பதிவு செய்த நாள்
24
அக்
2013
10:10
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களின் வரலாறு மற்றும் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல் தொகுப்பு அடங்கிய புத்தகத்தை வெளியிட, அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, மூன்று அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
1,389 கோவில்கள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 1,389 கோவில்கள் உள்ளன. இவை வருவாய் அடிப்படையில் நிர்வாக வசதிக்காக, நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. இவைதவிர, 3,500க்கும் மேற்பட்ட கிராம கோவில்களும் உள்ளன. சொத்துகள் அதிகம் உள்ள கோவில்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் செயல் அலுவலரை நியமித்து நிர்வாகம் நடத்தப்படுகிறது. பிரதான கோவில்களில், தொடர்ந்து நிகழ்வுகள் நடப்பதால், அவற்றின் வரலாறு, வழிபாடுகள் பற்றிய தொகுப்பு உள்ளது. பெரும்பாலான கோவில்களில், கோவில் தொடர்பான வரலாறு மற்றும் கோவில் மூலவரை வழிபடும் முறை, அதன் சிறப்புகள் மற்றும், கோவிலின் பிரதான நிகழ்வுகள் குறித்த தகவல்கள் தொகுக்கப்பட வில்லை.
தகவல் சேகரிப்பு: அனைத்து கோவில்கள் பற்றிய தகவல்களை தொகுத்து, அவற்றைப் புத்தகமாக வெளியிட, காஞ்சிபுரம் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, மூன்று பேர் கொண்ட குழுவை அறநிலையத் துறை அமைத்துள்ளது. இந்த குழுவினர், முதற்கட்டமாக கோவில் குறித்து வெளியான கட்டுரைகள் மற்றும் கோவில்களை சார்ந்து வாழும் முதியவர்கள் எழுதிய குறிப்புகளை சேகரிக்கத் துவங்கி உள்ளனர். முக்கிய கோவில்களில் செயல் அலுவலர்களாக பணியாற்றுபவர்களே, கூடுதல் பொறுப்பாக இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த குழு சேகரிக்கும் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை தொகுத்து, நிபுணர்களின் ஆலோசனையுடன் புத்தகமாக வெளியிட, அறநிலையத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த தகவல்கள் அறநிலையத் துறை இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளது.
நிதி கைவிரிப்பு: இந்த புத்தகங்களை வெளியிட, அறநிலையத் துறைக்கு தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், நன்கொடையாளர்கள் உதவியுடன் வெளியிட முடிவு செய்துள்ளது. இது குறித்து, அறநிலையத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தலமாக உள்ளதால், ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மாவட்டத்தில் பிரதான கோவில்களை தவிர, பெரும்பாலான கோவில்களின் வரலாறு மற்றும் சிறப்பு குறித்து, வெளியூர் பக்தர்களுக்கு தெரிவதில்லை. கோவில்களின் சிறப்பை கூறும் வகையில், கடந்த, 1984 ஆண்டு ஒரு சில பிரதான கோவில்களின் வரலாறு மட்டுமே புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது. மற்ற கோவில்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறோம். முதற்கட்டமாக மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோவில்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் மூன்று செயல் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், பணிகள் முடிந்து, புத்தகங்கள் இறுதி வடிவம் பெற்றுவிடும் என, எதிர்பார்க்கிறோம். புத்தகம் வெளிவரும் போது, சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு கோவில்களின் சிறப்புகள் தெரியும் வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு, அதிகாரி கூறினார்.
தொகுக்கப்படும் விவரங்கள்:
கோவில் வரலாறு
பரிகார தலம்
கோவில் முழு முகவரி
கோவில் செயல் அலுவலர் தொடர்பு எண்
கோவில் பூசாரி அலைபேசி எண்
கோவிலுக்கு செல்லும் வழித்தடம் வரைபடம்
பூஜைகள் பற்றிய விவரம்.