பதிவு செய்த நாள்
18
மார்
2011
12:03
ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் ராமநாதபுரம் நகரின் இதயம் போன்ற இடத்தில், எழில்மிகு கோலத்தில் அறுபடை வீட்டின் அழகு முருகன் வழிவிடு முருகனாக வடிவம் கொண்டு, வணங்கிவந்தவர்க்கெல்லாம் வழிவிட்டு வழியருகில் இருக்கின்றான். பக்தியோடும், மெய்யான இறை உணர்வோடும் அடிபணிந்து வணங்கி வழிபடுவோர் அனைவருக்கும் ஜாதி, மதஇன வேறுபாடுகள் எதுவுமின்றி அருள்பாலித்து வருவது இம்முருகப் பெருமானின் தனிச்சிறப்பாகும்.
மூலவரலாறு: இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆண்டுகளில் நள வருஷத்தில் முதல் பிளவு ஆண்டுக்காலத்தில் தற்சமயம் தர்மகர்த்தாவாக இருப்பவரின் முன்னோர்களால் தனி வேல் வைத்து ஏற்பட்டதாக மூல வரலாறு கூறுகிறது.
தனிச்சிறப்பு: இக்கோயில் அமைந்திருக்கும் இடத்தின் நான்கு திக்கிலும் வழக்கு மன்றம்,பெரிய மருத்துவமனைகள், வாரச்சந்தைகள் அமைந்துள்ளதாலும், பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் போன்றவை உள்ளதாலும் இவற்றுக்கு வருகின்ற பொதுமக்கள் பயணம் மேற்கொள்பவர்களும், முறையே தங்களது வழக்குகளில் நீதி கிடைத்திடவும், பிணி நீங்கி நலம் பெறவும், பொருள்கள் வாங்கவும், விற்கவும் மேலும் வெளியூர் பயணம் செய்பவர்கள் நலமாக சென்று திரும்பிவரவும் வழியருகில் அமைந்துள்ளதால் இந்த வழிவிடு முருகனை வணங்கி சென்றதால் நினைத்த காரியம் நிறைவேறியதால் கோயிலுக்கு மட்டுமின்றி பக்தர்களுக்கும் சிறப்பும், புகழும் சேர்ந்தது. குறிப்பாக சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்கள் எளிதாக கோயிலுக்கு சென்று மெய்யுருக வணங்கிடவும், வழிகாட்டி வரம் தருவான் இம் முருகன். நீண்டநாள் நினைப்பு, கனவுகள், லட்சியம் கோரிக்கைகளை அவரவர் வேண்டுதலுக்கும், நேர்த்திக்கடனுக்கும் செவி சாய்த்து வரம் தந்து வாழ்க்கைக்கும் உறுதுணையாக இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
ஸ்தல விருட்சக சாயா மரம்: அன்பு அண்ணன் ஆனை முருகன் கணேசன் (விநாயகர்) அருகிலிருக்கவும் வள்ளி, தெய்வாணை துணையுடன் வண்ண மயில் மீது அமர்ந்து வடிவேல் தாங்கி அமர்ந்து இருக்கும் வடிவான கோலம், ஒரே கல்லில் செதுக்கி செய்யப்பட்டு மூலவராக இருக்கும் வழிவிடு முருகனை காண்பது கண் கொள்ளா காட்சியாகும்.இக்கோயில் ஸ்தல விருட்சமாக சாயா என்ற அபூர்வ மரம் இருப்பது மேலும் சிறப்பு செய்கிறது. எவ்வளவு பக்தர்கள் கூட்டம் வந்தாலும் எவ்வித சிரமமுன்றி முருகனை தரிசித்து மனதார வணங்கிடவும் நிர்வாகத்தால் எல்லா வசதி செய்யப் பட்டுள்ளது. கோயில் வளாகத்துக்குள் நவக்கிரகம், சஷ்டி முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியோருக்கு தனிப்பிரிவு சன்னதிகளும், இடும்பன், பைரவர் ஆகியோருக்கும் சிறப்பு தனிச்சன்னதிகள் உள்ளன. இதைப் போலவே ஒவ்வொரு நாள் இரவிலும் பள்ளியறை வழிபாட்டுக்காக மண்டபம் அமைத்து ஊஞ்சல் கட்டியும், வழிபாடு நடைபெற்று வருகிறது.
வழிபாடுகள்: தினசரி இரண்டு கால பூஜைகள் முறைப்படி ஆலய மணி முழங்கிட அபிஷேக தீபாராதனைகளுடன் வழிபாடல்களுடன் தமிழில் நடைபெற்று வருகின்றன. வாரத்தின் வெள்ளிக்கிழமைகளில் மார்த்தாண்ட பூஜையும், மாதத்தின் பவுர்ணமி நாளில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. மூலவரைச் சுற்றி வரும்போது பிரகாரங்களில், கந்த புராணப் பாடல்கள், திருப்புகழ் பாடல்கள், சஷ்டி கவசம், சண்முக கவசம் என பல பாடல்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
பங்குனி உத்திர பெருவிழா:ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா மிகச் சிறப்பான முதன்மை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் ஆன்மீக சொற்பொழிவுகள் உள்ளே உள்ள தனி மண்டபத்தில் நடைபெறும். ராமநாதபுரம் மட்டுமின்றி சுற்றியுள்ள நூற்று கணக்கான ஊர்களிலிருந்து ஆயிர கணக்கான பக்தர்கள் பங்குனி உத்திர பெருவிழாவிற்கு காப்புகட்டி விரதமிருந்து விழாவின் முக்கிய தினமான பங்குனி விழா தினத்தில் நொச்சிவயல் ஊரணியிலிருந்து பால்குடம், பால்காவடி, மயில்காவடி அலகு குத்தி சப்பரம் இழுத்தும் பூக்குழி இறங்கியும் முருகனுக்கு நேர்த்திகடன் செலுத்துவர். முருகனை காண கோடான கோடி கண்கள் வேண்டும் என்று சொல்லுக்கு ஏற்றாற்போல் அலங்காரத்தில் காட்சியளிக்கும் முருகனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என பக்தர்கள் அலைமோதி தரிசித்து பக்தர்களின் பக்திபரவசத்துடன் எழுப்பும் அரோகரா கோசம் ராமநாதபுரத்தின் எட்டுதிசையிலும் எதிரொலிக்கும். மறுநாள் இரவு 7 மணிக்கு புறப்படும் வழிவிடு முருகன் உற்சவ மூர்த்தியாக எழுந்து சப்பரத்தில் பூரண அலங்காரத்துடன் வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி எங்குமே காண முடியாத ஒன்றாகும்.
சூரசம்ஹாரம்: ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டிப் பெருவிழா விசேஷ அலங்காரத்துடன் அபிஷேகமும் நடக்கிறது. அப்போது சூரசம்ஹார நிகழ்ச்சியும், வழிவிடு முருகன் தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. பங்குனி உத்திரப் பெருவிழா இக்கோயிலின் மிகச் சிறப்பான முதன்மை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. வழிவிடு முருகன் ஜனநாயக முருகன் ஆவான். மக்கள் சக்தியாலும் காவடியான் பெருமையாலும் சக்தி பெற்றவன். மக்கள் சக்தியை மக்களிடம் பெற்று மக்களுக்காக நன்மைகளை புரியும் முருகன் வழிவிடும் முருகன்.
புகழ் பாமாலை: ராமநாதபுரம் நகரை சேர்ந்த பாவலர்கள், புலவர்கள், கவிஞர்கள் தமது நெஞ்சம் நிறைந்த பக்தியுடன் பாடல்கள் இயற்றி, முருக பற்று, அருளமுதம், ஞானப் பண்டித பாமாலை, முருகன் பாமாலை என்ற பெயர்களில் வழிவிடு முருகனின் புகழ்பாடி பாமாலை சூட்டி உள்ளனர். திருமுருகன் படை வீடு ஆறு, அதை திசையெங்கும் இசையோடு பாடு. இசைபாட வைத்தவன் தான் வழிவிடு முருகன், விழி அசைவாலே வீடாறும் காட்டும் இறைவன்.அந்த இறைவன் முருகனின் திருவருளைப் பெற இக்கோயிலுக்கு வந்து வணங்கி இப்பிறவிப் பயனை அனைவரும் அடைவோமாக. குருபெயர்ச்சி, சனி பெயர்ச்சி போது உலக அமைதிக்காக ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயிலில் மகா யாக சாலைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் தோஷ நிவர்த்தி பெற சங்கல்பம் இலவசமாக செய்யப்படுகிறது.