பதிவு செய்த நாள்
12
அக்
2013
11:10
நாம் நவராத்திரி விழாவில் சரஸ்வதியை வழிபடுவது போன்று, வங்காளிகள் தை மாதத்தில் வசந்த பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதியைப் பூஜிக்கின்றனர். மகாவித்யா, மகாவாணி, பாரதி, வாக் சரஸ்வதி, ஆர்யா, ப்ராம்மி, காமதேனு, வாகீஸ்வரி, ருத்ர வாகீஸ்வரி, விஷ்ணு வாகீஸ்வரி, பர சரஸ்வதி, பாலா சரஸ்வதி, நகுலி சரஸ்வதி, வாணி சரஸ்வதி, சம்பத் சரஸ்வதி, தாரகா சரஸ்வதி என சரஸ்வதிதேவிக்குப் பல திருநாமங்கள் உண்டு. சோழ அரசவையில் அவைப் புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர். இவருக்குத் தானமாகத் தரப்பட்ட ஊர்தான், இன்று புகழ்பெற்ற சரஸ்வதி கோயில் அமைந்துள்ள கூத்தனூர். அவரது பெயராலேயே இந்த ஊர் கூத்தனூர் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலைக் கட்டியதும் புலவர் ஒட்டக்கூத்தர்தான் என்கிறது கோயில் ஸ்தல வரலாறு. சரஸ்வதியின் அருளாலேயே ஒட்டக்கூத்தர் கவி இயற்றும் ஆற்றல் பெற்றார் என்பர்.
சிவபெருமானுக்கு மூன்று கண்கள் உண்டு. அதனால் அவரை முக்கண்ணன் என்று அழைப்பர். அதேபோன்று, சரஸ்வதிக்கும் மூன்று கண்கள் இருக்கின்றன. கூத்தனூரில் கோயில் கொண்டுள்ள சரஸ்வதிக்குத்தான் ஞானசக்ஷúஸ் என்கிற மூன்றாவது கண் உள்ளது. பிரம்மாவுக்கென தனிக்கோயில் அமைந்த புகழ்பெற்ற திருத்தலம் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள புஷ்கர். ஒருகாலத்தில், பூலோகத்தில் யாகம் செய்யவேண்டும் என்கிற நோக்கத்தில் புஷ்கருக்கு வந்தார் பிரம்மா. யாகம் ஆரம்பிப்பதற்கான நேரமும் குறித்தாகிவிட்டது. பார்வதிதேவியையும் மகாலட்சுமியையும் அழைத்துவரச் சென்ற சரஸ்வதி திரும்பிவரச் சற்றுத் தாமதமாகிவிட்டது. ஒருவர் யாகம் செய்யும்போது, அவரது மனைவியும் கூடவே இருக்கவேண்டும் என்பது நியதி. சரஸ்வதியின் வருகை தாமதமாகிக்கொண்டே போனதால், யாக வேள்வியைச் சுற்றி அமர்ந்திருந்த ஆன்றோர்கள் சொன்னதன்பேரில், காயத்ரி என்கிற பெண்ணை மணந்து, யாகத்தை முடித்துவிட்டார் பிரம்மா. இதை அறிந்த சரஸ்வதிதேவி கடும்கோபம் கொண்டாள். அப்படிக் கோபம் கொண்ட சரஸ்வதிதான், இங்கே மலை உச்சியில் கோயில் கொண்டுள்ள சாவித்ரி என்கிறார்கள். பிரம்மா கோயில் மலை அடிவாரத்தில் உள்ளது.
ரிக் வேதத்தில் விரித்திரன் என்கிற பாம்பு வடிவ அசுரனை சரஸ்வதி அழித்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதனாலேயே, ஜப்பானில் பாம்புகள் மற்றும் டிராகன்களுடன் தொடர்புடையவராகக் கருதப்படுகிறார் சரஸ்வதி. இங்கே அமைந்துள்ள சரஸ்வதிக்கான முக்கிய கோயில், டோக்கியோ நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் எனோஷிமா தீவில் உள்ளது.