ளைகள் முகம் சுழிக்க ஆரம்பித்து விட்டார்கள். இத்தனைக்கும், சிற்றன்னை கொண்டு வந்த பொருளைக் கொண்டு விருத்தியடைந்த வியாபாரத்தில் கிடைத்த பலனை அவர்களும் அனுபவிக்கத் தான் செய்தார்கள். சிற்றன்னையும், தன் கணவனுக்காக அதைப் பொறுத்துக் கொண்டாள். பொறுமையின் சின்னம் தான் அவள்! ஆனால், இரக்கமுள்ளவர்களைத் தான் உலகம் மதிக்காதே! அந்த இரக்கத்தை ஏமாளித்தனம் என எண்ணி ஏறி மிதிக்குமே! அந்த கதிக்கு ஆளானாள் இரண்டாம் மனைவி. மூத்தவளின் பிள்ளைகள் செலவாளிகள் மட்டுமல்ல! பணம் தந்த தைரியத்தால் மகாகோபக்காரர்களாகவும், முரட்டுப்பிள்ளைகளாகவும் இருந்தனர். இரக்கமுள்ள இரண்டாம் மனைவியின் மகனோ, அம்மாவைப் போல சாதுவாக இருந்தான். பெரியம்மா பெற்ற பிள்ளைகள், அந்த சாதுப்பிள்ளையிடம் வம்பு இழுப்பார்கள். சண்டை வலுக்கும். இப்படியாக, குடும்பத்தில் நிம்மதி போனது. இரண்டாம் மனைவி தனக்கும், தன் பிள்ளைக்கும் இழைக்கப்டும் அநீதி கண்டு விம்முவாளே தவிர, வணிகத்தில் கவனம் செலுத்தும் தன் கணவனிடம் இதுபற்றி சொல்லவில்லை. சொன்னால் அவனது நிம்மதி போய்விடக்கூடாதே என நினைத்தாள். துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு அமைதி காத்தாள்.

ஒருநாள், சண்டை வேறுமாதிரியாக திசை மாறியது. இரண்டாம் மனைவிக்கு அந்த வீட்டில் இருக்க உரிமையே கிடையாது என்பது போல பேச்சு எழுந்துவிட்டது. மூத்தவள் தன் பிள்ளைகளுக்கு ஆதரவாக இரண்டாமவளை அழைத்து, ஏய்! உனக்கும், இந்த வீட்டுக்கும் என்னடி சம்பந்தம் இருக்கிறது? நீ இந்த வீட்டுக்கு ஒழுங்காக வந்தவளா! பின்வாசல் வழியாக வந்தவள் தானே! என் புருஷன் உன் அத்தை மகன் என்பதால், அவரை மயக்கி எப்படியோ இந்த வீட்டுக்குள் வந்துவிட்டாய்! உனக்கும், அவருக்கும் கல்யாணம் நடந்துவிட்டதாக கதை கட்டினாய்! திருப்புறம்பியம் கிராமத்தில் வைத்து கல்யாணம் நடந்ததாகச் சொன்னாயே! அதற்கு என்னடி ஆதாரம்? நீ முறையாக அவரை மணக்க வேண்டுமென்றால் மதுரைக்கல்லவா அழைத்து வந்திருக்க வேண்டும்! போடி போ! ஒழுங்கற்றவளே! என்று வாய்க்கு வந்தபடி திட்டினாள். தனக்கு சம்பந்தப்பெருமான் முன்னிலையில் திருமணம் நடந்ததை எப்படி அவள் நிரூபிக்க முடியும்? ஊர் பஞ்சாயத்தாரிடம் சென்றாலும், நீ ஏதோ ஒரு ஊரில் திருமணம் நடந்ததாகச் சொல்கிறாய், அதற்கு சாட்சியாக யாரையாவது அழைத்து வா, என்று தானே சொல்வார்கள். என்ன செய்வது? என்று சிந்தித்தவளின் நினைவில்,ஆம்... சாட்சி இருக்கிறது. சம்பந்தப்பெருமான் சில சாட்சிகளைச் சொன்னாரே! வன்னிமரமும், கிணறும், சிவ லிங்கமும் சாட்சியாக இருந்தனவே. இவற்றை விட சிறந்த சாட்சி என்ன! என எண்ணியவளாய், எனக்கு இவையெல்லாம் சாட்சியாக இருந்தன. சீர்காழி திருக்குமாரன், பார்வதியிடமே பால் குடித்த பாலகன் திருஞானசம்பந்தரே எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார், என பெருமிதத்துடன் சொன்னாள் இரண்டாம் மனைவி.

ஏய் நம்புகிற மாதிரி கதை சொல்லு! லிங்கமும், கிணறும், வன்னிமரமும் பேசாது என்கிற தைரியத்தில் தான் இப்படியெல்லாம் பொய் சொல்கிறாய். நீ என் கணவரை அம்மி மிதித்து அக்னி சாட்சியாக திருமணம் செய்தாயா? இந்தக் கேள்விக்கு முதலில் பதில் சொல். இல்லாவிட்டால், நீ காதில் பூ சுற்றுவது போல கதை சொல்கிறாயே! வன்னி, கிணறு, லிங்கம் என்று...அவற்றை சாட்சிக்கு இந்த மதுரைக்கு வரவழைக்க வேண்டும். அப்படி செய்துவிட்டால், என் புருஷனுக்கும்,உனக்கும் திருமணம் நடந்ததை ஒப்புக் கொள்கிறேன், என்றார். திருப்புறம்பியத்திலுள்ள வன்னியும், கிணறும், லிங்கமும் சாட்சிக்கு மதுரைக்கு எப்படி வரும்? கடுமையான நிபந்தனை அல்லவா! இளையவளால் கண்ணீர் தான் வடிக்க முடிந்தது. ஆனாலும், நம்பிக்கையுடன் சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்றாள். பொற்றாமரைக்குளத்தில் நீராடினாள். சுவாமி சன்னதிக்குச் சென்று, இறைவா! எனக்கு வந்த சோதனையைப் பார்த்தாயா! தாய், தந்தையை இழக்க வைத்து அனாதையாக்கினாய்! இளமையிலேயே என்னை அவருக்கு திருமணம் செய்து வைக்க செய்த முடிவை மாற்றி, இன்னொருத்தியை அவருக்கு துணைவியாக்கினாய். போராடி பெற்ற வாழ்க்கையை மீண்டும் பறிக்கப் பார்க்கிறாய். நானும் என் பிள்ளையும் என்ன செய்வோம்! சரி...இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. இனி திருப்புறம்பியத்தில் எனக்கும் என் கணவனுக்கும் நடத்தி வைத்த திருமணம் நிஜமென்றால், அங்கே சாட்சிக்காக உன் லிங்கவடிவையும், வன்னியையும், கிணறையும் வைத்தாரே ஞானசம்பந்தர்! அந்த மூன்றும் இங்கே எழுந்தருள வேண்டும்! என்றாள். இளையவளின் உருக்கமான கண்ணீர், சுந்தரேஸ்வரப் பெருமானின் மனதையே கரைத்து விட்டது. அப்போது அசரீரி ஒலித்தது.

மகளே! வருந்த வேண்டாம். உன் திருமணத்திற்கு சாட்சியாகக் கேட்ட மூன்றும் இந்த கோயிலின் வடகிழக்கே தோன்றியுள்ளன. முதலில் நீ போய் அவற்றைப் பார். பின்னர், உன் மூத்தவளை அழைத்து வந்து காட்டு! என்றது. அவள் ஓடிச்சென்று அவற்றைப் பார்த்து வணங்கினாள். ஆனந்தக் கண்ணீருடன் வீட்டுக்கு ஓடினாள். மூத்தவளை அழைத்து வந்தாள். அவள் அந்த அதிசயத்தைக் கண்டு விக்கித்து நின்றுவிட்டாள். ஊராரும் அதைப் பார்த்து சிறியவளின் பக்தியைப் பாராட்டினர். இந்த தகவல் அவளது கணவனுக்கும் தெரியவே, இளையவளைத் தனக்கே தெரியாமல் அவமானப்படுத்தியதற்காக மூத்தவளை கண்டபடி திட்டினான். அவள் தலை குனிந்து நின்றாள். அவளை ஒதுக்கி வைக்கப் போவதாகவும், இனி அவள் தன் மனைவியே அல்ல என்றும் அவன் ஊரார் முன்னிலையிலேயே சொன்னான். இரக்கம் மிக்க இரண்டாம் மனைவி, அன்பரே! அவ்வாறு சொல்லாதீர்கள்! அக்கா என்னை திட்டியதால் தான், இந்த அதிசயம் நிகழ்ந்தது. இதெல்லாம் அந்த சோமசுந்தரரின் திருவிளையாடல் என்பது புரியவில்லையா! இந்த விளையாடல் நிகழக்காரணமே இந்த சகோதரி தான்! அவர்களிடமும் நீங்கள் வழக்கம்போல் அன்புடன் இருக்க வேண்டும், என்றாள். இளையவளுக்கு துன்பமிழைத்தும், தன் மேல் அவள் அன்பு காட்டியது கண்டு தன்னை மன்னிக்க வேண்டினாள். மூத்தவளின் பிள்ளைகளும் தங்கள் சித்தியின் அன்பு கண்டு வெட்கத்தில் தலை குனிந்தனர். அதன்பின், அவர்கள் தங்கமான பிள்ளைகள் ஆயினர். மீண்டும் ஒற்றுமை ஏற்பட்டது அந்தக் குடும்பத்தில்! திருவிளையாடல் புராணம் படித்தால் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம். உங்கள் அனைவர் இல்லங்களிலும் செல்வவளம் பெருகட்டும்!

 
மேலும் 64 திருவிளையாடல் »
பெரிய தர்மம் செய்தால் தான் இறை ஆசி கிடைக்கும் என்பதில்லை. சிறிய தொண்டு கூட கருணையைப் பெற்றுத் தரும். ... மேலும்
 
temple news
ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் ... மேலும்
 
temple news
இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது ... மேலும்
 
temple news
மதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் ... மேலும்
 
temple news
குலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar