பதிவு செய்த நாள்
18
மார்
2011
11:03
பங்குனி உத்திர நாளில் சிவனை கல்யாணசுந்தர மூர்த்தியாக நினைத்து விரதம் இருக்க வேண்டும். இந்த விரதம் இருந்துதான் தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியையும், மகாலட்சுமி மகாவிஷ்ணுவையும் மணந்தனர். பிரம்மா தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றதும், சந்திரன் 27 கன்னிகளை மனைவியாக அடைந்ததும் இந்த விரதத்தை கடைபிடித்து தான். காளையர்களும் இந்த விரதத்தை கடைபிடித்து தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை அடையலாம்.
பங்குனி உத்திர நன்னாளின் சிறப்பு : இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது; காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது; மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது; ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது; இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது; திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது; ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது; அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு. இந்த பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார். சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான். மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள். இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.
பக்தியுள்ள கணவர் கிடைக்க
தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள். அப்போது, சிவன் தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் இருந்தார். இதனால் உலகில் அசுரர்கள் பெருகி தேவர்களை துன்புறுத்தினர். எனவே, தேவர்கள் மன்மதனின் உதவியுடன் சிவனது தவத்தை கலைத்தனர். அசுரர்கள் தங்களை கொடுமைப்படுத்துவதை பற்றி கூறினர். சிவன், தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து கொண்டு, சூரர்களை வதம் செய்ய, குமரன் ஒருவனை படைப்பதாக கூறினார். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி உத்திரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார். இன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர். இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.
தீர்த்தத் தொட்டியில் நீராடுங்க!
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி தீர்த்தத் தொட்டியில் உள்ள விருப்பாச்சி ஆறுமுகநயினார் கோயிலில் நாக சுப்பிரமணியர் உள்ளார். மூலவருக்கு அருகிலுள்ள ஒரு நாகத்தின் மத்தியில் சிறிய வடிவில் வலதுபுறம் திரும்பிய மயிலுடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். ராகு, கேது தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். விசேஷ காலங்களில் இவ்விரு சுவாமிகளுக்கும் சந்தனம், அரிசிமாவு காப்பு அலங்காரம் செய்கின்றனர். கோயில் முன்புள்ள தீர்த்தம் வற்றாமல் எப்போதும் சுரந்தபடி இருக்கிறது. இதன் பெயரால் இத்தலம் தீர்த்தத் தொட்டி என பெயர் பெற்றிருக்கிறது. பங்குனி உத்திரத்தன்று, இந்த தீர்த்தத்தில் நீராடி, ஆறுமுகநயினாரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.
முருகனுக்கு ஐந்து வாகனம்
முருகனுக்கு பொதுவான வாகனமாக மயில் இருந்தாலும், திருமால் கொடுத்த யானை, சேவல் மற்றும் ஆடு ஆகியவையும் அவரது வாகனங்களாக இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் இந்த நான்கு வாகனங் களையும் காணலாம். திருவிழாக் காலங்களில் சுப்பிரமணியர் இந்த வாகனங்களில் எழுந்தருளுகிறார். கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், தக்கலை அருகிலுள்ள குமாரகோயிலில் உற்சவ காலங்களில் முருகன் குதிரை வாகனத்தில் பவனி வருவார்.
மலைப்பாறையில் அங்கபிரதட்சணம்
மதுரையிலிருந்து திருவாதவூர் செல்லும் வழியில் உள்ளது வெள்ளி மலை முருகன் கோயில். இங்குள்ள தல விருட்சமான கல்லத்தி மரத்தின் அடியில் வேல் மட்டும் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அதன் பின் இங்கு கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் பங்குனி உத்திரத்தன்று பக்தர்கள் பாறையில் அங்க பிரதட்சணம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இங்கு வேண்டிக் கொண்டால் ஆணவம் நீங்கி பணிவு வரும் என்பது நம்பிக்கை.
சாஸ்தாவின் அவதார நாள்
சிவபெருமானுக்கும் மோகினியாக வந்த விஷ்ணுவுக்கும் பங்குனி உத்திரநாளில் அவதரித்தவர் தர்மசாஸ்தா. இவரே ஐயப்பனாக மானிட அவதாரம் எடுத்து பந்தளமன்னர் ராஜசேகரனால் வளர்க்கப்பட்டார். ஐயப்பன் வழிபாட்டில் நெய்த்தேங்காய்க்கு முக்கியத்துவம் உண்டு. நெய்த்தேங்காய் இருமுடியில் இடம் பெறும் பொருட்களில் ஒன்றாகும்.தேங்காயில் வலக்கண், இடக்கண், ஞானக்கண் என்னும் மூன்று கண்கள் உண்டு. ஒரு கண்ணைத் தோண்டி அதில் இருக்கும் இளநீரை வெளியேற்றிவிடுவர். இளநீர் உலக இன்பத்தைக் குறிப்பதாகும். அதை வெளியேற்றுவதன் மூலம் நம் அஞ்ஞானம் விலகுகிறது. இன்ப வேட்கை மறைகிறது. நெய்யை நிரப்புவதன் மூலம் தெய்வீக சிந்தனை நம்முள் நிரம்புகிறது. இந்தச் சடங்கின் நோக்கமே மனத்தூய்மை பெற்று ஞானம் அடைவது தான். இப்போதும், இவரது கோயில்கள் ஆற்றங்கரை, காடுகள், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களிலேயே இருக்கும். இதனால், இங்கு செல்ல அச்சப்பட்ட மக்கள் கூட்டமாக சென்று வழிபட்டனர். சாத்து என்ற சொல்லுக்கு கூட்டம் என்று பொருள். இதனால், இவர் சாத்தா, சாஸ்தா, சாஸ்தான், சாத்தான் என்றெல்லாம் கிராமமக்களால் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறார். தென்மாவட்ட கிராமங்களில் சாஸ்தா கோயில்கள் மிக அதிகமாக உள்ளன. பங்குனி உத்திரத்தன்று இங்கு கூட்டம் அலைமோதும்.
ஞானம் அருளும் தர்ம சாஸ்தா
செங்கல்பட்டு அருகில் உள்ள தலம் தாழக்கோயில். இங்கு தேவாரப்பாடல் பெற்ற பகத்வத்சலர் கோயில் உள்ளது. பக்தவத்சலர் என்பதற்கு தாயுள்ளம் கொண்டவர் என்பது பொருள். அம்பிகை திரிபுரசுந்தரிக்கு பங்குனி உத்திரம், நவராத்திரி ஒன்பதாம் நாள், ஆடிப்பூரம் நாட்களில் மட்டும் அம்பிகைக்கு முழுமையான அபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும். தேவாரம் பாடிய மூவரும் இங்கு பாடல் பாடியுள்ளனர். கோயில் வரலாறு அந்தகக்கவி வீரராகவரால் எழுதப்பட்டது. அகத்திய முனிவரும், விஸ்வாமித்திரரும் வழிபட்ட சிறப்புடையது.
சபரிமலையில் பங்குனி உத்திரம்
சாஸ்தாவின் அவதாரமான ஐயப்பன் சபரிமலையில் கோயில் கொண்டுள்ளார். மாத பூஜை நீங்கலாக நடைதிறக்கும் நாட்களில் பங்குனி உத்திரம் குறிப்பிடத்தக்கது. ஐயப்பனின் பிறந்தநாள் என்பதால் இந்நாளில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவர். கடந்த சில ஆண்டுகளாக பங்குனி பிரம்மோற்ஸவமும் இணைந்து நடப்பதால், மண்டல, மகர விளக்கு காலத்திற்கு அடுத்தபடியாக அதிக நாட்கள் நடை திறந்திருக்கும் காலமாக பங்குனி விளங்குகிறது.
சம்பந்தர் பாட்டில் உத்திர விழா
சென்னை மயிலாப்பூரில் வசித்த, சிவநேசர் என்பவர் தன் மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். அச்சமயத்தில் தோட்டத்தில் மலர் பறிக்க சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிரிழந்தாள். அவளுக்கு இறுதி காரியங்களை செய்து முடித்தார் சிவநேசர். இதையறிந்த சம்பந்தர், பூம்பாவையை எரித்த சாம்பலை கொண்டு வரச்செய்தார். பங்குனி உத்திரத் திருநாளில் சிவனின் திருக்கல்யாணம் நடக்குமே! அதைக் காணாமலே போகிறாயே பூம்பாவாய்! என்ற பொருளில் பாடல் பாடினார். சிவனருளால் அவள் உயிர் பெற்றாள். பலி விழாப் பாடல் செய் பங்குனி யுத்திர நாள், ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய் என்பது அந்தப்பாடலிலுள்ள வரிகள்.
குளிர்ந்த நெற்றிக்கண்
சிவனுக்கு வெப்பமான அக்னி நெற்றிக்கண்ணாக இருப்பது போல, அம்பாளுக்கு குளிர்ந்த சந்திரன் நெற்றிக்கண்ணாக இருக்கிறது ஒரு கோயிலில். திருவாரூரிலுள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் உள்ள மதுரபாஷினி அம்மைக்கு இத்தகைய சிறப்பு இருக்கிறது. அகத்தியர் இந்த அம்பிகையை ஸ்ரீசக்ர தாரிணி, ராஜசிம்மானேஸ்வரி, லலிதாம்பிகை என்றெல்லாம் புகழ்ந்துரைத்துள்ளார். இந்த அம்பாளை வழிபட்டால், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். பேச்சுத்திறமைக்காகவும் இவளுக்கு பூஜை செய்து வரலாம். பங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் தினத்தையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம். சந்திரனுக்கு முக்கியத்துவம் உள்ள இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று வாருங்கள். இந்த அம்பாள் மனோபலமும் தருபவள் என் பது குறிப்பிடத்தக்கது.
பால்போலவே வான்மீதிலே...
சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது. களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களை தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.
மணவிழா காணும் குன்றத்து முருகன்
திருப்பரங்குன்றம். பாடல் பெற்ற சிவத்தலமாகவும், முருகனின் அறுபடைவீடுகளில் முதல் தலமாகவும் உள்ளது. வடதிசை நோக்கி அமைந்துள்ள குடைவரைக் கோயிலான இங்கு, சத்தியகிரீஸ்வரர் கிழக்கு நோக்கியும், பவளக்கனிவாய்ப் பெருமாள் மேற்குநோக்கியும், கற்பகவிநாயகர், துர்க்கை, முருகப்பெருமான் வடக்குநோக்கியும் அருள்பாலிக்கின்றனர். தனியாக கோவர்த்தனாம்பிகை சன்னதி உள்ளது. தெய்வானை திருமண வைபவத்தைக் காண மும்மூர்த்திகள், துவாதச ஆதித்தியர், அஷ்ட வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள், அஷ்டதிக் பாலகர்கள், இந்திராதி தேவர்கள், முனிவர்கள் என்று அனைவரும் கூடியதால் இத்தலம் கயிலாயத்திற்கு ஈடானதாகும். சம்பந்தர் பாடிய தேவாரத்தில் இம்மலை சிவலிங்கமாக காட்சியளிப்பதாக பாடியுள்ளார். திருமுருகாற்றுப்படையை நக்கீரர் இங்குள்ள முருகன் மீது பாடினார். பங்குனியில் முருகப்பெருமானுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 22ல் இத்தலத்தில் முருகப்பெருமான் தெய்வானை திருமணம் நடக்கிறது.
குன்றத்து குமரனுடன் கூட்டணி
கயிலாயத்தில் ஒருநாள் பார்வதிதேவிக்கு பிரணவ உபதேசம் செய்து கொண்டிருந்தார் சிவன். தாயின் மடியில் இருந்த முருகனும் அம்மந்திரத்தைக் கேட்டுவிட்டார். குரு மூலமாகத் தெரிந்து கொள்ள வேண்டியதை மறைமுகமாக கேட்டதால் முருகனுக்கு பாவம் ஏற்பட்டது. ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் சொரூபமாக முருகன் இருந்தாலும், உலகநியதிக்கு கட்டுப்படவேண்டும் என்ற முறையில், தனக்கு ஏற்பட்ட பாவம் நீங்க முருகப்பெருமான் பூலோகத்திலுள்ள குன்றில் தவத்தில் ஆழ்ந்தார். பிள்ளையின் தவத்தைக் கண்டு ஈசன் ஆனந்தம் கொண்டார். பரம்பொருளான இறைவன் காட்சியளித்த குன்று என்பதால் அம்மலை பரங்குன்று என்றாகி திரு என்ற அடைமொழியுடன் திருப்பரங்குன்று ஆனது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் ஒற்றுமையுடன் இங்கு வந்து வழிபட்ட செய்தி சுந்தரர் தேவாரத்தில் இடம் பெற்று உள்ளது. பிரம்மோற்ஸவம் பங்குனியில் பத்து நாட்கள் நடக்கும். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்த முருகப்பெருமானுக்கு, இந்திரன் தன்மகள் தெய்வானையை வெற்றிப்பரிசாக அளித்து திருமணம் நடத்தி வைத்த இடம் இதுவே. கருவறையில் முருகன், தெய்வானை, நாரதர், துர்க்கை, கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, பவளக்கனிவாய்ப் பெருமாள், மதங்கரிஷி என்று கூட்டணியாக நின்று அருள்புரிகின்றனர். பங்குனி சுவாதியன்று இங்கு திருக்கல்யாண விழா நடக்கும். மணவிழாவில் கலந்து கொள்ள மதுரையில் இருந்து மீனாட்சி, சொக்கநாதர் திருப்பரங்குன்றம் எழுந்தருள்வர்.
பங்குனி பவுர்ணமி வலம்
சிவபெருமானின் மலைக்கோயில்களில் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலும் ஒன்று. பழங்காலத்தில் செண்பக வனமாக இருந்த இவ்வூர் இன்று நகரமாக காட்சி தருகிறது. கிழக்கு எல்லையில் மலையேறினால் கோயிலை அடையலாம். வாகன வசதி உண்டு. நந்தியம்பெருமானின் அம்சமாக இம்மலை இருப்பதாக ஐதீகம். உடும்பு வடிவத்தில் சிவன் பார்வதிதேவிக்கு காட்சி தந்ததால் கவுதேயாத்ரி என்றொரு பெயருண்டு. அம்மன் மரகதவல்லி என்னும் திருநாமத்தோடு விளங்குகிறாள். பங்குனி பவுர்ணமிநாளில் சுவாமியும் அம்பாளும் இங்கு பவனிவருவர்.
மணவாழ்வு தரும் உத்திர திருநாள்
பங்குனி உத்திரநாளில் சிவபார்வதி திருமணம் நடந்தது. நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்வர். ஓம் சிவாயநம, ஓம் பராசக்திநம என்ற நாமத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும். மதியம் ஒருவேளை உணவு உண்ணலாம். இயலாதவர்கள் காலை, இரவு பால் பழம் சாப்பிடலாம். இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம். மாலை கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.
கால் கடுக்க நிற்கும் கருணை
பிரசித்தி பெற்ற பெரிய கோயில்களில் ஆறுகால பூஜை நடக்கும். இதில் உச்சிக்காலம் (மதியபூஜை) முடிந்ததும் நடை சாத்தப்பட்டு, மாலையில் திறப்பர். ஆனால், அதிகாலை முதல் இரவு வரை நமக்காக நடையே அடைக்காமல், கருணையோடு கால்கடுக்க நின்றருள் புரிகிறான் பழநி முருகன். ஞானப்பழமாய் நிற்கும் அப்பெருமானின் நாமத்தைச் சொல்வதும், காதால் கேட்பதும் கூட நன்மையளிக்கும் என்று அருளாளர்கள் போற்றுகின்றனர். நெஞ்சமே! தஞ்சம் ஏதுநமக்கினியே என்று கந்தர் அலங்காரம் பழநியப்பனைக் குறிப்பிடுகிறது. பங்குனி உத்திரத்தன்று இங்கு நடக்கும் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். மொட்டையாண்டி பழநியாண்டி என்றெல்லாம் இப்பெருமானை குறிப்பிட்டாலும், இவர் ஜடைமுடியோடு இருப்பதை அபிஷேக காலத்தில் தரிசிக்க முடியும். பழநி தலபுராணமும், முருகன் குடுமியோடு இருக்கும் காட்சியைப் போற்றுகிறது. சிவபெருமானின் அம்சமாகத் திகழும் இவர், அபிஷேகத்தால் மனம் குளிர்ந்து அருள்வதாகக் கூறுகின்றனர். சேரமன்னர்கள் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்ததால், கேரளமக்கள் பெருமளவில் வருகின்றனர். சபரிமலை செல்பவர்களும் இவரை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பரிதிநியமத்தில் பங்குனி விழா
தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள தலம் பருத்தியப்பர் கோயில். இவ்வூரின் புராணப்பெயர் பரிதிநியமம். பரிதி என்றால் சூரியன். சூரியன் சிவபெருமானை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றதால், சுவாமிக்கு பரிதியப்பர் பாஸ்கரேஸ்வரர் என்றெல்லாம் பெயர்கள் சூட்டப்பட்டன. பருதியப்பர் என்ற சொல்லே பருத்தியப்பர் என மருவி விட்டதாகவும் சொல்வர். இங்குள்ள அம்பிகை மங்கலநாயகி பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளுகிறாள். சிவனை சூரியன் வழிபடும் சிற்பத்தை கோயிலில் காணலாம். பங்குனி 18, 19,20 (இவ்வாண்டு ஏப்ரல் 1,2,3) தேதிகளில் உதய வேளையில் சூரியக்கதிர்கள் மூலவர் மீது விழுகின்றன. இத்தல முருகனுக்கு பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். கோயிலின் முன்புறத்தில் சூரியதீர்த்தமும், பின் புறத்தில் சந்திரதீர்த்தமும் உள்ளன. பரிதியப்பர், மங்கலநாயகி, முருகப் பெருமான், சூரியன் ஆகியோரை ஒருசேர வழிபடுவோருக்கு பிதுர் தோஷம் (முன்னோர் தந்த சாப பலன்) நீங்கும் என்பர். திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற இங்கு பங்குனி உத்திரவிழா விசேஷமாக நடக்கிறது.
உத்திரநாளில் வள்ளி கல்யாணம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தன்று வள்ளி திருமணம் நடக்கிறது. அதிகாலையில் பள்ளியறையிலிருந்து குமரவிடங்கர் கருவறைக்குக் கிளம்புவார். அபிஷேகம், அலங்காரம் முடிந்தவுடன் தீபாராதனை நடக்கும். பின் பெரிய பூஞ்சப்பரத்தில் மேலக்கோயில் சென்று தவத்தில் ஆழ்வார். மாலை நான்கு மணிக்கு தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி மேலக்கோயில் முன்புள்ள பந்தல் மண்டப முகப்பிற்கு வருவார். அப்போது வள்ளியம்மை மணமகள் கோலத்தில் எதிரில் வந்ததும், இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவம் நிகழும். பக்தர்கள் இந்நாளில், வள்ளிநாயகிக்கு தினை மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். இந்நிகழ்ச்சி, முருகனுக்கு வள்ளி தேனும் தினைமாவும் வழங்கியதை நினைவூட்டுவதாக உள்ளது. வள்ளி கல்யாணத்தை தரிசிப்பதாலும், மாவிளக்கு ஏற்றுவதாலும் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
சுப்பா ஓடிப்போ
தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் முருகனை சுப்பன், சுப்பராயன், சுப்ராயலு, சுப்பண்ணா என்று பெயரிட்டு வழிபடுகின்றனர். முருகனைப் பாம்புகளின் தலைவனாகக் கருதும் வழக்கம் அவர்களிடம் உள்ளது. இதனால் பாம்பைப் பார்த்தால் சாம்பிராணி தூபமிட்டு சுப்பா ஓடிப்போ, சுப்பராயா ஓடிப்போ, என்று அன்போடு விரட்டுவார்கள். பாம்பை அடக்கும் மயிலை வாகனமாக ஏற்றதால் முருகன் மீது அவர்களுக்கு பாசம் அதிகம். மங்களூருவில் இருந்து 100கி.மீ., தொலைவில் உள்ள தலம் சுப்ரமண்யம். முருகன் தாரகாசுரனை வதம் செய்தபின், வந்து அருள்புரியும் தலம் இது. இதனை ஆதிசுப்ரமண்யம் என்று கூறுவதுண்டு. இங்குள்ள மலை குமார பர்வதம். நதி குமாரதாரா. மூலவர் பாம்புப்புற்றின் மீது வீற்றிருக்கிறார். புற்றுமண் பிரசாதமாக தரப்படுகிறது.
இளைஞர்களே 48 ஆண்டு விரதமிருங்க
பங்குனி உத்திரவிரதம் மேற்கொள்வோர் 48 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இவ்விரதத்தால் அடுத்தபிறவி தெய்வப்பிறவியாக அமையும். அதன் மூலம் ஜனன, மரணச் சக்கரத்தில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம். சித்திரையில் சூரியன் தன் உச்சவீடான மேஷராசியில் சஞ்சரிப்பார். அந்த அடிப்படையில் பங்குனியிலேயே சூரியனின் கதிர்கள் தீவிரமடையத் தொடங்கிவிடும். உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இந்நாளில் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறுகிறது. பங்குனி உத்திரநாளில் சந்திரன் பலம்பெற்று கன்னிராசியிலும், சூரியன் மீனவீட்டிலும் இருக்கும். இவ்விரு கிரகங்களும் இந்நாளில் ஒருவரை ஒருவர் ஏழாம்பார்வையால் பார்த்துக் கொள்வர். இதன் மூலம் ஆத்ம பலமும், மனோபலமும் ஒருசேர நமக்குக் கிடைக்கிறது.
பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை
* மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.
* பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.
* தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.
* சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.