பதிவு செய்த நாள்
19
நவ
2013
04:11
ஊத்துக்கோட்டை: மகா கால பைரவர் ஜெயந்தி விழா வரும், 25ம் தேதி தொம்பரம்பேடு கிராமத்தில் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த தொம்பரம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமகா கால பைரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும், அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விடுமுறை நாட்கிளில் அதிகளவு பக்தர்கள் இங்கு வந்து சுவாமியை தரிசனம் செய்வர்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஸ்ரீ பைரவர் ஜெயந்தி விழா கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு வரும், 25ம் தேதி திங்கட்கிழமை ஸ்ரீபைரவர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டப்பட உள்ளது. அன்றைய தினம் காலை, 5 மணிக்கு, 64 ஸ்ரீபைரவ கலச ஸ்தாபனம், தொடர்ந்து கணபதி பூஜை, கலச புறப்பாடு, கலச அபிஷேகம், ஸ்ரீபைரவர் ஹோமம், பீஜாட்சர ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபடுவர். பின்னர் ஸ்ரீபைரவர் அபிஷேகம், பைரவருக்கு வெள்ளிக்காப்பு சாற்றுதலுடன் மகா தீபாராதனை நடைபெறும். காலை, முதல் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். விழாவை ஒட்டி, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கிராம பெரியோர்கள் செய்து வருகின்றனர்.