பதிவு செய்த நாள்
13
நவ
2013
10:11
பாங்காக்: தாய்லாந்து-கம்போடியா நாட்டு எல்லையில் அமைந்துள்ள, 9ம் நூற்றாண்டை சேர்ந்த, சிவன் கோவில் அருகே உள்ள நிலம், கம்போடியா நாட்டுக்கே சொந்தமானதுஎன, சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கம்போடியா நாட்டில், அங்கோர்வாட் என்ற இடத்தில் மிகப்பெரிய இந்துக்கோவில் உள்ளது. இந்த கோவிலை, "யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது. இதே போல, கம்போடியாவில், ஐந்து, இந்து கோவில்கள் உள்ளன. தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில், ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த, சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இரு நாடுகளும் உரிமை கொண்டாடி சண்டையிட்டு கொண்டன. 1962ம் ஆண்டிலிருந்து, இந்த பிரச்னை நீடித்தது. இதனால், இப்பகுதியிலிருந்து, ஆயிரக்கணக்கான மக்கள், பாதுகாப்பு கருதி வெளியேறி விட்டனர். இருநாட்டு ராணுவமும், கோவிலை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டன. இந்த வழக்கை, சர்வதேச நீதிமன்றம் விசாரித்தது. இரு நாட்டு ராணுவமும், இந்த கோவிலிருந்து வெளியேறும் படி, சர்வதேச நீதிமன்றம், கடந்த ஆண்டு, உத்தரவிட்டது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். "இந்த சிவன் கோவில், கம்போடியாவுக்கு தான் சொந்தம் என, சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை தாய்லாந்து ஏற்றுக்கொண்டது. ஆனால், சிவன் கோவிலையொட்டியுள்ள, 4.6 சதுர கி.மீ.,பரப்பளவுள்ள இடத்துக்கு, தாய்லாந்து தொடர்ந்து உரிமை கோரியது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய சர்வதேச நீதிமன்றம், "சர்ச்சைக்குரிய,4.6 சதுர கி.மீ., பரப்பளவுள்ள நிலமும், கம்போடியாவுக்கே சொந்தம் என, உத்தரவிட்டுள்ளது.