ஒரு ஆச்சரியமான தகவல். ஐயப்பனுக்கு ஆண்டு தோறும் மகரவிளக்கு பூஜையின்போது, திருவாபரணங்கள் சூட்டப்படும் அல்லவா? இந்த நிகழ்ச்சியை ஆண்கள் மட்டுமே பார்க்க முடியும். ஆனால், அந்த ஆபரணங்கள் அனைத்தையும் மொத்தமாக அணிந்து பெண்களுக்கும் ஐயப்பன் ஜனவரி 21ம் தேதி காட்சித் தரப்போகிறார். பத்தணந்திட்டையில் இருந்து சபரிமலை செல்லும் பாதையில் மடத்துக்குழி என்ற இடத்தில் இருந்து இடது பக்கம் திரும்பி சுமார் இரண்டுகிலோமீட்டர் தூரம் சென்றால் பெருநாடு சாஸ்தா கோயில் வருகிறது.
பந்தளம் மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் பல தலை முறை பழக்கமுடையது. சபரிமலையில் ஐயப்பனுக்கு கோயில் கட்டப்படும் போது பந்தளம் மன்னர்கள் பெருநாட்டில் உள்ள அரண்மனையில் தங்கியிருந்துள்ளனர். அப்போது தங்கள் குலதெய்வமான சாஸ்தாவை இங்கு வைத்து வழிபட்டுள்ளனர். பூர்ணா மற்றும் புஷ்கலா தேவியருடன் சாஸ்தா காட்சி தரும் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மன்னர்கள் இங்கு தங்கியிருந்து தான் சபரிமலை கட்டுமானப் பணிகளை முடித்தனர். திரும்பி செல்லும் போது சாஸ்தா பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் ஒரு கோயிலை கட்டி வைத்தனர். சபரிமலையில் நித்ய பூஜைகள் இல்லாததால் இங்கு நித்யபூஜைகள் நடத்தும் வகையில் இந்த கோயில் கட்டப்பட்டது. மகர விளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்த மன்னர்கள் திரும்பி செல்லும் வழியில் பெருநாட்டில் சாஸ்தாவுக்கும் அணிவித்து வழிபட்டு சென்றனர். அந்த முறை தற்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எல்லா ஆண்டும் ஜனவரி 21-ம் தேதி இங்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடக்கிறது.
சபரிமலை செல்ல முடியாத வயது பெண்களுக்கு இந்த தரிசனம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சபரிமலை, பந்தளத்துக்கு அடுத்தபடியாக திருவாபரணம் அணிவிக்கப்படும் ஒரே கோயில் என்ற பெருமையை பெருநாடு சாஸ்தா பெற்றுள்ளார். இந்த கோயில் அருகே கூடக்காவு என்ற வீடு உள்ளது. சபரிமலை கோயில் பணிகள் நடந்த போது இந்த வீட்டில் உள்ளவர்கள் மன்னருக்கு பாதுகாவலராக விளங்கியுள்ளனர். இதற்காக பெருநாடு கோயில் திருவிழாவின் போது சுவாமி பவனி இந்த வீட்டுக்கு செல்வது தற்போதும் நடந்து வருகிறது. இந்த கோயில் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். குழந்தை பாக்கியம் : பிள்ளை வரம் வேண்டுவோர் குழந்தைகளை பகவானின் நடையில் படுக்க வைக்கும் அடிமை என்ற வேண்டுதல் இங்கு முக்கிய நேர்ச்சையாகும். பங்குனி மாதம் இங்கு 5 நாட்கள் திருவிழா நடக்கிறது.