புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. திண்டிவனம்- புதுச்சேரி சாலை பஞ்சவடீயில், 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஜெயமங்கள வலம்புரி விநாயகருக்கு நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 1008 சங்கு அபிஷேகம் நடந்தது. அதையொட்டி, காலை மூலவர் விநாயகருக்கு சந்தனம், மஞ்சள், பன்னீர், பால் ஆகிய மங்கள திரவியங்களால் அபிஷேகம் செய்து விக்கப்பட்டது. பின்னர், 1008 சங்கு அபிஷேகம், ஹோமம், கணபதி மூலமந்திரம், லட்சார்ச்சனை நடந்தது. விநாயகர் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு ஆலயத்திற்குள் சுவாமி புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் கோதண்டராமன், செயலர் நரசிம்மன் மற்றும் பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்திருந்தனர்.