பதிவு செய்த நாள்
28
மார்
2011
04:03
குழந்தை தன் முன்னால் நின்ற ஒவ்வொருவரையும் விழித்து விழித்துப் பார்த்தது. அதன் பார்வை தீர்க்கமாக இருந்தது. பிறந்ததில் இருந்து கண்ணே விழிக்காததால், கவலையடைந்த தாய் உத்தரையும், தாத்தாக்களான தர்மர், அர்ஜுனனும், பாட்டிகளான திரவுபதி, சுபத்ராவும் கிருஷ்ணரைச் சரணடைந்தனர்.அண்ணா! என் மகனை என்னிடமிருந்து பறித்துக் கொண்டது விதி. ஆனால், என் பேரனும் இப்படி கண் திறக்காமல் கிடக்கிறானே! என்று அழுதாள் சுபத்ரா.தங்கையின் கண்ணீர் கண்ணனைக் கரைத்தது. அவன் தன் கமலப்பாதங்களை குழந்தையின் மீது வைத்தானோ இல்லையோ, குழந்தை விழித்துக் கொண்டது. அனைவரும் ஆனந்தமடைந்தனர்.கிருஷ்ணரின் பாத ஸ்பரிசத்தால் குழந்தை கண்விழித்ததால் விஷ்ணு பாதன் என்று பெயர் வைத்தனர். அப்போது தான் குழந்தை ஒவ்வொருவரின் முகத்தையும் ஆராய்ந்தது. தர்மர் சிரித்தபடியே, நம் பேரன் ஒவ்வொருவராக பரிட்சிக்கிறானே! என்றார். அதை அடிப்படையாகக் கொண்டு, அவனை பரீட்சித்து என்றே அழைக்கலாயினர். அந்தப்பெயரே அவனுக்கு நிலைத்து விட்டது. பரிட்சித்து வளர்ந்ததும், அவனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு, கிருஷ்ணரிடமே சரணடைந்து அவரது பாதார விந்தங்களை அடைய வேண்டும் என்பதில் தர்மர் நாட்டம் கொண்டிருந்தார். பல சகோதரர்களையும், வீரர்களையும் பறிகொடுத்து பெற்ற வெற்றி அவரது மனதை மிகவும் பாதித்திருந்தது. நாடாள்வதில் அவருக்கு விருப்பமே இல்லை. திரவுபதி மூலம் தாங்கள் பெற்ற ஐந்து பிள்ளைகளையும் அஸ்வத்தாமன் கொன்று விட்டதால், பாண்டவர்களுக்கு வாரிசே இல்லை என்றாயிற்று. தர்மருக்குப் பிறகு அரசாட்சி செய்ய யாருமில்லை என்ற நிலையிலேயே தாத்தா சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அர்ஜுனன்- சுபத்ரையின் மகனும், மாவீரனுமான அபிமன்யுவின் புத்திரனாக உத்தரையின் வயிற்றில் பரிட்சித்து பிறந்தான்.
அவனுடைய ஜாதகத்தை முனிவர்கள் மூலமாகக் கணித்தார் தர்மர்.அவர்கள் அவனைக் குறித்து நல்ல பலன்களையே சொன்னாலும், அவனுடைய ஆயுள், முனிபுத்திரன் ஒருவரின் சாபத்தால் முடியுமென்றும், பாம்பு தீண்டி இறப்பான் என்றும், ஆனால், விஷ்ணுவின் திருப்பாதத்தையே அடைவான் என்றும், அவன் மூலமாக பாகவதம் என்னும் அழியாப்புகழ் கொண்ட காவியம் உருவாகும் என்றும் சொன்னார்கள். தர்மர் இதுபற்றி கவலைப்பட்டாலும், தன் பேரன் விஷ்ணுவின் திருப்பாதங்களை அடைவான் என்று முனிவர்கள் சொன்னதால் ஆறுதலடைந்தார். பாண்டவர்களின் காலத்திற்குப் பிறகு பரீட்சித்துவின் ஆட்சி சிறப்பாக நடந்தது. விதிப்படி, பரிட்சித்து மன்னன் தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரின் கழுத்தில் இறந்த பாம்பு ஒன்றைத் தொங்கவிடவே, அவரது புத்திரன் அதைக்கண்டு ஆவேசமடைந்து, நீயும் பாம்பால் இறப்பாய் என்று சாபமிட்டான்.இந்த நேரத்தில் தான், கிளிமூக்கு கொண்ட சுகப்பிரம்ம முனிவர் அங்கு வந்தார். அவர் வியாசரின் புத்திரர். அவரிடம், இன்னும் ஒரு வாரத்தில் ஒரு பாம்பால் தனக்கு மரணம் நேர இருப்பதாகவும், மரணத்திற்குப் பிறகு தனக்கு நற்கதி கிடைக்குமா என்றும் கேட்டான். ஸ்ரீமன் நாராயணனின் திவ்யலீலைகளை யார் ஒருவர் கேட்கிறாரோ, யார் ஒருவர் அவரது எண்ணத்திலேயே லயித்திருக்கிறாரோ அவர் நிச்சயம் விஷ்ணுவின் திருப்பாதங்களை அடைவார், என்ற சுகப்பிரம்மர், அவரது லீலைகள் பற்றி வர்ணித்தார். அவர் சொன்ன விஷ்ணு லீலைகளின் தொகுப்பே பாகவதம் ஆயிற்று. அதில் ஒன்று தான் கிருஷ்ணாவதாரத்தில் அவர் நிகழ்த்திய லீலைகள். கிருஷ்ணர் தன் நண்பரான சுதாமாவுக்கு முக்தி அளித்த வரலாற்றையும், சுகப்பிரம்மர் பரீட்சித்துவுக்குச் சொன்னார். சுதாமா என்று இளவயதில் அழைக்கப்பட்டவரே குசேலர் ஆனார்.குசேலரின் திவ்ய சரிதத்தை இனி கேட்டு மகிழ்வோம். இந்த சரிதத்தைப் படிப்பவர்கள் பொருளாசை நீங்கி, ஸ்ரீகிருஷ்ணரின் திருப்பாதங்களை அடைவது உறுதி.
வடமதுரை என்னும் மதுராபுரி நம் பாரததேசத்தின் முகம் போல் விளங்குகிறது. அதன் அருகில் அவந்தி என்ற நகரம் இருந்தது. இவ்வூரின் செல்வச்செழிப்பை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. வீடுகளை இங்கு செங்கல்லால் கட்டுவதில்லை. தங்கக் கட்டிகளை அடுக்கிக் கட்டுவார்கள். இங்கே தெரு விளக்குகள் தேவையில்லை. ஏனெனில், கணவருடன் ஊடல் கொண்ட பெண்கள் தங்கள் அணிகலன்களைக் கழற்றி வெளியே வீசி எறிந்து விடுவார்களாம். அவை சிந்தும் ஒளியே அந்த நகரத்தை நிரப்பி விட்டதாம். மிக அகலமான தெருக்களைக் கொண்ட நகரம் அது. இந்த நகரத்தின் சிறப்பைச் சொல்ல ஆயிரம் நாக்கு கொண்ட ஆதிசேஷனாலும் முடியாது என்றால், ஒரு நாக்கு படைத்த சுகப்பிரம்மர் எந்தளவுக்கு சொல்ல முடியும்? அதிலும் அவருக்கு கிளிநாக்கு! ஆனாலும், தன்னால் முடிந்தளவுக்கு பரிட்சித்துவிடம் சொன்னார்.அப்போது அவர் சொன்னாராம். இந்த நகரத்தின் பெருமை பற்றி சொல்ல என்னால் முழுமையாக முடியாது. ஆனாலும், சில விஷயங்களைக் கேட்கும்போதே மனதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் பொங்கும்! அப்படிப்பட்ட விஷயம் தான் இந்த அவந்தி நகரின் வளமை, என்று. இதற்குள் ஒரு சூட்சுமமும் இருக்கிறது. சாவு என்ற பெருந்துன்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான் பரிட்சித்து. துன்பப்படுபவனிடம் போய், ஐயையோ! உன் கதி இப்படியா முடிய வேண்டும்! முனிவர்களிடம் போய் விளையாடலாமா? உனக்கு அறிவு இருக்கிறதா? உன் தாத்தா தர்மர் பெயரைக் கெடுத்து விட்டாயே! என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினால், அவனுக்கு எப்படியிருக்கும்? துன்பப்படுபவர்களிடம் அவர்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்ல வேண்டுமே தவிர, அவர்கள் செய்த தவறுகளையெல்லாம் இடித்துக் காட்டினால், வேதனையின் அளவு கூடத்தான் செய்யும். இப்படி செழிப்புமிக்க அவந்தி நகரின் அருகில் ஒரு பெரிய காடு இருந்தது.