பதிவு செய்த நாள்
04
நவ
2013
11:11
சேலம்: சேலத்தில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று கந்தசஷ்டி விழா துவங்கியது. சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில், நேற்று கந்தசஷ்டி விழா துவங்கியது. காலை, 8 மணிக்கு கணபதி பூஜை, துவஜாரோகணம், அங்குரார்ப்பணம், ரட்சாபந்தனம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் மூலவருக்கு எதிரே உள்ள கொடி கம்பத்தில், கொடியேற்று விழா நடந்தது. பின்னர், உற்சவர் திருவீதி உலா சென்றார். விழாவை முன்னிட்டு, மூலவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன், வெள்ளி கவசத்தில் காட்சி அளித்தார். இன்று காலை, 7 மணி முதல், 7ம் தேதி வரை முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆறுமுகப் பெருமான் ஊர்வலம் நடக்கிறது. நவம்பர், 8ம் தேதி சூரசம்ஹார திருவிழாவின் போது, காலை, 6 மணிக்கு கந்த சஷ்டி பாராயணம், 36 முறை நடக்கிறது. காலை, 10 மணிக்கு சஷ்டி, விசேஷ அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. மாலை, 3 மணிக்கு ஆறுமுக பெருமானுக்கு அம்பிகை சக்திவேல் அருளல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4 மணிக்கு சூரசம்ஹாரம் மாட வீதியில், சூர சம்ஹார லீலை வினோத காட்சியுடன் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு வெள்ளை யானையில் ஆறுமுக ஸ்வாமி ஊர்வலம் நடக்கிறது. நவம்பர், 9ம் தேதி மாலை, 4.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு, 8 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் முருகன் மாட வீதி வழியாக உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் தேதி இரவு, 9 மணிக்கு வசந்த உற்சவத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. * சேலம், ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் கோவிலில், காலை, 8 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு, காப்பு கட்டுதல் நடந்தது. லட்சார்ச்சனை ஆரம்பமானது. இன்று, 36 முறை சஷ்டி பாராயணம் நடக்கிறது. தொடர்ந்து, 7ம் தேதி வரை முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. 8ம் தேதி மாலை, சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.