பதிவு செய்த நாள்
14
செப்
2013
10:09
தூத்துக்குடி : தமிழக அளவில் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில் ஐந்து கருடசேவை புரட்டாசி சனிக்கிழமை விழா வரும் 21ம் தேதி நடக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற வைகுண்டபதி பெருமாள் கோயிலில் நடக்கும் அனைத்து விழாக்களும் பக்தர்கள், உபயதாரர்களின் மிகுந்த ஒத்துழைப்போடு மிகப் பெரிய அளவில் நடந்து வருகிறது. புரட்டாசி சனிக்கிழமை ஐந்து கருடசேவை விழா வைகுண்டபதி பெருமாள் கோயிலில் நடக்க ஆரம்பித்தவுடன் தமிழக அளவில் இந்த விழா பெரிய அளவில் பேசப்படும் நிலைக்கு போய் விட்டதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு விழாவில் சிறப்பு அதிக ரித்து கொண்டே இருப்பதால் பக்தர்களின் வருகையும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை நாட்களில் கோயிலுக்குள் செல்ல முடியாத அளவிற்கு பக்தர்களின் பெருங் கூட்டம் காலையிலும், மாலையிலும் மிக அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா வரும் 21ம் தேதி நடக்கிறது. இதனை ஒட்டி அன்று காலை விஸ்பரூபதரிசனம், கோபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. அதனை தொடர்ந்து வைகுண்டபதி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. முதல் சனிக்கிழமை அன்று பெருமாள் சத்தியநாராயண பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அலங்காரங்களை அர்ச்சகர் வைகுண்டராமன் செய்கிறார். இரண்டாவது சனிக்கிழமை வரும் 28ம் தேதி வைகுண்டபதி பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்திலும், மூன்றாம் சனிக்கிழமை அக்டோபர் 5ம் தேதி பெருமாள் ஸ்ரீமன் நாராயணன் அலங்காரத்திலும், நான்காவது சனிக்கிழமை அக்டோபர் 12ம் தேதி பெருமாள் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஒவ்வொரு அலங்காரத்திலும் பெருமாள் மிக நேர்த்தியான அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். புரட்டாசி கடைசி சனிக்கிழமையான அக்டோபர் 12ம் தேதி ஐந்து கருடசேவை விழா நடக்கிறது. வைகுண்டபதி, ரெங்கநாதர், வரதராஜர், ஜெகநாதர், சீனிவாசர் ஆகிய ஐந்து அவதாரங்களில் பெருமாள் ஒரே சேர பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் சுவாமி ரதவீதி உலா வருதல் நடக்கிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் மிக கடுமையாக இருக்கும் என்பதால் அதற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்படுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி கோயிலில் பல இடங்களில் திருப்பதி உண்டியல் வைக்கப்படுகிறது. ஐந்து கருடசேவை விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அதற்கு ஏற்ப வசதிகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. விழாவை ஒட்டி கோயில் பிரகாரத்தில் உள்ள பால ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகளை அர்ச்சகர் பாலாஜி செய்கிறார். மஞ்சள்காப்பு, வெண்ணைக்காப்பு உள்ளிட்ட அலங்காரங்களில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தக்கார் கசன்காத்த பெருமாள், அர்ச்சகர் வைகுண்டராமன் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.