பதிவு செய்த நாள்
13
நவ
2013
10:11
கோவை: கோவை சிங்காநல்லூர் அரவான் கோவில் திருவிழா கலைகட்டத் துவங்கியுள்ள நிலையில் பக்தர்களிடையே உற்சாகம் பூண்டுள்ளது. கூத்தாண்டை பண்டிகை எனும் அரவான் திருக்கோவில் திருவிழா சிங்காநல்லூர், நீலிக்கோனாம்பாளையம் மற்றும் கள்ளிமடை ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த அக்., மாதம் 29ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கிய விழா, வரும் 19ம் தேதி வரை நடக்கிறது. நேற்று காலை நீலிக்கோனாம்பாளையம் மூலஸ்தானத்தில் ஆத்தினார் கொண்டு அரவான் திரு உருவம் அமைத்தல், சுவாமி திருமஞ்சனம் செய்து அலங்காரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை விநாயகர் கோவில் மாவிளக்கு மற்றும் விஷேச பூஜைகள், அரவான் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ நலங்கிட்டு சிங்காநல்லூர் புறப்படுதல், அரவானுக்கு வரவேற்பு, இரவு திருக்கல்யாணம் நீராட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை(14ம் தேதி) அனுமார் அரவானை தேடுதல், இரவு நீராட கங்கை புறப்படுதல், கள்ளிமடை காமாட்சியம்மன் மாலை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து, 15ம் தேதி காலை ஊர்வலமும், மாலை கட்டுமரம் சேர்ந்து களபலி நிகழ்ச்சியும் நடக்கிறது; 19ம் தேதி மறு பூஜை நடக்கிறது.