பதிவு செய்த நாள்
03
டிச
2013
11:12
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவில் மதில் சுவர் ஓட்டிய ஆக்கிரமிப்புகளை அகற்ற, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, 6 ஆண்டுகளாகியும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இடைவெளியில்லை திருக்கழுக்குன்றம் கோவிலில் பிரமாண்டமான சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி திசைகளிலும், அகலமான சாலைகள் அமைந்திருந்தன. கோவிலைச் சுற்றியுள்ள சுற்றுச் சுவரை ஆக்கிரமித்து, 12 வீடுகள், 15 கடைகள் கட்டியுள்ளனர். உயரமான கோபுரங்கள் அருகில் ஒரு அடி இடைவெளி கூட இல்லாத அளவிற்கு ஆக்கிரமிப்பு உள்ளது. கோவிலை பாதுகாக்க அமைக்கப்பட்ட சுற்றுச் சுவரை, புனரமைக்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால், கிழக்கு கோபுரத்தின் எதிரே, நெடுஞ்சாலை குறுகி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுற்றுச்சுவரை ஆக்கிரமித்து, சாலை ஓரத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கைவைத்தனர்.
வழக்கு: செங்கல்பட்டு கோட்ட துணை ஆட்சியராக, அமுதா இருந்த போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது சில கடை உரிமையாளர்கள், தங்களுக்கு பட்டா இருப்பதாக கூறி, கடைகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்துஅறநிலையத்துறை ஆகியவை இணைந்து, போதிய அவகாசம் அளித்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, தெரிவித்திருந்தது. அதன் பின், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்
அனுப்பப்பட்டது. அதன்பின், 6 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அலுவலர்கள் கவனம் செலுத்தவில்லை.இதனால், பிரசித்த பெற்ற கோவிலின் சுற்றுச்சுவரை புதுப்பிக்க முடியாமல், கும்பாபிஷேகமும் முடிந்தது.
நெரிசல்: சாலை ஓரத்தில் ஆக்கிரமித்து, கடைகள் கட்டியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவின் படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். அறநிலையத்துறை அதிகாரிகளை கேட்ட போது, வருவாய்த்துறை அதிகாரிகள் தான், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளை கேட்ட போது, அறநிலையத்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறினர். ஆட்சியர் இதன் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.