Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்மை விளக்கம் பகுதி - 6 உண்மை விளக்கம் பகுதி - 8
முதல் பக்கம் » உண்மை விளக்கம்
உண்மை விளக்கம் பகுதி - 7
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2013
03:11

நாதன் நடம்

இனி, இறைவன் இயற்றும் நடனத்தின் இயல்பு யாது? என்ற வினாவுக்கு விடை கூறுகின்றார் ஆசிரியர். அவ் விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன், நாதன் நடனம் பற்றிய சில செய்திகளைத் தெரிந்து கொள்வோம்.

இறைவனது அசைவு கூத்து எனப்படுதல்

எப்பொருளின் இயக்கத்திற்கும் அடிநிலையாய் இருப்பவன் இறைவன் என்பதனை முந்திய பகுதியால் அறிந்தோம். அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற பழமொழி இதனையே உணர்த்தி நிற்கிறது. அவன் அசையவில்லையாயின் எதுவும் அசையாது என்பது கருத்து. இதனையே உடன்பாட்டு வகையில், அனைத்தும் அசைய வேண்டி அவன் அசைகின்றான் என்று கூறலாம். அவனது அசைவையே ஆடல் என்றும், கூத்து என்றும் உயர்ந்தோர் குறிப்பிட்டனர்.

இறைவனது செயல்கள் விளையாட்டு எனப்படுதல்

அனைத்தையும் அசைவிக்கும் அவனது செயலை விளையாட்டு என்று நூல்கள் கூறும். காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி என்று திருவாசகத்தில் வருதல் காணலாம். விளையாட்டு என்பது எளிதிற் செய்யும் வலிமையைக் குறிப்பது. அண்ட கோடிகளையெல்லாம் அவன் தனது நினைப்பு மாத்திரத்தால் இயக்கி வருகிறான் என்றால் அவனது ஆற்றலை என்னென்பது! அச்செயல்களை அவன் அத்துணை எளிதிற் செய்தலின் அவன் செயல்களை விளையாட்டு என்று குறிப்பிடுவது மரபாயிற்று. விளையாட்டே கூத்து என்றும் நடனம் என்றும் சொல்லப்படுகிறது.

சிவனது திருக்கூத்தே அனைத்து இயக்கத்திற்கும் காரணம்

அவனது திருக்கூத்தினாலேயே அனைத்துப் பொருள்களும் நிலைத்துத் தத்தம் இயல்பிற்கேற்பச் செயற்படுகின்றன. அவை இயங்குங்கால் அவனது கூத்தும் அவற்றோடு உடனாய் இயங்கி நிகழ்கிறது. இதனால் சிவனது திருக்கூத்தே உலகத்தின் செயற்பாடு எல்லாவற்றிற்கும் காரணம் என்பது விளங்கும்.

திருக்கூத்து நிகழும் இரண்டு இடங்கள்

இறைவன் எங்கும் அருவாய் நின்று ஆடுகின்றான். எல்லா இடங்களும் அவன் நடம் புரியும் இடமேயாயினும் அவற்றுள் இரண்டு இடங்களைச் சிறந்தனவாக எடுத்துக் கூறுவர். ஒன்று உயிர்களின் அறிவும், மற்றொன்று தில்லைச் சிற்றம்பலமும் ஆகும்.

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி என்று திருவாசகம் இவ்விரண்டிடங்களையும் குறிப்பிடும்.

உயிர்களின் அறிவில் நின்று அவன் இடைவிடாது உணர்த்தி வருகின்றான். அச்செயல் அதிசூக்கும ஐந்தொழில் எனப்படும். அதனைப் பரநடனம் எனக் குறிப்பிடுவர். புருவ நடுவில் நிகழ்வதாகிய இந்நடனம் இல்லையேல் உயிர்களுக்கு அறிவு விளங்குதல் இல்லை. ஒருநாமம், ஓருருவம், ஒன்றும் இல்லாத இறைவன் நம்மனோரும் எளிதிற் கண்டு உய்யும்படி தில்லையில் உருவும், பெயரும், தொழிலும் கொண்டு ஆடுகின்றான். உயிர்கட்குப் பிறப்பு, வீடு என்னும் இரு நிலைகளையும் தருதற்காக ஆடுகின்றான்.

நாளும் நினைக்கவேண்டுவது நாதன் நடனம்

இறைவன் எண்ணற்ற உயிர்களிடத்து என்றும் உடனாய் நீங்காது நின்று அவைகளுக்கு வேண்டும் எல்லா நலங்களையும் எப்போதும் புரிந்து வருகிறான். அவன் ஆணவத்தில் அழுந்திக் கிடந்த உயிர்களை அக்கேவல நிலையிலிருந்து எடுத்துச் சகல நிலையிற் கொண்டுவந்த அருட்செயலையும், அச்சகல நிலையில் உயிர்கள் பல வகைப் பிறப்புக்களைக் கடந்து மனிதப் பிறப்பை அடையும்படி செய்கின்ற அவனது பேருதவியையும், உயிர்கள் உலகிற் பிறந்தும் இறந்தும் உழன்று படிப்படியாகப் பக்குவ முதிர்ச்சி பெற்ற காலத்தில் குருவாய் வந்து தத்துவங்களின் இயல்புகள் தன்னியல்பு ஆகிய எல்லாவற்றையும் விளங்கக் காட்டி அம்மெய்யுணர்வின் பயனாகப்பாசநீக்கம் வருவித்து அவ்வுயிர்களைத் தானாகச் செய்து தன்னொடு சேர்த்துக் கொண்டு பேரின்பம் அளித்து வரும் பெருங்கருணையையும் பலபடியாக எடுத்துக் கூறிப்போற்றுகின்றன நமது திருமுறைகளும் சாத்திரங்களும்.

இறைவன் இவ்வாறு செய்து வரும் எண்ணிறந்த அருட்செயல்கள் யாவும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தில் அடங்குவனவாகும். அவ் வைந்தொழில்களையும் நாம் உணரும்படி காட்டி நிற்கும் திருக்கோலம் கூத்தப் பெருமான் திருவடிவமே. ஒருவராலும் அறியப்படாத சிவ முதற்பொருள் தானே தனது கருணையினால் அனைவரும் எளிதாகத் தன்னைக் காணும்படி நடனவுருக்கொண்டு அம்பலத்தில் தோன்றி நிற்கின்ற தன்மையை வியந்து,

ஆயும் நுண்பொரு ளாகியும் வெளியே
அம்பலத் துள்நின்று ஆடுவார்

என்றார் சேக்கிழர் பெருமான். மேலும் அவர், கற்பனை கடந்த சோதியாகிய அது கருணையே உருவமாகி, அற்புதக் கோலம் நீடி, திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடஞ் செய்கின்றது என்றும் போற்றினார். இந்நடனத்தை எண்ணிப் பார்க்குங்கால் அறிவுடையோர்க்கு உள்ளம் உருகாமல் இருக்குமோ? கைம்மாறு கருதாத கருணை காரணமாக இறைவன் இடையறாது நிகழ்த்தி வரும் இந்நடனத்தை ஒருபோதும் மறவாது நினைந்து அவனை உளம் உருகிப் போற்றுவதைத் தவிர உயிர்களாகிய நாம் அவனுக்குச் செய்யக்கூடியது வேறு ஒன்றும் இல்லை. அவனது நடனத்தை ஒருபோதும் மறவாது நினைவதையே கடமையாகக் கொள்ளுதல் வேண்டும் என்பதை,

கொன்றையம் முடியினாய்
கூடல் ஆல வாயிலாய்
நின்றயங்கி ஆடலே
நினைப்பதே நியமமே

என்று திருஞான சம்பந்தரும்,

அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ

என்று திருநாவுக்கரசரும் அருளியுள்ள திருவாக்குகளால் அறியலாம்.

இறைவன் கொள்ளும் அருள்திருமேனி

இறைவன் கொள்ளுகின்ற உருவத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அது மாயையினால் ஆனதன்று. உயிர்களாகிய நாமெல்லாம் மலம் உடையவர் ஆதலின் மலங்களில் ஒன்றாகிய மாயை நமக்கு உடம்பாக வந்து பொருந்துகிறது. இறைவன் மலம் இல்லாதவன் ஆதலின் மாயை அவனுக்கு உருவமாய் அமைதல் இல்லை. தூயதாகிய அவனது அறிவே அவனுக்கு உருவமாய் அமையும். அறிவின் இயல்பாவது பிறர் நிலைக்கு இரங்குதல்; கருணை கொள்ளுதல், அருளுதல், இறைவனது அறிவு பெருங் கருணையாயும், பேரருளாயும் நிற்கும். அது பற்றியே அவனது அறிவை அருள் என்றும், கருணை என்றும் குறிப்பர் பெரியோர். இறைவன் தனது அறிவினால் கொள்ளுகிற உருவம் எல்லாம் அருள் திருமேனி எனப்படுகிறது. அவனது திருமேனி அருள். ஆதலினால் அத்திருமேனியிற் காணப்படும் ஆடை, அணிகலம், படைக்கலம் முதலியனவும் அருளேயாம்; அவன் காட்சி தந்து நிற்கின்ற இடமும் அருளேயாம். இறைவனது உடம்பு அங்கம் எனப்படும். திருவடி, திருக்கரம் முதலிய உறுப்புக்கள் பிரத்தியங்கம் எனப்படும். அங்கத்துடன் கூடியுள்ள சூலம், மழு, பாம்பு, அபய முத்திரை, நெருப்பு முதலியவை சாங்கம் எனப்படும். அங்கத்தின் சார்பிலிருக்கும் ஆடை, அணிகலம், மாலை. அமரும் இருக்கை முதலியவை உபாங்கம் எனப்படும். அங்கம், பிரத்தியங்கம், சாங்கம், உபாங்கம் ஆகிய இந்நான்கும் அருளேயாம். இறைவனது திருமேனி உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வகைப்படும். அத்திருமேனிகள் அருளேயாய் நிற்க, இறைவன் அத்திருமேனிகளில் நின்று ஆடுதலை மேற்கொண்டுள்ளான்.

மந்திரத்தைத் திருமேனியாகக் கொள்ளுதல்

இனி, இறைவனுக்கு மந்திரம் சிறப்புத் திருமேனியாகச் சொல்லப்படுகின்றது. இதுபற்றிச் சிறிது சொல்ல வேண்டும். இறைவன் அனைத்து உலகங்களிலும் கலந்து அவையேயாய் நிற்கின்றான். உயிர் உடலெங்கும் கலந்து தான் சிறிதுந் தோன்றாமல் உடலேயாய் நிற்பது போன்றது இது. அவ்வாறு கலந்திருக்கும் உயிருக்கு உடம்பு வடிவமாய் அமைகிறது. அதுபோல எல்லாவற்றிலும் கலந்திருக்கும் இறைவனுக்கு அவையனைத்துமே வடிவமாய் அமைகின்றன.

எனவே எல்லாப் பொருள்களுமே இறைவனுக்குத் திருமேனிகள்தாம் என்று சொல்லலாம். ஆயினும் அவற்றுள்ளும் மந்திரங்கள் அவனுக்குச் சிறப்புத் திருமேனியாய் நிற்கின்றன. எவ்வாறெனில், சொற்களும் சொற்றொடர்களும் ஆகிய மந்திரங்கள் சுத்த மாயையில் தோன்றியவை. இறைவன் சுத்த மாயையை இடமாகக் கொண்டு நின்றே அசுத்த மாயையின் காரியமாய் உள்ள பொருள்களையெல்லாம் இயக்கி நிற்பான் என்பது நாமறிந்தது. இம்முறையில் அவன் மந்திரங்களைத் தனக்கு நேரே இடமாகக் கொண்டு அவற்றின் வாயிலாகத் தவத்தோர்க்குப் புத்தி, முத்திகளாகிய பயன்களைத் தருவான். இறைவனுக்கு மந்திரங்கள் சிறந்த வாயில் ஆதலாலும், இறைவன் அவற்றைப் பற்றி அவையேயாய் நிற்பன் ஆதலாலும், அம்மந்திரங்கள் அவனுக்குச் சிறப்புத் திருமேனிகளாய்ச் சொல்லப்படுகின்றன. கல், மண், பொன் முதலிய பொருள்களும் இறைவன் அவற்றில் கலந்துள்ள கலப்பினால் அவனுக்கு வடிவமேயாயினும், மந்திர வடிவம் அவற்றினும் சிறந்தது என்பது உணர்தற்குரியது. மந்திரங்களுள் தலையாயது ஐந்தெழுத்து மந்திரமாகும். அதுவே ஞானத்தைத் தருவது. கூத்தப்பெருமான் திருவைந்தெழுத்தைத் தனது திருவுருவமாகக் கொண்டு ஆடல் புரியும் அருட்பெருமையை ஆசிரியர் இப்பகுதியில் விளங்கக் காட்டியுள்ளார்.

இறைவன் புரியும் ஆடலின் இயல்பைக் கூற வேண்டுதல்

30. நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத்து அஞ்செழுத்தால்
உற்று உருவாய் நின்று ஆடல் உள்ளபடி  பெற்றிடநான்
விண்ணார் பொழில்வெண்ணை மெய்கண்ட நாதனே!
தண்ணார் அருளாலே சாற்று

பதவுரை

விண் ஆர் பொழில்     வானை அளாவி எழுந்த சோலைகள் சூழ்ந்த
வெண்ணை         திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியுள்ள
மெய்கண்ட நாதனே     மெய்கண்ட தேவரே,
நல் தவத்தோர்         நல்ல தவத்தைச் செய்தவர்கள்
காண         காணும்படி
நாத அந்தத்து         நாதத்தின் முடிவில்
அஞ்செழுத்தால்         திருவைந்தெழுத்தால்
உற்ற உருவாய் நின்று     திருவுருக்கொண்டு
ஆடல்         முதல்வன் செய்யும் திருக்கூத்தின் இயல்பை
உள்ளபடி நான் பெற்றிட     உள்ளவாறு அறிந்து அடியேன் நன்மை எய்தும்படியாக
தண்ணார் அருளால்     குளிர்ந்த அருளால்
சாற்று         சொல்லியருள வேண்டும்

பொழிப்புரை

நல்ல தவம் செய்தவர் காணும்படி நாதத்தின் முடிவில் திருவைந்தெழுத்தால் திருவுருக் கொண்டு சிவபெருமான் திருக்கூத்தினை இயற்றுவன். திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளியுள்ள மெய்கண்ட நாதரே, அத் திருக்கூத்தின் இயல்பை அடியேன் உள்ளவாறு அறியும் வகையில் அதனை விளக்கியருள வேண்டும் என மாணவர் வேண்டுகிறார்.

விளக்கம்

நாதாந்த நடனம்

தத்துவங்களில் இறுதியாக, எல்லாவற்றிற்கும் மேலே உள்ளதாகச் சொல்லப்படுவது நாதம் ஆகும். அதனையும் கடந்தால்தான் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்ததாகும். தத்துவங்களைக் கடத்தலாவது ஆன்மா அவற்றைத் தனக்கு வேறாகக் கண்டு நீங்குதல். நிலம் முதல் நாதம் ஈறாகிய தத்துவம் முப்பத்தாறனையும் கடந்த நிலையில்  அவை நீங்கிய நிலையில்  ஆன்மா தான் அவற்றின் வேறாய் இருத்தலை உணரும். ஆணவத்திற்கு மாற்றாகவே மாயையிலிருந்து தத்துவங்கள் இறைவனால் கூட்டப்பட்டன. ஆதலால் அவை நீங்கிய இடத்து ஆணவம் நிற்றல் இயல்பாகும். ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம். ஒன்று மேலிடின் ஒன்று ஒளிக்கும் என்று கூறியுள்ளபடி, பக்குவம் இல்லாத பொழுது சிவம் மறைந்திருக்க ஆணவ இருள் மேலிட்டிருந்தது. பக்குவம் வந்துற்ற இப்பொழுது ஆணவம் மேலிட மாட்டாமல் இருக்க, சிவமே மேலிடும். சிவம் மேலிட்டபோது ஆன்மா அதனைச் சார்ந்து, தான் வேறு தோன்றாது அதனோடு ஒன்றிவிடும் கதிரொளியில் விளக்கொளி போல உயிருணர்வு சிவத்தில் அடங்கி நிற்கும். அவ்விடத்தில் ஆன்மா பேரா இன்பப் பெருவெள்ளத்தில் அழுந்தும். அவ்வாறு நாதாந்தத்தில் ஆனந்த வாரிதியின் ஆன்மாவை அழுத்தும் குறிப்புடையது கூத்தப் பெருமான் செய்யும் திருக்கூத்து. அத்திருக்கூத்தின் இயல்பை விளக்கியருளும்படி மாணவர் வேண்டுகிறார்.

திருநடனம் செய்யும் இடம்

31. எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள்  சிட்டன்
சிவாயநம என்னும் திருஎழுத்து அஞ்சாலே
அவாயம் அற நின்று ஆடு வான்

பதவுரை

புதல்வா         நன்மாணாக்கனே,
எட்டும் இரண்டும் உருவான     ய என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிற
லிங்கத்தே         உயிராகிய ஆதாரத்தில்
நட்டம்         சிவபிரான் செய்கின்ற திருக்கூத்தினை
நவிலக் கேள்         யாம் சொல்லக் கேள்.
சிட்டன்         மேலோனாகிய சிவபிரான்
சிவாயநம என்னும்     சிவாயநம என்கிற
திருஎழுத்து அஞ்சால்     திருவைந்தெழுத்துக்களையே திருமேனியாகக் கொண்டு
அவாயம் அற         உயிர்களின் பிறவித் துன்பம் நீங்கும் படியாக
நின்று ஆடுவான்         ஆடல் புரிவான் என அறிவாயாக.

பொழிப்புரை

ஆசிரியர் திருக்கூத்தின் இயல்பைக் கூறத் தொடங்குகிறார். நன் மாணாக்கனே, ய என்னும் எழுத்தால் குறிக்கப்படுவது உயிர். அந்த உயிராகிய ஆதாரத்தில் சிவபிரான் செய்கின்ற திரு நடனத்தின் இயல்பைக் கூறுகின்றோம். கேள். அம் முதல்வன் திருவைந்தெழுத்தையே திருமேனியாகக் கொண்டு உயிர்களின் பிறவித் துன்பம் நீங்கும்படி நின்று ஆடுவான் என அறிவாயாக.

விளக்கம்

இறைவன் ஆடும் இடம்

இறைவன் எங்கும் நிறைந்தவன், உருவம் இல்லாதவன். அவன் நடனம் செய்கிறான் என்றால் அதற்கு ஓர் இடம் வேண்டும் அல்லவா? அவனுக்கு உருவம் வேண்டும் அல்லவா? அவன் ஆடல் புரிவதற்குக் கொள்ளும் இடம் எது? உருவம் எது? என்ற வினாக்களுக்கு இச்செய்யுளில் விடை கூறுகிறார் ஆசிரியர். எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே என்றதனால் அவன் ஆடும் இடம் இன்னது என்பதைப் புலப்படுத்தினார். லிங்கம் என்பதற்கு அடையாளம் அல்லது குறி என்பது நேர் பொருள். இங்கு அச் சொல் ஆதாரம் அல்லது இடம் என்ற பொருளில் வந்தது. எட்டும் இரண்டும் உருவான இடமே அவன் ஆடல் புரியும் இடமாகும். இவ்வாறு மறைபொருளாக வைத்து உணர்த்தினார் ஆசிரியர். எட்டும் இரண்டும் என்பது நம்நாட்டில் வழங்கி வரும் ஒரு பழைய வழக்கு.

பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டினோ டிரண்டும் அறியேனையே

என்று திருவாசகத்தில் வந்துள்ளது.

எட்டும் இரண்டும் என்பதற்குச் சைவ சித்தாந்தத்தில் சொல்லப்படும் பொருளைக் காண்போம். எட்டும் இரண்டும் கூடியது பத்து. பத்து என்னும் எண்ணைக் குறிக்கும் எழுத்து ய என்பது. திருவைந்தெழுத்தில் ய என்னும் எழுத்து உயிரைக் குறிக்கும். ஆகவே, எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே என்பது, பத்தின் அறிகுறியான ய என்னும் எழுத்தால் குறிக்கப்படும் ஆன்மாவாகிய இடத்தில் எனப் பொருள்படுவதாயிற்று. உடம்பெங்கும் உயிர் இருப்பினும் இரண்டு இடங்களை உயிர் சிறப்பாகப் பற்றி நிற்கும். அவ்விடங்களாவன இதயம், புருவநடு என்பன. உயிர் சிறப்பாகப் பொருந்தி நிற்கும் இந்த இரண்டு இடங்களிலும் இறைவனது நடனம் நடைபெறுகிறது. உயிரின் அறிவு நிலைத்து நிற்கும் இதயத்திலும், விளக்கம் பெற்றுத் திகழும் புருவ நடுவிலும் அவ்வறிவை இடமாகக் கொண்டு, உயிரை நிலைப்பித்தும் அறிவித்தும் இறைவன் நடம் புரிகின்றான் என்பது ஈண்டு அறியத்தக்கது.

ஆடுதற்குக் கொள்ளும் உருவம்

இறைவன் ஆடும் இடம் ஆன்ம அறிவு என்று பார்த்தோம். இனி, ஆடுதற்குக் கொள்ளும் உருவம் எது என்பாராய், சிவாயநம என்னும் திருவெழுத்து அஞ்சாலே என்கிறார் ஆசிரியர். எனவே திருவைந்தெழுத்தைத் திருமேனியாகக் கொண்டு இறைவன் நடனம் புரிகிறான் என்பது விளங்கும். ஆன்மாவின் அறிவு தொழிற்படுதற்கு இன்றியமையாத் துணையாய் இருப்பது நாதம் ஆகும். நாதத்தில் தோன்றுவன மந்திரங்கள். அம்மந்திரங்களை இறைவன் தனக்கு வடிவமாகக் கொள்வான். அம்மந்திரங்களுள் சிறந்தது திருவைந்தெழுத்தே யாகலின் அதனையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு சிவபிரான் ஆன்ம அறிவினிடத்து விளங்குகிறான்.

சிட்டன்

சிட்டன் என்பதற்கு உயர்ந்தோன் என்பது பொருள். அஃது இங்குச் சிவபிரானைக் குறித்து நின்றது. திருவாசகத்தில்,

சிட்டனே சிவலோகனே சிறு
நாயினும் கடையாய வெங்
கட்டனேனையும், ஆட்கொள்வான் வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே

என்ற பாடலில் சிட்டன் என்ற சொல் சிவபெருமானைக் குறிப்பதாய் வந்துள்ளமை காணலாம். திருநாவுக்கரசர் அச்சொல்லை ஒரு பாடலில் நான்கு அடியிலும் அமைத்துப் பாடியுள்ளார்.

சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச்
சிட்டர்பால் அணுகான் செறுகாலனே

என்பது அப்பாடல். அச்சொல் முதலடியில் முனிவரையும், இரண்டாமடியில் தில்லை வாழ் அந்தணரையும், மூன்றாமடியில் நடராசப் பெருமானையும், நான்காமடியில் அடியாரையும் குறிப்பதாம்.

அஞ்செழுத்து உரு

32. ஆடும் படிகேள்நல் அம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியிலே நகரம்  கூடும்
மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகரும்முகம் வாமுடியப் பார்.

பதவுரை

ஐயனே     நன்மாணாக்கனே,
நல் அம்பலத்தான் உயிர்களுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கும் அம்பலவாணன்
ஆடும் படி கேள்     திருக்கூத்து இயற்றும் முறையைக் கேள்.
நாடும்     ஆன்பர்கள் விரும்பும்
திருவடியில் நகரம்  திருவடி நகாரமாயிருக்கும்.
உதரம்     திருவயிறு
கூடும் மகரம்     பொருந்திய மகாரமாகும்.
வளர் தோள்     உயர்ந்த திருத்தோள்
சிகரம்     சிகாரமாகும்.
பகரும் முகம் வா  வேதங்களையும் ஆகமங்களையும் அருளிய திருமுகம் வா ஆகும்.
முடி ய      திரு முடி ய ஆகும்.
பார்     இவ்வாறு பஞ்சாக்கரம் அவனுக்குத் திருமேனியாய் அமையும் முறையை உணர்வாயாக.

பொழிப்புரை

நன் மாணாக்கனே, கூத்தப் பெருமான் ஆடும் முறையைக் கேள். அன்பர்கள் நாடும் திருவடி ந காரம் ஆகும். வயிறு ம காரம் ஆகும். தோள்கள் சி காரம் ஆகும். முகம் வா ஆகும். திருமுடி ய ஆகும்.

விளக்கம்

திருவைந்தெழுத்தால் அமைந்த திருமேனி

இறைவன் நடனம் புரிதற்கு இடம் ஆன்மா என்றும், அவனுக்குத் திருமேனி பஞ்சாக்கரம் என்றும் முன்னே கூறப்பட்டது. ஆன்மாக்களைப் பெத்தான்மாக்கள் என்றும், முத்தான்மாக்கள் என்றும் இருவகைப்படுத்தலாம். பாசத்தில் உள்ளவை பெத்தான்மாக்கள். பாசத்தினின்றும் நீங்கியவை முத்தான்மாக்கள். அவ்விருவகை ஆன்மாக்களுக்கும் இறைவன் செய்பவை இரு வகையான ஐந்தொழில்களாகும். எனவே அவ்விருவகையான ஐந்தொழில்களை உணர்த்தும் இருவகை நடனங்களை இறைவன் புரிகின்றான் என்பது விளங்கும். அதற்கேற்பப் பஞ்சாக்கரம் அவனுக்குத் திருமேனியாய் அமையும் பொழுது இருவகையாகவே அமையும். அந்த இருவகையினையும் இச்செய்யுளாலும், அடுத்து உள்ள செய்யுளாலும் உணர்த்துகிறார் ஆசிரியர். இச்செய்யுள் நகாரம் முதலாக அமையும் தூல பஞ்சாக்கர வடிவத்தை உணர்த்தியது. இவ்வாறு கண்டு வணங்குவார்க்கு உலகப் பயனே விளைவதாகும்.

அஞ்செழுத்து உரு

33. சேர்க்கும் துடிசிகரம் சிற்கனவா வீசுகரம்
ஆர்க்கும்யகரம் அபயகரம்  பார்க்கில் இறைக்கு
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும் மகரம்அது தான்.

பதவுரை

பார்க்கில்     ஆராய்ந்தால்
இறைக்கு     கூத்தப் பெருமானுக்கு
சேர்க்கும் துடி     ஏந்திய உடுக்கையை உடைய திருக்கரம்
சிகரம்     சிகாரம் ஆகும்.
வீசு கரம்     வீசிய திருக்கரம்
சித் கன வா     ஞான உருவான வா ஆகும்
அபய கரம்     அஞ்சற்க என்று காட்டும் திருக்கரம்
ஆர்க்கும் யகரம்     யகாரம் ஆகும்
அங்கி     நெருப்பு ஏந்திய திருக்கரம்
நகரம்     நகாரம் ஆகும்.
அடிக்கீழ் முயலகனார்  முயலகனைக் கீழே அழுத்தும் திருவடி
தங்கும் மகரம்     மகாரம் ஆகும்.

பொழிப்புரை

உடுக்கையை ஏந்திய திருக்கை சிகாரம். வீசிய திருக்கை ஞான உருவாகிய வா ஆகும். அஞ்சற்க என்று காட்டும் அபயத்திருக்கை யகாரம். நெருப்பு ஏந்திய திருக்கை நகாரம். முயலகனைக் கீழே அழுத்தும் திருவடி மகாரம் ஆகும்.

விளக்கம்

கூத்தப் பிரானது திருவுருவத்தில் உடுக்கை, வீச்சு, அமைப்பு, நெருப்பு என்னும் இவைகளையுடைய நான்கு கைகளையும், ஊன்றிய திருவடியையும் முறையே சி, வா, ய, ந, ம என்னும் எழுத்துக்களாகக் கண்டு துதித்து வணங்குக என்பது கூறப்பட்டது.

இச்செய்யுள் சிகாரம். முதலாக அமையும் சூக்கும பஞ்சாக்கர வடிவத்தை விளக்கிற்று.

34. ஓங்காரமே நல் திருவாசி உற்றுஅதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம்  ஆங்காரம்
அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல்இது
பெற்றார் பிறப்பு அற்றார் பின்

பதவுரை

நல் திருவாசி     இறைவனது திருவுருவைச் சூழ்ந்திருக்கும் ஒளிவட்டமான திருவாசி
ஓங்காரம்     ஓங்காரமாகும்.
நிறை சுடர்     அத்திருவாசியில் அமைந்துள்ள நிறைந்த சுடர்கள்
அதனில் உற்று     ஓங்காரத்தில் தோன்றி
நீங்கா எழுத்து ஆம்  அதினின்று நீங்காமல் உள்ள முதல் எழுத்துக்கள் ஆகும்.
அணி அம்பலத்தான்  அழகிய சிற்றம்பலம் உடையானது
ஆடல் இது     ஆடலின் இவ்வியல்பை
ஆங்காரம் அற்றார் அறிவர்  யான் எனது என்னும் செருக்கு நீங்கப் பெற்றவரே அறிவர்.
பெற்றார்     இதனையறிந்து வழிபடும் பேறு பெற்றார்
பின் பிறப்பு     இனிப் பிறப்பை
அற்றார்     அறுத்துக் கொண்டவராவார்.

பொழிப்புரை

ஓம் என்னும் பிரணவமே அவனைச் சூழ்ந்துள்ள திருவாசியாகும். அப்பிரணவத்தில் தோன்றிய அக்கரங்கள் ஐம்பத்தொன்றும் திருவாசியில் விளங்கும் சுடர்களாகும். முதல் ஒலியாகிய ஓங்காரமாம் திருவாசியுள், அவ்வோங்காரத்தின் உள்ளொளியாய் விளங்கி நிற்பவன் கூத்தப் பெருமான். அவனது கூத்தின் இயல்பை யான் எனது என்னும் செருக்கு அற்றவரே அறிவர். அவ்வாறு அறிந்து வழிபடும் பேறு பெற்றவர் பின் பிறவாத நிலையைப் பெற்றவர் ஆவர்.

விளக்கம்

ஓங்காரமும் இறைவன் திருவுருவும்

உலகம் பொருளுலகம் எனவும், சொல்லுலகம் எனவும் இரு வகையாய் அமைந்துள்ளது. பொருள் வடிவாய் உள்ளவை (புவனம், தத்துவம், கலை) பொருளுலகம் ஆகும். ஒலிவடிவாய் வழங்கும் பலவகை மொழிகள் சொல்லுலகம் ஆகும். சொல்லுலகம் எழுத்து, சொல், சொற்றொடர் என மூன்று நிலைமையை உடையது. எழுத்து வடமொழி பற்றி ஐம்பத்தொன்று எனக் கொள்ளப்படும். ஐம்பத்து மூன்று என்று கூறும் வழக்கும் உள்ளது. இவ்வெழுத்துக்களுள் அனைத்து மொழிகளின் எழுத்துக்களும் அடங்கும் என்னும் கருத்தினால் இவற்றை மாதிருகாக்கரங்கள் (தாய் எழுத்துக்கள்) என்று குறிப்பிடுவர். சொல்லுலகம் ஆகிய அனைத்து மொழிகளுக்கும் மூலமாய் இருப்பது நாதம் ஆகும். நாதம் ஓம் என்னும் குறியீட்டால் குறிக்கப்படும். அதனால், அது ஓங்காரம் எனப்படும். இன்னும், ஓங்காரம் ஐந்து கூறுகளை உடையதாகச் சொல்லப்படும். அவை அ, உ, ம், விந்து, நாதம் என்பன. இவற்றுள் முதலில் உள்ள மூன்றும் நம் செவியால் உணரப்படும் அகரம் முதலியன அல்ல. ஆயினும் அகரம் முதலியவற்றோடு ஒத்த தன்மை உடைமையால் அவையும் அகரம் முதலியனவாகவே ஒப்புமை பற்றிக் கூறப்படுகின்றன. ஓங்காரத்தின் கூறுகளாகிய அகரம் முதலிய ஐந்தும் பஞ்சாக்கரம் என்று சொல்லப்படும். ஆயினும் அவை திருவைந்தெழுத்தாகிய பஞ்சாக்கரம் போன்றவை அல்ல. ஆதலால் இவை சூக்கும பஞ்சாக்கரம் என்றே குறிக்கப்படும். இறைவன் அகர, உகர, மகர, நாத, விந்துக்களாய் நின்று, அந்தக் கரணங்களை இயக்கிப் பொருளுணர்வைத் தருகின்றான் என்பது பற்றி,

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா

என்று அருளிச் செய்தார் மாணிக்கவாசகர்.

பொருளுலகம் அனைத்திற்கும் முதல்வன் ஆகிய கடவுளே சொல்லுலகத்திற்கும் முதல்வன் ஆதலின் ஓங்காரத்தால் குறிக்கப்படுபவன் அவனே என்று நூல்கள் கூறும். ஓங்காரமே அவனது திருவுருவைச் சூழ்ந்துள்ள ஒளிவட்டமாகிய திருவாசி என்பதும், அத்திருவாசியில் அமைந்துள்ள 51 அல்லது 53 என்னும் எண்ணிக்கையுள்ள சுடர்கள், மாதிருகாக்கரங்கள் என மேலே குறிப்பிட்ட முதல் எழுத்துக்கள் என்பதும் உண்மை விளக்கத்தால் நாமறிந்த செய்திகள். நாம் கோயிலுக்குச் செல்லுகிறோம். கோயில் எத்தனைப் பெரியதாக இருந்தாலும், மூலவர் இருக்கும் கருவறை சிறியதாகத்தான் இருக்கும். ஏன் இப்படி இருளடைந்த குகை போன்ற இடத்தில் மூலமூர்த்தியை வைத்திருக்கிறார்கள்? என்று சிலர் நினைக்கலாம். நம் முன்னோர்கள் தெரியாமல் அப்படிச் செய்யவில்லை. ஒரு கருத்தோடுதான் அவ்வாறு அமைத்தார்கள். கோயிலிலுள்ள மூலஸ்தானம் நம் இதயத்தைப் போன்றது. இதயம் போன்ற சன்னல் இல்லாத இடத்தில் ஆண்டவனை வைத்தார்கள். கோயிலுக்குப் போய்க் கர்ப்பக் கிருகத்தில் இருக்கும் ஆண்டவன் முன் நின்று பார்த்தால் இருட்டில் தெரியாது. கூர்ந்து பார்த்தால்தான் தெரியும். பூசை செய்கிறவர் தீபாராதனை காட்டும் பொழுது மிக விளக்கமாகத் தெரியும். தீபாராதனை காட்டும் போது தீபத்தால் ஓங்கார எழுத்தை எழுதுவது போலக் கையைச் சுற்றிக் காட்டுவார். இந்த ஓங்கார ஒளி வட்டத்திற்குள் நாம் இறைவனது உருவத்தைக் காண வேண்டும். அப்படிக் காணுகிற திருவுருவை மனத்தில் நிலை நிறுத்தப் பழகுதல் வேண்டும்.

அம்பலத்தான் ஆடலை அறிந்து வழிபடும் பேறு பெற்றவர் :

கூத்தப் பெருமானின் எடுத்த பொற்பாதத்தில் தம் அன்பை வைத்தவர் நிலத்தின் மேல் நெடுங்கிடையாய் விழுவர், பின்பு திருக்கூத்தினைக் காணவேண்டி எழுவர். தம்மையே தாம் மறந்து விடுவர். தற்பெருமை என்பது அவர்களுக்கு எங்கேயிருக்கும்? அஃது அறவே கெட்டொழியும்.

கையும் தலைமிசை புனைஅஞ் சலியன;
கண்ணும் பொழி மழை ஒழியாதே
பெய்யும் தகையன; கரணங் களும்உடன்
உருகும் பரிவின; பேறெய்தும்
மெய்யும் தரை மிசை விழும்; முன்பெழு தரும்
மின் தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடும் அவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால்  (பெரியபுராணம்)

திருக்கூத்தை அன்போடு தரிசிப்பவர் நிலை இது.

பிறவியறுதலை எண்ணாதவர்  அதனைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாதவர் திருக்கூத்தினைப் புறத்தே மட்டும் ஒருகாற் கண்டு ஒழிவர். பிறவியறுதலை வேண்டும் ஞானியர் அதனை எப்பொழுதும் உள்ளத்தே கண்டு கொண்டிருப்பர்.

ஊன நடனம்
தூல ஐந்தொழில்

இறைவன் செய்யும் ஐந்தொழில்களைப் பற்றி முன்னே விரிவாக அறிந்தோம் (செய்யுள் 8) படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றும் உலகத்தின் மேல் நிகழ்வன என்றும், மறைத்தலும் அருளலும் ஆகிய இரண்டும் உயிரிடத்தில் நிகழ்வன என்றும் அறிந்தோம். அவை தூல ஐந்தொழில் எனப்படும். இது தவிர, சூக்கும ஐந்தொழில், அதிசூக்கும ஐந்தொழில் என இரண்டு சொல்லப் பெறும்.

சூக்கும ஐந்தொழில்

நமக்கு உறக்கம் என்பது ஒடுக்க நிலையாகும். உறக்கத்திலும் இறைவனது செயல் நம்மிடத்தில் நிகழ்கிறது. உறங்கச் செல்லும் போது ஒரு சிக்கலை நினைத்துக் கொண்டு அதை எப்படித் தீர்ப்பது என்று கவலையோடு நம்மையறியாமல் கண்ணயர்ந்து தூங்கி விடுவோம். மறுநாள் விடிந்து கண்விழித்த போது அச்சிக்கலை இப்படித்தான் தீர்க்க வேண்டும் என்ற தெளிவு நமக்கு ஏற்பட்டு விடுகிறது. இத் தெளிவு எப்படி உண்டாயிற்று? இதற்கு நம்மால் விளக்கம் சொல்ல முடியாவிடினும் உறக்க நிலையில் இறைவன் நுட்பமாக நமக்குச் செய்த உதவியே அது எனலாம். இவ்வாறு இறைவன் செய்வது சூக்கும ஐந்தொழில் எனப்படும். இனி, மற்றொரு ஒடுக்க நிலையும் உண்டு. முற்றழிப்புக் காலத்தில் இறைவன் எல்லாவற்றையும் ஒடுக்கித் தான் தனியனாய் நிற்கிற நிலை அது. அவ்வாறு ஒடுக்கி நிற்கும் முதல்வன் உலகத்தை மீளத் தோற்றுவித்தற் பொருட்டு அதற்கு ஆவனவற்றைச் செய்வான். அந்நிலையில் அவன் செய்வனவும் சூக்கும ஐந்தொழில் எனப்படும். அத்தொழில்கள் இப்படிப்பட்டவை எனத் தனித் தனியாக வகுத்துக் காட்டுதல் அரிதாகும்.

அதிசூக்கும ஐந்தொழில்

இனி, அதிசூக்கும ஐந்தொழிலை நோக்குவோம். உயிரானது புருவ நடுவில் நின்று, கருவிகளோடு கூடிப் பொருள்களை அறிந்து வருவதாகிய விழிப்பு நிலையில் இறைவன் உயிர்க்குயிராய் உள்நின்று இடைவிடாது உணர்த்தி வருகிறான். அவ்வாறு உணர்த்தவில்லையாயின் உயிர்க்கு அறிவு நிகழாது. இறைவன் உயிர்க்கு உணர்த்தும் முறைமையே அதி சூக்கும ஐந்தொழில் எனப்படுகிறது. இத்தொழில்களையும் தனித்தனியாக விளங்கிக் கொள்ளுதல் அரிதாகும்.

ஊன நடனம்  பெயர் விளக்கம்

தூலம், சூக்குமம், அதிசூக்குமம் ஆகிய இம் மூவகை ஐந்தொழில்களும் ஊன நடனம் என ஒன்றாய் வைத்துச் சொல்லப்படும். இத்தொழில்களால் உயிர்க்கு உண்டாவது உலக நுகர்ச்சியும், சிற்றறிவும் ஆகும். இவற்றால் உயிர் உலக வாழ்விற் கட்டுண்டு நிற்கிறது. இது பற்றியே இறைவனது செயல் ஊன நடனம் எனப்பட்டது. ஞான நடனம் என மற்றொன்று இருத்தலால், ஊன நடனமாகிய இதில் உள்ள ஊனம் என்பது ஞானம் இல்லாமையைக் குறித்தது. ஊன நடனத்தை உணர்த்துவது இச்செய்யுள்.

35. தோற்றம் தடிஅதனில் தோயும் திதிஅமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்  ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு

பதவுரை

துடி அதனில்     உடுக்கையை இயக்கும் திருக்கையில்
தோற்றம்     படைத்தல் தொழிலையும்,
அமைப்பில்     அமைத்த திருக்கையில்
தோயும் திதி     ஆன்மாப் பொருந்தும் காத்தல் தொழிலையும்,
சாற்றியிடும்     சொல்லப்பட்ட
அங்கியில்     நெருப்பு ஏந்திய திருக்கையில்
சங்காரம்     அழித்தல் தொழிலையும்
ஊற்றமா     உறுதியாக
ஊன்று     முயலகன் மீது ஊன்றிய
மலர்ப் பதத்தில்     மலர் போன்ற திருவடியில்
உற்ற     பொருந்திய
திரோதம்     மறைத்தல் தொழிலையும்
நான்ற     தூக்கிய
மலர்ப் பதத்தே     மலர் போன்ற திருவடியில்
முத்தி     பிறவியினின்றும் எடுத்துப் பேரின்பத்தில் வைப்பதாகிய அருளுதல் தொழிலையும்,
நாடு     கண்டுகொள்

பொழிப்புரை

உடுக்கையால் ஒலியை உண்டாக்குதல் படைத்தல் தொழிலையும், அபயத் திருக்கரம் காத்தல் தொழிலையும், நெருப்பை ஏந்தியிருத்தல் அழித்தல் தொழிலையும், உறுதியாக முயலகன் மேல் ஒரு காலை ஊன்றியிருத்தல் மறைத்தல் தொழிலையும், மற்றொரு காலை உயரத் தூக்கியிருத்தல் அருளல் தொழிலையும் உணர்த்தும். இவ்வாறாகக் கூத்தப் பெருமானது திருவுருவில் தோன்றும் குறிப்பை அறிந்து கொள்.

விளக்கம்

இறைவனது நடனத்தில் ஐந்தொழில்களும் விளங்குதல் :

சிவபெருமானது நடனம் ஐந்தொழிற்கும் தானே முதல்வன் என்பதை உணர்த்தும். அந் நடனத்தில் ஐந்தொழிலும் விளங்குவதை இச் செய்யுள் அழகிய முறையில் விளக்குகின்றது. எண்ணிறந்த உயிர்களுக்கு அவ்வவற்றிற்கு ஏற்ற உடம்பைக் கொடுத்து உலகத்தில் இயங்கச் செய்வதே படைத்தல். தமருகத்தை அசைத்து நாதத்தை உண்டாக்கும் கை உலகத்தைத் தோற்றுவித்தலைக் குறிக்கும். இங்ஙனம் படைத்தது மட்டுமின்றி அவைகளைக் காக்கவும் செய்கின்றான். தாயின் வயிற்றில் உள்ள மகவுக்கு அவளறியாதபடி உணவு ஊட்டிக் காக்கின்ற இறைவனது கருணையை என்னென்பது! கூத்தப் பெருமானது வடிவத்தில் அபயம் தரும் கை காத்தலைக் குறிக்கும். இவ்வாறு காத்தலைப் புரிகின்ற இறைவன் அவைகளை அழித்தும் விடுகின்றானே. அழித்தல் என்பது அச்சமும் வருத்தமும் தரும் செயல் அல்லவா? அதனைச் செய்வது எதற்கு? என்று வினவலாம். உண்மையில் அழித்தல் என்பது உயிர்களின் நன்மையின் பொருட்டே செய்யப்படுகிறது என்பதை உணர்தல் வேண்டும். உடம்போடு கூடிய உயிர்கள் அவ்வுடம்பினால் வரும் அளவற்ற துன்பங்களை அனுபவித்துப் பிறப்பு இறப்புக்களில் அகப்பட்டுச் சுழன்று பெரிதும் இளைப்பினை அடையும். அவ்விளைப்பு நீங்குதற் பொருட்டே உயிர்களை உடம்பினின்றும் பிரித்துச் சிறிது காலம் ஓய்வு கொள்ளும்படி செய்கின்றான். எனவே அழித்தல் என்பதும் உயிர்களின் நன்மை கருதியே செய்யப்படுவதாகும். இறைவனது நடனக் கோலத்தில் தீ யேந்திய கை அழித்தலைக் காட்டும்.

இனி, மறைத்தல் என்பது இறைவன் உயிர்களுக்குத் தன்னைக் காட்டாது உலகத்தையே காட்டி உலக போகத்தை நுகரச் செய்தல். உயிர் தன்னையறியும் பக்குவத்தை வருவித்தற் பொருட்டே இது செய்யப்படுகிறது. திருக்கூத்தில் முயலகனை மிதித்துள்ள திருவடி மறைத்தலைத் தெரிவிக்கும். அருளல் என்பது பாசங்களையெல்லாம் நீக்கி உயிர்களுக்குப் பேரின்பத்தை வழங்குதல். கூத்தப்பிரானது தூக்கிய திருவடி, பிறவியினின்றும் எடுத்துத் தன் திருவடி நிழலில் வைத்து அருளுதலை உணர்த்துவதாகும்.

இனி, ஞான நடனம்

முதல்வன் உயிர்கட்குப் பிறப்பு, வீடு என்னும் இரு நிலைகளையும் தருதற்காக ஆடுகின்றான். அவற்றுள் பிறப்பைத் தருவது ஊன நடனம் ஆயிற்று. வீட்டைத் தருவது ஞான நடனம் ஆகும்.

ஊன நடனத்தின் பயனாக உயிர் உண்மையை உணரும். தத்துவங்கள் அனைத்தையும் தான் அல்ல என்று கண்டு கழித்துத் தன்னை அவற்றிற்கு வேறான சித்துப் பொருளாக உணரும்; பின்பு, தான் சித்தப் பொருளாயினும் தானே அறியும் சூக்கும சித்து அன்று, அறிவித்தால் அறியும் தூல சித்து எனத் தனது உண்மையை உணரும். அதனால், தானே அறிந்தும் உயிர்களுக்கு அறிவித்தும் நிற்கும் சூக்கும சித்து தலைவனாகிய சிவன் என அறியும். இவ்வறிவு நூலறிவாய்  அபர ஞானமாய் நில்லாது, அதனை அனுபவமாக  பர ஞானமாகப் பெறும். இதுவே பக்குவம் முதிர்ந்த நிலையாகும். தன்னையும் தலைவனையும் உணர்ந்த நிலையாகும். தலைவனை உணர்ந்தவர் அவனே தமது வாழ் முதல் எனக் கொள்வர். தம் வழியில் நில்லாது அவன் வழியில் நிற்பர். முதல்வன் அவரை மும்மலம் நீக்கி அருள் நிலையில் வைத்துப் பேரின்பத்தை நுகரச் செய்வன் இவ்வுதவியும் ஐவகைத் தொழில்களாக வைத்துச் கூறப்படும். இது ஞான நடனம் எனப் பெயர் பெறுகிறது. இதனை உணர்த்துகிறது இச்செய்யுள்.

36. மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கிஅருள் தான் எடுத்து  நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தான்எந்தை யார்பரதம் தான்

பதவுரை

மாயை தனை உதறி     (பக்குவ ஆன்மாவின் உணர்விலிருந்து) மாயா மலத்தை நீங்கச் செய்து,
வல்வினையைச் சுட்டு     அவ்வுயிரைத் தொடரும் வலிய கன்ம மலத்தைச் சுட்டெரித்து,
மலம்         மூல மலமாகிய ஆணவ மலத்தை
சாய         அதன் ஆற்றல் கெடும்படி
அமுக்கி         மெலிவித்து அடக்கி,
அருள்தான் எடுத்து     பிறப்பு இறப்புக்களில் சுழன்று வந்த அந்நிலையினின்றும் எடுத்து அருள் நிலையில் வைத்து
நேயத்தால்         பெருங்கருணையினால்
ஆனந்த வாரிதியில்     பேரின்பக் கடலில்
ஆன்மாவை         அவ்வுயிரை
அழுத்தல் தான்         அழுந்தும்படி செய்தலே
எந்தையார்         எம் தந்தையாகிய சிவபெருமான்
பரதம்தான்         இயற்றும் திருக்கூத்து ஆகும்.

பொழிப்புரை

துடியை அசைத்தல் பக்குவம் எய்திய உயிரின் உணர்விலிருந்து மாயையை உதறி விலக்குவதாகும். நெருப்பை ஏந்தியுள்ள கை அவ்வுயிரைத் தொடரும் வலிய வினையைச் சுடுவதாயிருக்கும். ஊன்றிய திருவடி ஆணவ மலத்தை வலிகெட்டு நிற்கச் செய்வதாகும். எடுத்த திருவடி பிறப்பு இறப்புக்களில் சுழன்று வந்த அவ்வுயிரை அந்நிலைகளினின்றும் உயர்த்தி அருள் நிலையில் வைப்பதாகும். எடுத்த அத்திருவடியின் வளைவும், அதனைக் காட்டி நிற்கும் வீசிய கையும், யான் எனது என்னும் செருக்கு அற அடங்கி நில் என்னும் பொருள்பட அமைத்த திருக்கையும் உயிரைப் பேரின்பத்தில் அழுத்தும் குறிப்பு உடையவை ஆகும்.

விளக்கம்

திருக்கூத்தினைத் தரிசிக்கும் முறை

சிவனது திருக்கூத்தினைக் காணுங்கால், அதில் உதறிய கையை மாயையை உதறும் கையாகக் காணுதல் வேண்டும். வீசி அணைத்த கையை வருக என்று அழைத்து அருள் வழங்கும் கையாகக் காணுதல் வேண்டும். அமைத்த கையை இனிதிருக்க எனத் தேற்றம் தரும் கையாகக் காணுதல் வேண்டும். தீ ஏந்திய கையை வினைகள் கெடந்திருவருள் வழி நிற்கச் செய்யும் கையாகக் காணுதல் வேண்டும். ஊன்றிய திருவடியை மலத்தை மிதித்து நிற்கும் திருவடியாகக் காணுதல் வேண்டும். திருக்கூத்தினை உண்மையில் தரிசிக்கும் முறைஇதுவாகும்.

இனி, ஆனந்த நடனம்

இவ்வுலகில் பக்குவ ஆன்மாக்களுக்குச் சீவன் முத்தி நிலையில் பேரானந்தத்தை இடையறாது தருகின்ற கூத்து இதுவாகும்.

37. மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்
தான் அந்த மானிடத்தே தங்கியிடும்  ஆனந்தம்
மொண்டுஅருந்தி நின்றுஆடல் காணும்அருள் மூர்த்தியாக்
கொண்டதிரு அம்பலத்தான் கூத்து

பதவுரை

மோன அந்தம்     மோனம் ஆகிய முடிநிலையில் நிற்கும்
மா முனிவர்     உயர்ந்த ஞானிகள்
மும் மலத்தை     மும் மல வாசனையை
மோசித்து     அறவே நீக்கி,
தான்     யான் என்னும் செருக்கு
அந்தம் ஆன இடத்து  அழிந்து முடிந்து போன நிலையில்
தங்கியிடும்     விளங்கித் தோன்றுகிற
ஆனந்தம்     சிவானந்தம் ஆகிய அமுதத்தை
மொண்டு அருந்த  கண்களால் மொண்டு அருந்துதற் பொருட்டு
நின்று ஆடல்     திருச்சிற்றம்பலத்துள் காட்சிப் புலனாகும்படி நின்று ஆடுதலே,
காணும் அருள் மூர்த்தியாக் கொண்ட  தன் திருவருளையே காணும் வடிவமாகக் கொண்டு விளங்கும்
திரு அம்பலத்தான் கூத்து  நடராசப் பெருமான் இயற்றும் திருக்கூத்தாகும்.

பொழிப்புரை

மோனம் ஆகிய முடிநிலையில் நிற்கும் சிறந்த முனிவர்கள் மும் மல வாதனையை முற்றிலும் நீக்கி, தற்போதம் அற்ற நிலையில் விளங்கித் தோன்றும் பேரின்பமாகிய அமுதத்தைத் கண்களாலும் மொண்டு அருந்தும் படியாக இறைவன் வெளியே திருச்சிற்றம்பலத்துள் புலப்பட நின்று ஆடுகிறான்.

விளக்கம்

புளியை நாவில் இட்டுச் சுவையா விடினும் அதனைப் பார்த்த போதே பார்த்தவர்களுக்கு நாவில் நீர் ஊறும். அதுபோலக் கூத்தப் பெருமானது ஆனந்தக் கூத்தினைக் கண்டவர்க்கு உள்ளத்தில் பேரின்பம் ஊற்றெடுக்கும்.

பக்குவம் இல்லாதார் நிலை

நாமும் அக் கூத்தினைக் காணத்தானே செய்கிறோம். நமக்கு அத்தகைய இன்பம் தோன்றவில்லையே. அது ஏன்? என வினவலாம். இதற்குப் பின்வருமாறு விடை கூறலாம். பருவம் வாயாத சிறுபெண் ஓர் ஆடவனைக் காணுங்கால் அக்காட்சி அவளுக்கு இன்பத்தைச் செய்யாது. அதே பெண் பருவமுற்றுக் காதலிற் கவிழ்ந்த போது, தன் தலைவனை அவன் நோக்காத நேரத்தில் தான் நோக்கித் தன்னுள் இன்புறுகிறாள். அக்காட்சி அவளுக்கு மகிழ்ச்சியைச் செய்கிறது. பருவம் அமையாத சிறு பெண்ணின் நிலையில் நாம் இருக்கிறோம். இறையின்பத்திற்கு உரிய தகுதியும், அதன் மேல் வேட்கையும் இன்றி இருக்கிறோம். இறையின் பத்திற்கு உரியர் அல்லார்க்குப் பொன்னம்பலக் காட்சி எவ்வாறு இன்பம் செய்யும்?

ஆளுடைய பிள்ளையாரது அனுபவ நிலை

ஆளுடைய பிள்ளையார் மெய்ஞ்ஞானமேயான திருவம் பலத்தினையும், ஆனந்த நடத்தினையும் கண்டு கும்பிட்டுக் களித்தார்; கண்களினின்றும் ஆனந்தக் கண்ணீர் பொழிந்தார். ஆனந்த நடனமாகிய திருவமுதைக் கண்களால் உண்டருளினார்.

உணர்வின் நேர்பெற வரும்சிவ போகத்தை
ஒழிவின்றி உருவின் கண்
அணையும் ஐம்பொறியளவினும் எளிவர அருளினை

எனப் போற்றினார். ஆளுடைய பிள்ளையாரது இந்த அனுபவ நிலையை இங்கே பொருந்த வைத்து நோக்க வேண்டும்.

தொழுவார் பெறும் பயன்

38. பரைஇடமா நின்றுமிகு பஞ்சாக் கரத்தால்
உரைஉணர்வுக்கு எட்டா ஒருவன்  வரைமகள்தான்
காணும் படியே கருணை உருக் கொண்டு ஆடல்
பேணும் அவர்க்கு உண்டோ பிறப்பு

பதவுரை

உரை உணர்வுக்கு     வாக்கிற்கும் மனத்திற்கும்
எட்டா         அகப்படாத
ஒருவன்         ஒப்பற்ற முதல்வன்
மிகு         மந்திரங்கள் எல்லாவற்றினும் மேலானதாகிய
பஞ்சாக்கரத்தால்         திருவைந்தெழுத்தால்
கருணையுருக் கொண்டு     அருள்திருமேனி தாங்கி
பரை இடமா நின்று     அவ்வருளே தனக்கு அரங்காகக் கொண்டு
வரைமகள் தான்         அவ்வருளாகிய உமையம்மை
காணும்படி         காணுமாறு
ஆடல்         நின்று ஆடும் திருக்கூத்தை
பேணுமவர்க்கு         விரும்பித் தொழுவார்க்கு
பிறப்பு உண்டோ         பிறவி ஏற்படுமோ?

பொழிப்புரை

உரைக்கும் உணர்வுக்கும் எட்டாத ஒப்பற்ற முதல்வன் ஐந்தெழுத்தால் அருளுருக் கொண்டு, அருளே தனக்கு அரங்காகக் கொண்டு, அவ்வருளேயான உமையம்மை காணும்படி நின்று ஆடும் திருக்கூத்தை மேற்கூறிய முறையில் உணர்ந்து விரும்பித் தொழுவார்க்குப் பிறவியில்லை.

விளக்கம்

உண்மை அம்பலமும் உண்மைத் திருமேனியும்

பெருமான் நடனம் புரிதற்கு இடம் ஆன்மா என்றும், அவனுக்குத் திருமேனியாய் அமைவது ஐந்தெழுத்து மந்திரம் என்றும் மேலே பார்த்தோம். இவ்வாறு சொல்லப்படினும், உண்மையில் அவனுக்குத் திருமேனியாவது அவனது அருளேயாகும். அவனுக்கு இடமாவதும் அருளேயாகும். இச்செய்யுளில், பரை இடமா நின்று எனவும், கருணை உருக் கொண்டு எனவும் வந்துள்ள தொடர்களில் இக்கருத்துக் கூறப்பட்டுள்ளமை காணலாம். ஞாயிற்றை நமக்குப் புலப்படுத்துவது அதன் ஒளியேயாகும். அவ்வொளி, ஞாயிற்றின் உருவாகவும் குணமாகவும் உள்ளது. அதுபோல இறைவனும் அருளொளியை உடையவன். அவ்வருளொளியே அவனுக்கு உருவாகவும் குணமாகவும் அமைகிறது.

ஞாயிறு உலகத்தோடு தொடர்பு கொள்வது தன் ஒளி மூலமாகவே யாம். அதுபோல இறைவன் உலகத்தோடும் உயிர்களோடும் கொண்டுள்ள தொடர்பு அவனது சத்தியாகிய அருள் வழியாகவேயாம். இப்பகுதியின் தலைப்பாகிய நாதன் நடம் என்பதன் கீழ்த் தரப்பட்டுள்ள முன்னுரையில் இறைவனுக்கு இடம், திருமேனி முதலிய எல்லாமாவது அவனது திருவருளேயாம் என்பதை விளக்கினோம். ஆகவே, இறைவனுக்குத் திருவருளே உண்மை அம்பலமும் (இடமும்), உண்மைத் திருமேனியும் ஆகும் என்பது நன்கு உளங்கொள்ளுதற்குரியது. ஆன்மாவும் பஞ்சாக்கரமும் அவனுக்கு உபசார அம்பலமும் உபசாரத் திருமேனியும் ஆவன.

கற்பனை கடந்த சோதி
கருணையே உருவ மாகி

என்ற சேக்கிழார் திருமொழியில் கூத்தப் பெருமானது உண்மைத் திருமேனியும்,

அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமம்

என்ற அவரது திருவாக்கில் உண்மைத் திருவம்பலமும் கூறப்பட்டுள்ளமை காணலாம். சிற்பர வியோமம் என்ற தொடர் ஞானமேயான அருள்வெளி என்ற பொருளைத் தருவதாகும். சித்ஞானமாகிய அருள்; வியோமம்  வெளி.

இறைவனது திருக்கூத்தினைக் கண்டு தொழுவார் பெறும் பயன்

யாவராலும் காணுதற்கரிய பெருநிலை உடையது சிவம். அப் பரம்பொருள் தானே தனது கருணை காரணமாக அனைவரும் காணும்படி அம்பலத்தில் தோன்றிப் பொற்புடன் நடஞ் செய்கின்றது. அதனைக் காண்பதனால் நாம் அடையும் பயன் என்ன? என வினவுவார்க்கு விடையாக, ஆடல் பேணுமவர்க்கு உண்டோ பிறப்பு என்றார் மனவாசகங் கடந்தார். பிறவி இன்ன காலத்தில் தொடங்கியது என்றும், இன்ன காலத்தில் முடியும் என்றும் சொல்ல இயலாத நிலையை உடையது. வினையால் பிறவியும் பிறவியால் வினையும் இடைவிடாது தொடர்ச்சியாய் முடிவின்றி வந்து கொண்டிருக்கின்றன. இப் பிறவிச் சுழற்சியிற் பட்டுத் துன்புறுகின்ற உயிர் அதினின்றும் நீங்கி நிலைத்து நின்று இன்புறும் நிலை கூத்தப் பெருமானது திருநடனத்தைக் காண்பதனால் கிடைப்பதாகும். அஃது எவ்வாறு என்பதைக் காண்போம்.

பிறவிக்குக் காரணம் அஞ்ஞானம். அஞ்ஞானம் என்பது இறைவனை அறியாதிருத்தலே. எனவே, இறைவனை அறிந்து கொள்ளுதல் தான் ஞானம் என்பதும், அந்த ஞானத்தால் பிறவி அறும் என்பதும் விளங்கும். இறைவனது திருநடனம் ஐந்தொழில்களைக் குறிப்பதாகும். ஐந்தொழில்களை இறைவன் இயற்றுதல் உயிர்களின் பிறவித் தொடர்ச்சியை அறுத்தற் பொருட்டேயாகும். உயிர்கள் அளவில்லாமல் இருத்தலின், அவைகளின் பொருட்டுச் செய்யப்படுகின்ற ஐந்தொழில்களுக்கும் தோற்றமும் இல்லை. முடிவும் இல்லை. எனவே உயிர்களின் பொருட்டு இறைவன் ஐந்தொழில் நடனத்தை இடையறாது புரிந்து நிற்கின்றான். இந்நடனம் இறைவனது ஐந்தொழிலை உணர்த்தி, அவனை உணரும் ஞானத்தைத் தருவதாகும். இந்நடனத்தின் பொருளை உணர்ந்து விரும்பித் தொழுவார்க்கு ஞானம் உண்டாகி, அதனால் பிறவி அறும், அழிவிலா ஆனந்தம் விளையும். அது பற்றியே, கருணை உருக்கொண்டு ஆடல் பேணுமவர்க்கு உண்டோ பிறப்பு என்றார் ஆசிரியர்.

ஆடல் காணும் அம்மை

உமையம்மை காணும்படி நின்று சிவபெருமான் திருக்கூத்து இயற்றுகிறான் என்பதை வரைமகள் தான் காணும்படி என்று இந்நூலும், இவ்வாறே பிற நூல்களும் கூறிச் செல்லும். அதன் பொருள்தான் என்ன? சிவன் செய்யும் கூத்தினை உமை காணுதலாவது, சிவனது செயலை உயிர்கட்குச் சேர்ப்பித்தல் என்று பொருள் கூறுவர். இதனை மேலும் விரித்துக் கூறினால்தான் பொருள் இனிது விளங்கும். நாம் செய்யும் செயல்களுக்கு, நமக்கு வாய்த்துள்ள உடல், கருவி முதலியவை உடனின்று உதவுகின்றன. நாம் ஓரிடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், நம் உடம்பானது இயங்கி அச்செயலை நிறைவேற்றுகிறது. நாம் ஒருவருக்கு ஒரு பொருளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றால் நம் கைகள் இயங்கி அச் செயலை முற்றுவிக்கின்றன. உடம்பும் கருவிகளும் இவ்வாறு உதவினாலும் அச் செயல்கள் நம் செயல்களே. கொடுத்தலையும், எடுத்தலையும் செய்தவர் நாம். அதற்குக் கருவிகள் உடனின்று உதவின. அதுபோல, இறைவன் செய்யும் செயல்களுக்கு அவனது சத்தியே தனு, கரணம் முதலிய எல்லாமாய் நின்று செயல்களை முற்றுவிக்கும்.

நங்கையினால் நாம் அனைத்தையும் செய்கிறோம். அதுபோல, நங்கையினால் இறைவன் அனைத்தையும் செய்கிறான். முதலில் உள்ள நங்கை என்பது நம் கை எனப்பிரிந்து பொருள்தரும். பின்னுள்ள நங்கை என்பது பெண் எனப் பொருள்பட்டு இறைவனது சத்தியைக் குறிக்கும். இதனால், இறைவனே செயலைச் செய்பவனாக, சத்தி அதனை முற்றுவிக்கும் துணையாக உள்ளமை விளங்கும். எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள் என்பது அறியத்தகும். ஞானத்தை உணர்த்தி வீடு அளித்தல் இறைவனது செயல். அச் செயலைச் சத்தியே உயிர்களிடத்தில் உடனாய் நின்று செய்கிறது. முன்னர் அது திரோதான சத்தி என்ற பெயரும் நிலையும் கொள்கிறது. மலங்களைச் செயற்படுத்தி அவற்றின் வழியில் நின்று உயிர்களைச் செலுத்துகிறது. பிறப்பு இறப்புக்களையும் இன்பத் துன்பங்களையும் மாறி மாறிக் கொடுக்கிறது.

திரோதான சத்தி எல்லாவுயிர்களிடத்திலும் ஒரே வகையாகச் செயற்படுவதில்லை. ஒவ்வொரு உயிரும் பக்குவ நிலையில் வேறுபாடு உடையது. ஆதலால், அந்தந்த உயிரின் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு வகையில் அவற்றைச் செலுத்தி அவற்றின் அறியாமையைச் சிறிது சிறிதாக நீக்கி அறிவைப் படிமுறையில் வளர்த்து வருகிறது. குமர குருபர சுவாமிகள் இதற்கு ஓர் அருமையான எடுத்துக் காட்டுத் தருகிறார். கைக்குழந்தை நோய்வாய்ப்படுகிறது. அந்நோய்க்குரிய மருந்தை நேரே கொடுத்தால் மென்மையான அக்குழந்தையின் பசுங்குடல் அம்மருந்தின் வேகத்தைத் தாங்காது. அதனை உணர்ந்த தாய் அம்மருந்தைத் தான் உண்டு பால் வழியாக அம்மருந்தின் பயனைக் குழந்தை பெறும்படி செய்கிறாள்.

பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென
நோயுண் மருந்து தாய்உண் டாங்கு  (சிதம்பர மும்மணிக் கோவை, செ.2)

திரோதான சத்தியாகிய தாய் இதுபோன்ற செயலைத் தான் செய்கிறாள். அறியாமைதான் உயிர்களிடமுள்ள நோய். மெய்யறிவுதான் அதற்குரிய மருந்து. அம் மெய்யறிவை ஒரே காலத்தில் ஒருங்கே அளித்தால் உயிர் அதனை ஏற்றுக் கொள்ள இயலாது. உயிரின் பக்குவக் குறைபாடே அதற்குக் காரணம். ஆதலால் உலக நுகர்ச்சியாகிய பால் வழியாக மெய்யுணர்வைச் சிறிது சிறிதாகப் புகட்டி, அதன் அறியாமையைப் போக்கி, உண்மையைப் படி முறையில் உணரும்படி செய்கிறாள். எனவே, கூத்தப் பெருமானின் பக்கலில் நின்று ஆடல் காணும் அம்மை சிவகாமவல்லி திருக்கூத்தை முற்றக் கண்டு அதன் பயனாகிய ஞானத்தைப் பல்லுயிர்களுக்கும் அவற்றின் பக்குவ நிலைகளுக்கு ஏற்றவாறு ஊட்டி, அவற்றின் பாசப் பற்றை அறுத்து, உணர்வைவளர்த்து வரும் தாய் ஆவாள் என்பது உளங் கொள்ளுதற்குரியது.

 
மேலும் உண்மை விளக்கம் »
முன்னுரைசைவ சித்தாந்தம் என்றும் அழியா உண்மைப் பொருள்களாக மூன்று பொருள்களைக் கொள்ளும். ... மேலும்
 
சுத்த நிலைஇத்தடுமாற்றம் தீர்ந்து ஒரு நிலைப்பட்ட தன்மையை எய்த வேண்டுமாயின், உயிர் திருவருளைச் சேர்தல் ... மேலும்
 
தத்துவங்கள் ஆன்மாவிற்குக் கருவியாய் நின்று உதவுதல்தத்துவம் என்ற சொல்லுக்கு கருவி என்பது பொருள். ... மேலும்
 
இனி, கன்மேந்திரியங்கள்14. கண்ணுதல்நூல் ஓதியிடும் கன்மேந் திரியங்கள்எண்ணும் வச னாதிக்கு இடமாக ... மேலும்
 
பசுநான் யார்?23. ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்மாறா அருளால் வகுத்துரைத்தீர்  வேறுஆகாஎன்னை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar