பதிவு செய்த நாள்
06
செப்
2013
10:09
கும்மிடிப்பூண்டி: பெருங்கருணை நாயகி உடனுறை அவிநாசியப்பர் கோவில் அமைப்பதற்கான கால்கோள் விழா நடந்தது. கும்மிடிப்பூண்டி அடுத்த, ஐயர்கண்டிகை கிராமத்தில் இருந்த, சிவன் கோவில், சிதிலமடைந்து, கால ஓட்டத்தில், தடம் தெரியாமல் மறைந்து போனது என, கூறப்படுகிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த, இரு சிவ லிங்கங்கள், நந்தி, விஷ்ணு, துர்கை, வீரபத்திர காளி கற்சிலைகள், அப்பகுதியில் கண்டு எடுக்கப்பட்டன. சைவ திருமுறை நூலில், கயிறு சார்த்தி பார்த்து, கிடைக்க பெற்ற லிங்கத்திற்கு அவிநாசியப்பர் என, பெயரிடப்பட்டது. இதையடுத்து, ஐயர்கண்டிகை கிராமத்தில், பெருங்கருணை நாயகி உடனுறை அவிநாசியப்பர் கோவில் அமைக்க, கிராம மக்கள் முடிவு செய்தனர். கோவில் அமைக்கும் திருப்பணிக்கான கால்கோள் விழா, நேற்று நடந்தது. யாகம் வளர்க்கப்பட்டு, புனித நீர் ஊற்றி, கால்கோள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.