எருமேலியில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று பெரியம்பலம் என்ற பெரிய கோயில். மற்றொன்று சிறியம்பலம் என்ற சிறிய கோயில். சபரிமலை யாத்திரையில் முதலிடத்தை பிடித்துள்ளது எருமேலி. தாயின் வயிற்று வலியை போக்க புலிப்பால் தேடி ஐயப்பன் காட்டுக்கு சென்ற போது எருமை தலையுடன் கூடிய மகிஷியை வதம் செய்த இடம் எருமேலி. எருமை தலை உடைய மகிரிஷியை கொன்றதால் அந்த இடம் தொடக்கத்தில் எருமைகொல்லி என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் இந்த பெயர் மருவி எருமேலி என்று பெயர் பெற்றது.
ஐயப்பன் வில்லும் அம்பும் ஏந்தி நிற்கும் சிலைகள் இந்த கோயில்களில் உள்ளன. பகவதி, நாகராஜா சன்னதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சிறிய கோயிலில் பேட்டை கட்டும் பக்தர்கள் பெரிய கோயிலில் வந்து பேட்டை துள்ளலை நிறைவு செய்கின்றனர்.இங்கு மலைகளின் அதிபதியான சிவபூதகணங்களை வணங்கி கோயிலில் உள்ள தலப்பாறையில் காணிக்கை செலுத்தி கொடுங்காடு வழியாக பயணத்தை தொடர்கின்றனர். மகரவிளக்குக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் எருமேலியில் நடக்கும் அம்பலப்புழா, ஆலங்காடு ஐயப்ப பக்தர்களின் பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றதாகும். இந்த பக்தர்களை முஸ்லிம் மக்கள் யானை மீது சந்தனக்குடம் ஏந்தி வந்து, வரவேற்று அழைத்து செல்வது மதநல்லிணக்கத்துக்கு முன்னோடியாக விளங்குகிறது.
எருமேலி பெரிய கோயில் மற்றும் சிறிய கோயில் காலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணிமுதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். பெரிய கோயிலில் மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் ஆறாட்டு நடக்கிறது. அப்பம், அரவணை முக்கிய பிரசாதமாகும். நீராஞ்சனம், கணபதிஹோமம் ஆகியவை முக்கிய வழிபாடுகளாகும்.