பதிவு செய்த நாள்
03
அக்
2013
10:10
நாகர்கோவில்: நவராத்திரி பூஜைக்காக சரஸ்வதிதேவி மற்றும் சுவாமி விக்ரகங்கள், பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து யானை மீது ஊர்வலமாக புறப்பட்டு சென்றது. இதன் துவக்க விழாவில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி பங்கேற்றார். பண்டைய காலத்தில் திருவிதாங்கூர் ராஜ்யத்தின் தலைநகராக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மனாபபுரம் விளங்கியது. இங்குள்ள அரண்மனை வளாகத்தில், சரஸ்வதி கோவில் உள்ளது. இது கவியரசர் கம்பர் வழிபட்ட சரஸ்வதிதேவி சிலை என, வரலாறு கூறுகிறது. மன்னர்கள் காலத்தில் இக்கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் நிர்வாக வசதிக்காக, 1840ம் ஆண்டு சுவாதி திருநாள் மன்னர் காலத்தில், தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னரும் நவராத்திரி விழா தடையின்றி நடப்பதற்காக, மன்னர் உத்தரவு படி சரஸ்வதிதேவி சிலை யானை மீது பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டது. மன்னர் ஆட்சி மறைந்த பின்னரும், அந்த மரபு மறக்கப்படாமல், இரு மாநிலங்களுக்கிடையே பல பிரச்னைகள் இருந்தாலும், இந்த விழா இருமாநிலங்களை இணைக்கும் நல்லுறவு விழாவாக நடைபெற்று வருகிறது. வரும் 5ம் தேதி, நவராத்திரி பூஜை துவங்க உள்ளதை ஒட்டி, நேற்று காலையில் பத்மனாபபுரத்தில் இருந்து சுவாமி பவனி புறப்பட்டது. கேரள மற்றும் தமிழக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் இந்த ஊர்வலம் புறப்பட்டது. சரஸ்வதிதேவியுடன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரங்களும் இந்த பவனியில் எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்துக்கு, மன்னர் பயன்படுத்திய உடைவாள் எடுத்து செல்லப்பட்டது. இந்த வாளை, கேரள முதல்வர் உம்மன்சாண்டி, பண்பாட்டுத் துறை அமைச்சர் ஜோசப் ஆகியோர் முன்னிலையில், அரண்மனை அதிகாரி சரத்குமாரன் நாயர் எடுத்துக்கொடுக்க, கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் வாங்கி , குமரி மாவட்ட தேவசம்போர்டு இணைஆணையர் ஞானசேகரனிடம் கொடுத்தார். இந்த பவனி வரும் 4ம் தேதி திருவனந்தபுரம் சென்றடையும். அங்கு மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பவனியை வரவேற்று, அழைத்து செல்வார். 5ம் தேதி நவராத்திரி விழா துவங்குகிறது.
முதல்முறை: ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் இந்த விழாவில், முதல் முறையாக முதல்வர் ஒருவர் பங்கேற்றது, இதுவே முதல்முறை. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இந்து மத நிகழ்ச்சியில் மாற்று மதத்தினர் கலந்து கொள்ளக்கூடாது என்று விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தும், அவர் கலந்து கொண்டார். மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், பிரச்னை சுமூகமாக முடிந்தது.