பதிவு செய்த நாள்
28
மார்
2011
05:03
தன் முன்னால் கைகூப்பியும், உடலை வளைத்தும் மரியாதை செய்த துவார பாலகர்களிடம், என்ன விஷயம்? என்று அதிகாரமாய்க் கேட்டார் கிருஷ்ணர். அவர்கள் அவரை வாழ்த்தினர். வேதங்களின் தலைவரே வணக்கம். சந்திரகுலத்தின் ஒளிமிக்க தீபச்சுடரே! தாமரை மலர் போன்ற அழகிய கண்களை உடையவரே! இந்திரனாலும் நெருங்க இயலாதவரே! பகைவர்கள் எதிரே சிங்கமாய் நிற்பவனே! நல்ல வழியில் சம்பாதித்த செல்வத் துக்கு அதிபதியே! உம்மை வணங்குகிறோம், என்று முகமன் கூறி விஷயத்தைத் தொடங்கினர்.ஐயனே! தங்களைக் காண அங்கம், வங்கம், கலிங்க தேசாதிபதிகள் எல்லாம் வந்துள்ளனர்,.கண்ணபிரான் அதைக் கண்டு கொள்ளவில்லை. இப்போது அதற்கு என்னவாம்! என்ற பதில் அவரது பார்வையிலேயே துவார பாலகர்களுக்கு புரிந்து விட்டது. ஒரு ஏழையும் தங்களைப் பார்க்க வந்துள்ளார், துவார பாலர்கள் இதைச் சொல்லவே, அவர் நெற்றியைச் சுழித்ததில் இருந்தே, யார் அவர்? என்று கேட்கிறார் என்பதை பாலகர்கள் புரிந்து கொண்டார்கள்.தங்களுடன் சாந்தீபனி முனிவர் குருகுலத்தில் படித்தவராம்? ஓஹோ... என்று சாதாரணமாக பதிலளித்த மாதவனான கண்ணபிரான், அவரது பெயர் சுதாமாவாம் என்று பாலகர்கள் சொன்னது தான் தாமதம். என்ன சுதாமாவா? என்று கேட்ட படியே விளக்கினை தொட்டபிள்ளை வெடுக்கென குதித்தது போல், வேகமாக படுக்கையில் இருந்து கீழிறங்கினார்.என் உயிர்த்தோழன் சுதாமாவா? அவனா வாசலில் நிற்கிறான்? என் தூய நண்பனே! என்று முகமெங்கும் பிரகாசமும் பதட்டமும் பதிய, கதறியபடியே வாசலை நோக்கி ஓடினார்.
துவாரபாலகர்களும் பிற காவலர்களும் விரைந்தனர். அவரது அஷ்ட மகிஷிகளும் ஏதும் புரியாத நிலை... இவர் நம்மிடம் சரச சல்லாபம் செய்கிற வேளை இது. இந்நேரத்தில், எங்கே ஓடுகிறார்? இதுவரை எத்தனையோ தேசத்து ராஜாக்களெல்லாம் வந்திருக்கிறார்கள்! இந்த மனுஷன் இந்த மெத்தையை விட்டு அசைந்ததே இல்லை. மேலும், இது மற்றவர்களுக்கு தரிசனம் காடுக்கிற சமயமும் இல்லை! இந்த நேரத்தில் ஏழை என்று சொன்ன ஒருவனைத் தேடி ஓடுகிறாரே என்று புரியாமல் நின்றார்கள். பெருமாள் கோயில்களில் சுவாமியின் தரிசனத்தை சேவை சாதித்தல் என்பார்கள். திருமால் காக்கும் கடவுள். யாரை அவர் காப்பார்? நல்ல இதயம் படைத்தவர்களை... வறுமை, வருத்தம், பிரிவு போன்ற கொடிய சூழலிலும் கூட தன்னை மறக்காதவர்களை. தன் உண்மை பக்தர்களுக்கு பகவானே ஓடிவந்து சேவை செய்து அனுக்கிரஹம் வழங்குவானாம்! சாதித்தல்என்றால் அருளுதல், அனுக்கிரஹம் செய்தல் என்று பொருள். ஸ்ரீ கிருஷ்ணரும் பெருமாளின் அவதாரம் அல்லவா! அதனால், தன் பக்தனை எதிர் கொண்டு சேவை செய்ய அவரே ஓடி வந்துவிட்டார். கிழிந்த ஆடையையும் திருப்தியுடன் அணிந்து, நீண்ட தூரம் வந்த களைப்பில் மணல் ஒட்டி, களைப்புடன் நின்ற தன் நண்பனை அவர் பார்த்தார். ஓடி வந்து ஆலிங்கனம் (அணைத்தல்) செய்து கொண்டார். சுதாமாவின் நிலையை சொல்லியா தெரிய வேண்டும்! அவர் பரவசத்தின் உச்சிக்கே போய் விட்டார். கண்ணா! என் உயிரே! பக்தவத்சலா என்று சொல்லி ஆரத்தழுவிக் கொண்டார். சுதாமா! என்னை இன்னும் நினைவில் வைத்திருக்கிறாயே! எவ்வளவு தூரம் என் நினைவு உன்னிடம் இருந்திருந்தால் என்னை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பாய். ஐயோ! நான் எவ்வளவு பெரிய அசடன்! வந்தவனை வாசலிலேயே நிற்க வைத்து பேசிக்கொண்டிருக்கிறேனே! வாடா! உள்ளே வா! நாம் மனம் விட்டு பேசி எவ்வளவு நாளாகிறது? வா போகலாம்! என்று அவரை தன் தோள்களின் மீது சாய்த்த படியே அழைத்துச் சென்றார். மன்னாதி மன்னர்களெல்லாம் அசந்து விட்டார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணரே நேரில் வந்து ஒரு எளியவனை அழைத்துச் செல்கிறார் என்றால் அவர் எவ்வளவு உயர்ந்தவர்! அவரை புழு, பூச்சி போல நினைத்து அறியாமல் பேசிவிட்டோமே! என்று மனம் வருந்தினார்கள்.பணக்காரர்களுக்கு அர்ச்சகர் தரும் பரிவட்டம் வேண்டுமானால் கிடைக்கும். ஆனால், எளிய பக்தனுக்கு ஆண்டவனின் பார்வை அவன் எவ்வளவு தொலை தூரத்தில் நின்றாலும் கிடைத்து விடும். அதுபோன்றது தான் குசேலருக்கு கிடைத்த தரிசனம்.இதோ ஒரு சம்பவம்!ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே! ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற பதினாறு பதங்களை கொண்ட மந்திரம் நம்மை பகவானிடம் சேர்க்கும் எளிய சாதனம் என்று அறிவித்தவர் கிருஷ்ண சைதன்ய மகாபிரபு. இவர் ஸ்ரீகூர்மம் என்ற ஊருக்கு வந்தார். அவ்வூரில் வாசுதேவ கோஷ் என்ற பக்தர் இருந்தார். அவர் அருகில் யாருமே நெருங்கமாட்டார்கள். காரணம் என்ன தெரியுமா? அவர் ஒரு தொழு நோயாளி. தொழு என்றால் ஏதோ கை, கால்கள் மடங்கிப் போன அளவுடன் நிற்கவில்லை. உடலில் புழுக்கள் மொய்த்தன. அவரைக் கண்டவர்கள் விலகி ஓடி விடுவார்கள். அதையே தனக்கு சாதகமாக அவர் எடுத்துக் கொண்டார். கஷ்டத்தையும் சாதகமாக எடுத்துக் கொள்வதற்கு நிறைய பக்குவம் வேண்டும். ஹே கிருஷ்ணா! நீ எவ்வளவு உயர்ந்தவன்! எனக்கு இந்த வியாதியைப் பரிசாகத் தந்ததன் மூலம் என்னருகே யாரையும் நெருங்க விடமாட்டேன் என்கிறாய். இதனால் தானே நான் ஏகாந்தமாக (தனிமை) அமர்ந்து உன்னைச் சிந்திப்பதற்கு நிறைய நேரம் கிடைத்துள்ளது. நான் மற்றவர்களைப் போல இருந்திருந்தால் எனக்கு இப்படி ஒரு அரிய சந்தர்ப்பம் கிட்டியிருக்குமா? என்றபடியே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண என்று பெருமாளின் நாமத்தை ஜெபித்தபடியே இருப்பார். கிருஷ்ண சைதன்யர் அங்கே வருகிறார் என்று மக்கள் பேசிக்கொண்டது அவர் காதில் விழுந்து விட்டது.அவர் எவ்வளவு பெரிய மகான்! அவரது தரிசனம் எனக்கு கிடைக்குமா? கூட்டத்துடன் கலந்து நிற்க என்னால் இயலாது. தூரத்தில் நின்று தரிசித்தால் கூட போதும், என்று ஆவல் கொண்டார். அங்கே தளர்ந்த நடையில் சென்றார். ஆனால், அதற்குள் சைதன்யர் அங்கே வந்து மக்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டு சென்று விட்டார். வாசுதேவகோஷின் கண்களில் நீர் முட்டியது. நான் கொடுத்து வைக்காதவன்! நான் எங்கு சென்றாலும் என் பாவம் கூட வருகிறதே! என்று அழுதார்.