பதிவு செய்த நாள்
23
நவ
2013
10:11
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள, ஆவுடையார் கோவில், நம் கண்முன் உள்ள, வரலாற்றுப் பெட்டகம்; இதில் உள்ள, ஒவ்வொரு சிற்பமும், நம் நாகரிகம், பண்பாடு போன்றவற்றை வெளிப்படுத்தும், அரிய பொக்கிஷமாக அமைந்துள்ளது, என, தொல்லியல் துறையின், திருச்சி மண்டல பதிவு அலுவலர் முத்துசாமி கூறினார். தொல்லியல் துறை சார்பில், ஒவ்வொரு மாதமும், "திங்கட்பொழிவு என்ற பெயரில், சிறப்பு சொற்பொழிவு, சென்னையில் நடக்கும். சிறப்பு சொற்பொழிவில், தொல்லியல் துறையின் திருச்சி மண்டல பதிவு அலுவலர், முத்துசாமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆணையர் வசந்தி, முன்னிலை வகித்தார். இதில், முத்துசாமி பேசியதாவது: முற்காலத்தில், கோவில்களை மையமாக வைத்தே, அனைத்து செயல்பாடுகளும் இருந்தன. அறிவியல், வானவியல், சுற்றுச்சூழல் என, பல்வேறு பிரிவுகளும், கோவில்களில் இருந்தே, துவங்கின. அதனால், அக்காலத்தில் கோவில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால், பல ஊர்களின் பெயர்களிலும் கோவில்கள் இருந்தன. குறிப்பாக, சங்கரன் கோவில், ஆவுடையார்கோவில், செம்மனூர் கோவில், திருக்கோவிலூர், காட்டு மன்னார் கோவில் போன்ற ஊர்களின் பெயர்களில், கோவில் இருப்பதன் மூலம், அதன் முக்கியத்துவத்தை அறியலாம். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள ஆவுடையார் கோவில் என்ற பெயருக்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன. இங்குள்ள ஒவ்வொரு சிற்பமும், நம் நாகரிகம், பண்பாடு போன்றவற்றை வெளிப்படுத்தும், அரிய பொக்கிஷமாக அமைந்துள்ளது. மூன்று நரிகள் கொண்ட சிற்பம் இங்கு, பிரசித்தி பெற்றது. நரியின் உடலமைப்பு; ஊளையிடும் தன்மை; ஊளையிடும் போது, அதன் உடல் நிலை எவ்வாறு மாறுகிறது என்பன குறித்து, தத்ரூபமாக வடிவமமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரசவம் நிகழ்வது குறித்து விளக்கும் சிற்பம், தனித்துவமானது. கர்ப்பிணிப் பெண்ணை சுற்றி, மூன்று பெண்கள் சூழ்ந்திருப்பர். இரண்டு பெண்கள், கர்ப்பிணி பெண்ணை பிடித்திருப்பர். நின்ற படியே பிரசவம் நடக்கும். ஒரு பெண், கால்களுக்கு நடுவிலிருந்து வெளிவரும் குழந்தையை, கைகளால் தாங்கி பிடிப்பார். இத்துடன், 12 ராசிகளுக்கும், தனித்தனி சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எங்கும் காண முடியாத வகையில், நட்சத்திரங்களுக்கு இங்கே, சிற்பங்கள் உள்ளன. அவை விதானத்தில் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு உருவமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அக்காலத்தில் வான்வெளியில் பறந்தது குறித்து விளக்கும், நான்கு சிற்பங்கள், அறிவியலின் பரிணாம வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. விதானங்களில் வரையப்பட்ட மூலிகை ஓவியங்கள், வரலாற்று சிறப்புடையவை. பல்வேறு ஒலிகளை எழுப்பக் கூடிய, சப்தஸ்வர தூண்கள், இன்னும் தனித்தன்மை மாறாமல் உள்ளன. இங்கு, இன்று வரை, தமிழ் மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. கீரைக்கூட்டு, பாகங்காய் கூட்டு போன்றவை, அதில் முக்கியமானவை. ஆவுடையார் கோவிலின் மூலம், நம் பண்பாடு, நாகரிகம் போன்றவற்றையும், கடந்து வந்த பாதையையும் எளிதில் அறியலாம். இவ்வாறு, அவர் பேசினார்.