பதிவு செய்த நாள்
08
நவ
2013
12:11
செஞ்சி: அங்கராயநல்லூரில் புதிதாக 21 அடி முத்து மாரியம்மன், மற்றும் முத்து மாரியம்மன் கோவில் கட்டியுள்ளனர். ஏற்கனவே உள்ள செல்வ விநாயகர், புரடியாத்தம்மன், சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில்களில் திருப்பணிகள் செய்து நேற்று(7ம் தேதி) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 6ம் தேதி மாலை 4 மணிக்கு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, கோபூஜை, மகா கணபதி ஹோமம், முதல் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 4 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், மகா கணபதி மூலமந்திரம், நவக்கிரக ஹோமமும், 7.30 மணிக்கு தம்பதி சங்கல்பம், நாடிசந்தானம், விசேஷ திரவிய ஹோமம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. 8.30 மணிக்கு கலசங்கள் புறப்பட்டு முதலில் விநாயகர் கோவில், சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 9 மணிக்கு முத்து மாரியம்மன் கோபுர விமானத்திற்கும். 9.10 மணிக்கு 21 அடி முத்து மாரியம்மன் சிலைக்கும் கும்பாபிஷேகம் செய்தனர். 9.30 மணிக்கு புரடியாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 10 மணிக்கு மூலவர் மகா அபிஷேகம், தீபாராதனை செய்தனர். இரவு 7 மணிக்கு சாமி வீதி உலா நடந்தது. இதில் செஞ்சி மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.