பதிவு செய்த நாள்
28
ஆக
2013
10:08
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 2,000 போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாகை அடுத்த, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுத் திருவிழா, நாளை, கொடியேற்றத்துடன் துவங்கி, செப்., 8ம் தேதியுடன் நிறைவடைகிறது. விழாவில், பக்தர்கள் பாதுகாப்பிற்காக, மாவட்ட காவல் துறை சார்பில், திருடர்களைக் கட்டுப்படுத்தவும், குற்ற நிகழ்வுகளைத் தடுக்கவும், 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேவாலயம், கடற்கரை மற்றும் அனைத்துப் பகுதிகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படுகிறது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த, 500 போலீசார், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த, 1,200 போலீசார், ஊர்காவல் படையினர், 500 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் பெண் கமாண்டோ போலீசார் ஆகிய ஐந்து அணியினரும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.