பதிவு செய்த நாள்
05
செப்
2013
11:09
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், விநாயகர் சிலை ஊர்வலம் குறித்து டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட அகரம், பரங்கிப்பேட்டை, பு.முட்லூர், அரியகோஷ்டி, சலங்குக்கார தெரு உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து சிலைகள் சி.புதுப்பேட்டை கடலில் கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். பரங்கிப்பேட்டை பகுதி முஸ்லிம் பகுதியாக இருப்பதால் பிரச்னை ஏற்படாமல் இருக்க, நேற்று பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., ராஜாராம் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், ஐக்கிய ஜமாத் தலைவர் ஹமீது அப்துல் காதர், ஹமீது கவுஸ், சரவணன், புவியரசன், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், விநாயகர் சிலைகளை வரும் 11ம் தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்வது, சிலை அமைக்கும் இடத்தில் கீற்றால் பந்தல் அமைக்கக் கூடாது, சிலை ஊர்வலத்தின்போது முஸ்லிம் மசூதிகள் இருக்கும் இடங்களில் மேளம் தாளம் முழங்காமல், வெடி வெடிக்காமல் செல்ல வேண்டும், 12 பேர் குழு அமைத்து சுழற்சி முறையில் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.