பதிவு செய்த நாள்
20
நவ
2013
02:11
அண்மையில் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 1100 வருடங்களுக்கு முற்பட்ட யோகினி சிலை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலிருந்து இந்தியாவுக்கு மீட்கப்பட்டது. யோகினி என்றால் யார்? இவர்கள், பராம்பிகையான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் தேவதைகள். முன்னொரு காலத்தில் மகிஷாசுரன், அரக்கர்களுக்கே உரிய கொடூரத்துடன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் பராசக்தியை வேண்டி தங்களைக் காத்தருளும்படி வேண்டினர். ஆதிசக்தியும் அவர்களுக்கு அபயம் அளித்து, தன்னுடைய உடலிலிருந்து துர்க்கை என்னும் சக்தியைத் தோற்றுவித்தார். இந்த துர்க்கை தன் உடலிலிருந்து எட்டு சக்தியரைத் தோற்றுவித்தாள். அவர்களே யோகினிகள். இப்படித் தோன்றிய 8 யோகினிகளும் 8*8 யோகினிகளாகப் பிரிந்தனர். இந்த 64 யோகினிகளும் மகிஷாசுரவதத்துக்கு உதவி அவனது சகோதரர்கள், கம்பன், நிசும்பன் மற்றும் அரக்கர் சேனை அழிவுக்குக் காரணமாய் இருந்தார்கள்.
இவர்கள் மிகவும் அதீதமான சக்தி படைத்தவர்கள். இவர்களை வழிபடுவதன் மூலம் மனிதர்களுக்கு அபாரமான சித்திகள் கிடைத்தன என்று புராணங்கள் விவரிக்கின்றன. இந்த யோகினி வழிபாட்டை, தாந்த்ரீக வழிபாடு என்று குறிப்பிடுவார்கள். இதில் அதிகமாக பெண்களே ஈடுபட்டனர். புலன்களை அடக்கி, பிரம்மச்சரிய விரதம் இருந்து (ஆண்களும் பெண்களும்) இந்த யோகினிக்களை வழிபட்டால், அவர்களுடைய அருளால், பில்லி சூன்யம், ஏவல் போன்ற தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று சொல்கிறார்கள். இந்த யோகினி வழிபாடு வட இந்தியாவிலும், புத்த மதம் அதிகமாக பரவிய திபெத், சீனா, ஜப்பான், பர்மாவிலும் (இன்றைய மியான்மர்) காணப்பட்டது.
இந்த 64 யோகினிகளுக்கும் வட இந்தியாவில் கீழ்க்கண்ட இடங்களில் கோயில்கள் உள்ளன.
1. ஒடிசா மாநிலத்தில், குத்திரா மாவட்டம் ஹிராஸ் பூரில் உள்ளது. (புவனேஸ்வரிலிருந்து 15 கி.மீ.), 2. ஒடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டம் ரானிப்பூர் ஜரியலில் உள்ளது. 3. மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராகோ மலைப்பகுதியில் உள்ளது. 4. ஜபல்பூர் ஜில்லா பெக்காட் என்னும் இடத்தில் உள்ளது. அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தது பெக்காட்-ல் உள்ள கோயில். இதை பேராகாட் என்றும் அழைக்கிறார்கள். வட்டமாக அமைந்த மண்டலம் போன்ற சுவர். அதில் 64 யோகினிகளின் வடிவங்களையும் காண்கிறோம். பத்தாம் நூற்றாண்டில் அமைந்த கோயில். அதாவது தஞ்சை பெரிய கோயில் உருவாவதற்கு முன்பு அமைந்த கோயில்.
64 கலைகளின் வடிவாகத் திகழ்பவள்; 64 வகையான உபசாரங்களால் பூஜிக்கப்படுபவள் மட்டுமல்ல; 64 கோடி யோகினி கணங்களால் பூஜிக்கப்படுபவள் லலிதா பரமேஸ்வரி என்று குறிப்பிடும் லலிதா சஹஸ்ரநாமம். இங்குள்ள யோகினியர் சிற்பத்தின் கீழே அவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. காமதா, அந்தகாரி, சர்வதோமுகி, அஜிதா, ஆனந்தா.. என்று பெருகின்றன அவர்களின் பெயர்கள். இந்த யோகினி வழிபாட்டு முறையில் யோகாவும் இணைந்துள்ளது. மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தியை எழுப்பி உடலிலுள்ள அதன் ஏழு விதமான பீடங்களும் எடுத்துச் செல்வதாகும். இந்த வழிபாடு மிகவும் கடினமான ஒன்று. ஆனாலும் இந்த வழிமுறையில் பெண்கள் அதிகம் ஈடுபட்டு சிறந்து விளங்கினார்கள் என்பது பழைய சுவடிகளிலிருந்து தெரிய வருகிறது. சவுட்யோகினி மந்தீர் என்று குறிப்பிடப்படும். இந்த கோயில், தொன்மையான வழிபாட்டை மட்டும் காட்டவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத மூர்க்கத்தனத்தின் வெளிப்பாட்டை, பிற்காலத்தில் பின்னமான சிலைகளின் வடிவத்தில், இன்றும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.