பதிவு செய்த நாள்
06
செப்
2013
11:09
புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டான்ட் அருகில் உள்ளது ஸ்ரீ சங்கீத மங்கள விநாயகர் கோவில். பஸ் ஸ்டான்ட் வியாபார ஸ்தாபனங்களின் உரிமையாளர்கள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் நிதி உதவியுடன் ரூ.20 லட்சம் செலவில் திருப்பணி வேலைகள் துவங்கி கடந்த 6 மாதமாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 8ம் தேதி காலை 8.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று 6ம் தேதி யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகிறது. காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தன பூஜை, வாஸ்த்து சாந்தி, மிருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், கடஸ்தாபனம், பூர்ணாஹூதியுடன் முதல்கால பூஜை நிறைவடைகிறது. நாளை 7ம் தேதி இரண்டு மற்றும் மூன்றுகால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 8ம் தேதி காலை 6 மணிக்கு கோ பூஜை, கஜ பூஜை, லக்ஷ்மி பூஜை, நாடி சந்தானம் பூர்ணாஹூதியுடன் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைகிறது. தொடர்ந்து 8 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. 8.30 மணிக்கு மேளதாளங்கள், வேதமந்திரங்கள், பெண்களின் மங்கல குரவைகள் ஒலிக்க மூலஸ்தான கோபுரத்தின் மீது வைக்கப்பட்டுள்ள தங்க கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்படுகிறது. தொடர்ந்து 9.30 மணிக்கு விநாயகருக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது.