பதிவு செய்த நாள்
21
ஆக
2013
04:08
கோடிக்கணக்கான சிவலிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களைவிட, பாதரச லிங்கத்தை பூஜிப்பதன் மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் பெற முடியும் என்கின்றன சாஸ்திர புராணங்கள். பிரம்மபுராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் பாதரச லிங்கத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான். யார் வேண்டுமானாலும் பாதரச லிங்கத்தை பூஜித்து எல்லா பவுதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை அடைய முடியும். பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் பாதரலிங்கத்தை விதிப்படியும் முறைப்படியும் ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்!
சிவ நிர்ணய ரத்னாகரம் என்ற நூலின் கருத்துப்படி கல்லாலான சிவலிங்கத்தை பூஜிப்பதைவிட கோடி மடங்கு நற்பலன், தங்கம் வேயப்பட்ட சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். அதைவிட பன்மடங்கு பலன் ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். ஆனால் அதைவிட பலப்பல மடங்கு பலன், பாதரச லிங்கத்தின் பூஜை அல்லது தரிசனத்தாலேயே கிடைக்கும். பாதரச லிங்கத்தைவிட உயர்வான சிவலிங்கம் உலகில் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை!
சிவபுராணத்தின் கூற்றுப்படி, பசு வதை செய்த பாவியும், நன்றிகெட்ட மனிதனும், வீரனைக் கொலை செய்தவனும், கர்ப்பத்தலுள்ள சிசுவைக் கொன்றவனும், தாய் தந்தையரைக் கொன்றவனும்கூட, பாதரச லிங்கத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும்! வாய்விய சம்ஹிதையின் கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி பாதரச லிங்கத்தை பூஜித்து வழிபடுவதுதானாம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தவரைவிட, பாதரசலிங்கத்தை தரிசித்த அதிர்ஷ்டசாலியையே நான் அதிகம் விரும்புகிறேன்! என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார்!
சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் பாதரசத்தை திடப்பொருளாக்கி, அதை லிங்கமாக்கி பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ரசார்ணவ தந்திரம் என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை பாதரசலிங்கத்தை பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன. பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், பாதரச லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது.
ரசசமுச்சயம் என்ற நூலில், பாதரசலிங்கத்தைத் தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்தத் தரவரத்திற்கோ, உலோகத்திற்கோ சக்தியில்லை. ஏனெனில் அவை எல்லாமே தண்ணீரில் கரைந்து போகக்கூடியவை; வெப்பத்தால் காய்ந்து போகக்கூடியவை. ஆனால் பாதரசம் ஒன்றுதான் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை.
பாதரசத்தை விசேஷச் செயல்பாடுகள் மூலம் திடபதார்த்த மாக்குவதால், அது அமிர்தமாகி விடுகிறது. அப்படி திடப்படுத்தப்பட்ட பாதரசத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி, அந்த லிங்கத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. பாதரசம் நோய்களை அகற்றி புத்துயிரும் புது இளமையையும் கொடுக்கிறது. அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது. சாதாரணமாக பாதரசத்தில் அழுத்தங்கள் நிறைய இருக்கும். அதை புடம் போட்டு அசுத்தங்களை அகற்றிய பிறகுதான் அது திடபதார்த்தமாக்கப்படுகிறது. அதிலிருந்து வடிவமைக்கப்படும் சிவலிங்கம் முழுப் பலன்களையும் அளிக்கவல்லது. விதிமுறைப்படி தினந்தோறும் அனுஷ்டானங்கள் செய்து பூஜை, அர்ச்சனை, ஆரத்தி முதலிய சேவைகள் செய்து ஆராதிக்கக்கூடியவர்கள் மட்டும் பாதரச லிங்கத்தை வீட்டில் ஸ்தாபிக்க வேண்டும். வெறும் லிங்கத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுவதால் மட்டும் பலன் கிடைப்பதில்லை!