பதிவு செய்த நாள்
12
அக்
2013
11:10
நவராத்திரி காலத்தில் சரஸ்வதியை வழிபடும் கடைசி மூன்று நாட்களும், கோயில்களிலும், வீடுகளிலும் கூட்டாக வீணை இசைப்பதைப் பார்க்கிறோம். இதற்கு காரணம் தெரியுமா? நவரத்னமாலா என்ற ஸ்தோத்திரத்தில், காளிதாசர், பராசக்தியின் கையில் வீணை இருக்கிறது என்று பாடியுள்ளார். அவளை சிவனின் பத்தினி என்றும், அவள் சங்கீத இனிமையில் மூழ்கி அமைதியாகவும், மென்மையான உள்ளம் பெற்றவளாக இருப்பதாகவும் கூறுகிறாள். பராசக்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கும்போது, அவளை சியாமளா என்று அழைப்பர். இன்னிசையில் மூழ்கி ஆனந்தமாய் இருக்கும் அவளை, அதே இன்னிசையால் பக்தர்களும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அப்போது, அந்த இடத்தில் இருக்கும் எல்லார் மனமும் அமைதிபெறும். அதனால் தான், நவராத்திரியின் போது, கூட்டாக வீணை வாசிக்கிறார்கள். அமைதியைத் தேடி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நவராத்திரி காலத்தில் வழக்கத்தை விட அதிகமான மனஅமைதி கிடைக்கிறது.
மாணவனே கேள்: சரஸ்வதி பூஜையை ஒட்டி மாணவர்களுக்கு வாரியார் சுவாமிகள் தரும் சுவையான சேதி: கற்க கசடறக் கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக, என்பது வள்ளுவர் வாக்கு. படித்தால் என்ன லாபம்? சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும். எல்லா நாடும் கற்றவருக்குச் சொந்தம். படிப்பது எதற்கு? உத்தியோகம் செய்வதற்கு மட்டுமல்ல, அறிவை வளர்ப்பதற்கும் கூட. திருக்குறள், ராமாயணம், மகாபாரதம் ஆகிய நூல்களைப் படிக்க வேண்டும். வழுக்கி விழுந்தவள், வாழப்பிறந்தவள் போன்ற மோசமான கதைகளைப் படிக்கக்கூடாது. இனிமேலாவது, இதுமாதிரி உள்ள நல்ல நூல்களைப் படியுங்கள். படிப்பில்லாதவர்களும் பணம் சேர்க்கிறார்கள். உள்ளூர் பாங்கில் பணம் போட்டால் தெரிந்துவிடுமென்று வெளிநாட்டு பாங்கில் பணம் போடுகிறார்கள். மாணவர்களுக்கு தெய்வபக்தி இருக்க வேண்டும். காலையில் எழுந்து பல்துலக்கி, நெற்றிக்கு விபூதி இட்டு, இறைவனின் திருநாமத்தைச் சொன்னபின் தான் காபியே குடிக்க வேண்டும். வாரியார் சொன்னதை மனதில் வரித்துக் கொள்வீர்களா மாணவர்களே!
படிப்புக்கு ஒரு பத்தியம்: கல்வி கற்ற எல்லாரும் ஒரு பத்தியத்தைக் கடைபிடித்தால் தான், படிப்புக்குப் பெருமை. இல்லாவிட்டால் படிக்காத மேதைகளாகவே இருந்துவிடலாம். கல்வி என்னும் மருந்து தான், பணம் தேடவும், நம் தேவைகளை நிறைவேற்றவும் துணைநிற்கிறது. கல்வி என்ற மருந்து எவ்வளவு முக்கியமோ, அதே போல அடக்கம் என்கிற பத்தியமும் முக்கியம். இதை சமஸ்கிருதத்தில் வித்யையும் விநயமும் என்று சொல்வார்கள். வித்தை என்றால் கல்வி. விநயம் என்றால் அடக்கம். கற்றவர்கள் அடக்கத்துடன் வாழ வேண்டும்.