ஆர்.கே.பேட்டை:கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு பால்குட அபிஷேகம் செய்யப்பட்டது. ஆர்.கே.பேட்டை அடுத்த, பத்மாபுரம் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நவகிரக ஹோமம், கோ பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து கலச புறப்பாடும், கங்கையம்மனுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடந்தது. காலை 9:00 மணியளவில், ராமர் கோவில் வளாகத்தில் இருந்து, 108 பால் குடங்கள் ஊர்வலம் துவங்கியது. கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த, ஊர்வலம் 11:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. பின், அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பெண்கள், பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மாலை உற்சவர் வீதியுலா நடந்தது. இரவு பக்தி நாடகம் நடத்தப்பட்டது.