பதிவு செய்த நாள்
04
நவ
2013
11:11
தர்மபுரி: தமிழகத்தில், கார்த்திகை தீப திருநாளில், இல்லங்களில் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுகின்றனர். இந்தாண்டு, கார்த்திகை தீபத்திருநாள் வரும், 17ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை ஒட்டி, தர்மபுரி மாவட்டத்தில் குப்பாகவுண்டர் தெரு, அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் அதிகளவில் கார்த்திகை தீபங்களை உற்பத்தி செய்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புவதுடன் சேலம், சென்னை, கோவை போன்ற மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். அதியமான்கோட்டையை சேர்ந்த சேகர் என்பவர் கூறியதாவது: அதியமான் கோட்டையில் மண்பாண்ட தொழிலில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகிறோம். விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆயுத பூஜை விழாக்களுக்கு தேவையான சிலைகள் மற்றும் கொலு பொம்மைகள் செய்து முடித்தவுடன் கார்த்திகை தீப அகல் விளக்குகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த ஆண்டு ஏரி மற்றும் குளங்களில் இருந்து மண் எடுக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளது. இதனால், கூடுதல் விலைக்கு மண்ணை வாங்கி வந்து அகல் விளக்குகளை தயாரித்து வருகிறோம். பல்வேறு வகைகளில் அகல் விளக்கு தயாரிக்கும் செலவு, ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அகல்விளக்குகளின் வியாபாரிகள் அகல் விளக்கும் தயாரிக்கும் விலையை விட, மிக குறைவான விலையை தருகின்றனர். இதனால், அகல் விளக்கு தயாரிப்பவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத நிலையுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் சீனா களி மண் விளக்குகளையும், கார்த்திகை தீபம் போன்ற வடிவமைப்பு கொண்ட வண்ண மெழுகுவர்த்திகளையும் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அகல் விளக்குகள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. போட்டிகளை சமாளிக்கவும், பாரம்பரிய தொழிலை கைவிடமால் செய்ய வேண்டும் என்பதற்காக, இத்தொழிலை தொடர்ந்து செய்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் மண்பாண்ட தொழிலாளர்களின் நலன் கருதி ஏரி, குளங்களில் மண் எடுக்க சலுகைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.