பதிவு செய்த நாள்
27
ஆக
2013
10:08
திருவாரூர்: விஜயபுரத்தில் ரேணுகாதேவி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்றுக்காலை வெகுவிமரிசையாக நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். திருவாரூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான விஜயபுரம் ரேணுகாதேவி அம்மன் கோவிலில், கடந்த, 2001ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்கு பின், தற்போது அம்மன், சிவன், விநாயகர், சுப்பிரமணியர், மாதங்கி, ஐயப்பன் ஆகிய சன்னதிகளுக்கு, பல லட்சம் ரூபாய் மதிப்பில் உபயதாரர்கள் மூலம் திருப்பணி நடத்தப்பட்டு, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த, 23ம் தேதி மாலை, 6 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டது. நேற்றுக்காலை, ஆறு மணிக்கு, நான்கு கால பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, 9.15 மணிக்கு மகா தீபாராதனையும், 9.45 மணிக்கு கடங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது. காலை, 10 மணிக்கு கோவிலின் ராஜகோபுரம், பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 10.15 மணிக்கு அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் செய்யப்பட்டது. இரவு, 7 மணிக்கு அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், திருவாரூர் நகராட்சி தலைவர் ரவிச்சந்திரன், கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கி தலைவர் மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாட்டை கோவில் நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் உள்பட அலுவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.