இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும். எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம் இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும் எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம். பகவான் பக்தியைத் தான் பார்க்கிறார். பக்தன் என்னை கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை. சில பச்சிலைகளைப் போட்டால் பரமேஸ்வரன் திருப்தி அடைந்து விடுகிறார். இதை யாரும் செய்யலாம். ஒரு பிடி புல்லை கோமாதாவான பசுவுக்கு ஊட்டலாம். இதில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இதையும் யாரும் எளிதில் செய்யலாம்.
தான் சாப்பிடும் ஆகாரத்தில் ஒரு கைப்பிடி ஒரே ஒரு கைப்பிடி அடுத்தவனுக்கு வழங்கலாம். இதுவும் யாரும் செய்யக் கூடிய எளிமையானதே. இவைகளில் எதையும் செய்ய முடியவில்லையா பரவாயில்லை. அடுத்தவனோடு பேசும் போது கடுப்படிக்காதே. இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்று சொன்னாலும் அதையும் இனிமையாகச் சொல். இதையாவது செய்யலாமே. நாம் மூச்சடக்க வேண்டாம். பேச்சடக்க வேண்டாம். நம்மை கடைத்தேற்றக் கூடிய எளிமையான அறங்கள் இவைகளில் எந்த ஒன்றையாவது செய்து பார்க்கலாமே. ஒரு கை புல், ஒரு கை பொரி அன்போடு படைத்தால் விநாயகர் வசப்பட்டு விடுவார். சில துளசி இலைகளில் மகா விஷ்ணு வசப்பட்டு விடுவார். சில துளி கங்கா தீர்த்தம் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுகிறார். சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்னமாகி விடுகிறாள். இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம். ஆன்மீகம் என்றால் அன்புதான்.