பதிவு செய்த நாள்
10
செப்
2013
10:09
கொளத்தூர்: சுற்றுச்சூழலை பாதிக்காத இளநீர் மற்றும் தேங்காய்களால் உருவான வித்தியாசமான விநாயகர் சிலையை பக்தர்கள் ஆர்வத்துடன் வணங்கிச் செல்கின்றனர். சென்னை கொளத்தூர் காவல் மையம் எதிரே, செங்குன்றம் சாலை சந்திப்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 17 அடி உயர விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதை, இந்து முன்னணி, இந்து நல்லிணக்க பேரவை மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் ரெட்டை ஏரி கிளை ஆகியவை இணைந்து இந்த அமைத்துள்ளன. வித்தியாசமான அந்த சிலை 3 ஆயிரம் தேங்காய் மற்றும் 800 இளநீரால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், நார் அகற்றப்பட்டு பூஜைக்காக பயன்படுத்தப்படும் நெய்த்தேங்காய் போன்ற 80 தேங்காய் மூலம் தந்தம் அமைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான அந்த சிலையை கொளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து, வணங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து இந்து நல்லிணக்க பேரவையின் பொறுப்பாளர் யுவராஜ் கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதிப்பு, போக்குவரத்து பிரச்னை ஆகியவற்றைத் தவிர்க்கும் வகையில் வித்தியாசமான விநாயகர் சிலையை அமைக்க பரிசீலித்தோம். அதனால் உருவானதுதான் இந்த சிலை. வடிவமைப்பாளர்கள் 9 பேர் தலைமையில், விழாக்குழுவைச் சேர்ந்த 10 பேர் உதவியுடன், கடந்த 7 நாட்களில் சிலை உருவாக்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் இதை ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் விடப்போவதில்லை. 15ம் தேதி பூஜைகள் முடிந்ததும், சிலை கவனமாக பிரிக்கப்பட்டு, அதில் உள்ள தேங்காய் மற்றும் இளநீர் ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். விழாவையொட்டி 7 நாட்களும் ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன், 3 வேளை அன்னதானம் மற்றும் 15ம் தேதி சமபந்தி விருந்து ஆகியவை நடக்கும்.