பதிவு செய்த நாள்
28
மார்
2011
04:03
குருகுலத்தில் கல்வி கற்கும் நேரம் தவிர, அவர்கள் இருவரும் பல விஷயங்களைப் பேசுவார் கள். அப்படி பேசும் பேச்சில் சிறு மாறுபாடு கூட இருக்காது. இப்போதெல்லாம் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பேசினால், ஏதோ சினிமா, காதல், அரசியல் பற்றியதாகத்தான் இருக்கிறது.ஒருவனுக்கு ஒரு நடிகரையோ, தலைவரையோ பிடிக்கிறது, இன்னொருவனுக்கு வேறு யாரையோ பிடிக்கிறது. இருவரும் அவரவருக்கு பிடித்தவரை உயர்த்திப் பேசுகிறார்கள். உடனே, சண்டை வந்து விடுகிறது. நட்பு பகையாகிறது. சில சமயங்களில் அடிதடி வரை சென்று விடுகிறது. ஒருவன் காதலிக்கும் பெண்ணையே, இன்னொருவனும் காதலிப்பதாகச் சொல்கிறான். இதுபோன்ற பிரச்னைகள் உயிரைப் பறிக்கும் அளவுக்குக் கூட சென்று விடுவதைப் பார்க்கிறோம். இன்று, நிஜமான நட்பு இல்லவே இல்லை.நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்! ஐம்பது வயதை தாண்டிய ஒருவர், உங்களுடன் முதல் வகுப்பு படித்த யாராவது ஒரு நண்பனையாவது நினைவில் வைத்திருக்கிறீர்களா? உங்களிடையே ஒருமித்த நட்பு இன்றும் தொடர்கிறதா? ஆம்... என்றால், நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். ஆனால், ஆம் என்ற அந்தக் குரல், மிக குறைந்த ஓசையுடனேயே கேட்கும். அதாவது, விரல் விட்டு எண்ணும் அளவே இத்தகையவர்கள் இருப்பார்கள். கண்ணனும், குசேலரும் அப்படியல்ல. இருவர் பேச்சிலும் கூட ஒருமித்த கருத்தே வெளிப்படும். இது மட்டுமல்ல! சாந்தீபனி முனிவரின் பத்தினி இடும் வேலையை அவர்கள் செய்வது வழக்கம். குருகுல மாணவர்களுக்கு சமைப்பதற்காக அவர்கள் விறகு பொறுக்கவும் செல்வார்கள். அந்த அம்மையாரை அவர்கள் தாயாகவே மதித்தார்கள்.
ஒருநாள், நண்பர்கள் இருவரும் விறகொடிக்கச் சென்றார்கள். அப்போது, மேகம் கறுத்தது. நீரின்மை என்ற வறுமையை நீக்க, கடல் நீர் குதித்தெழுந்து ஆவியாகி உயரே சென்றது. வாளின் பிரகாசம் போல, மின்னல் வெட்டியது. கோயில்களில் ஒலிக்கும் பெரும் முரசுகள் போல இடி முழங்கியது. இந்திரன் கோபத்துடன் வளைத்த வில்லைப் போல, வானவில் தோன்றியது. கடவுளைச் சரணடையும் பக்தனைப் போல, பாம்புகள் இடிக்குப் பயந்து தங்கள் புற்றுகளில் அடைக்கலமாயின. இளம் பெண்களைப் போல் மயில்கள் நடனமாடத் துவங்கின. விலங்குகளும், பறவைகளும் நடுங்கியபடி அங்குமிங்குமாக சென்றன. பெரும் மழை வானத்தைப் பிய்த்துக் கொண்டு ஊற்றியது. கண்ணனும், குசேலரும் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல் தவித்தனர். மரத்தடியைத் தவிர வேறு இடமில்லை. மழை பெய்தால் என்ன! வெயில் அடித்தால் என்ன! குரு பத்தினியின் உத்தரவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற எண்ணமும் அவர்களின் மனதில் ஒருமித்து ஓடியது. அது பேச்சாக ஒரே சமயத்தில் வெளிப்பட்டது. இந்த விறகை நனையாமல் காப்பது எப்படி? குருபத்தினியின் கட்டளையை நிறைவேற்றியாக வேண்டுமே! என்று இருவரும் ஒரே சமயத்தில், வார்த்தைகள் கூட பிசகாமல் கேட்டுக் கொண்டனர். ஒத்த கருத்து இருந்தால் ஒரு செயல் ஜெயமாகும் என்பதை கிருஷ்ண பரமாத்மா, சுதாமாவின் நட்பு மூலம் உலகத்துக்குச் சொல்லும் நல்ல பாடம் இது. மரத்தின் அடியில் நின்றால், மழைக்கு எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க முடியும்! கொட்டோ கொட்டென்று கொட்டிய மழை, மரங்களையும் நனைத்து, இலைகளில் இருந்து உதிர்ந்த நீர், சின்னஞ்சிறுவர்களை நனைத்தது. விறகுக்கட்டு நனைந்தது. சின்னஞ்சிறு பிள்ளைகள் என்ன செய்வார்கள்? மழை இன்னும் வலுத்தது. பாதங்களை மூழ்கடித்த தண்ணீர், பின்னர் கணுக்கால் அளவு உயர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்து இடுப்பளவுக்கு வந்து விட்டது. அந்த நேரத்தில் வேகமாக காற்றடித்தது.
மேகத்தால் ஏற்கனவே இருள் சூழ்ந்திருக்க மாலை வேளையும் வந்து விட்டது. குள்ளமாக வந்து பேருருவம் கொண்ட திருமாலாகிய திரிவிக்ரமனின் மார்பில் குங்குமம் பூசியது போன்ற சிவந்த நிறத்துடன் சூரியன் அஸ்தமனமாகி விட்டான்.இருள் சூழ ஆரம்பித்ததால், இனியும் மரத்தடியில் நிற்பது பாதுகாப்பில்லை என்பதால், அந்த இனிய நண்பர்கள் இருவரும், இருட்டில் தடுமாறியபடியே கைகோர்த்து ஒரு பாறையின் அடியில் போய் அமர்ந்தனர். சற்று நேரத்தில் மழை நின்று மேகங்கள் விலகின. அந்நேரத்தில், வானில் சந்திரன் உதித்தான்.அந்தக் காட்டில் ஒளிவெள்ளம் பரவியது. அப்போது, அங்கே திரிந்த கரிய யானைகள் கூட, சந்திரனின் வெள்ளைக் கிரணங்களை பிரதிபலித்து, இந்திரனின் வெள்ளை யானையான ஐராவதம் போல் தோற்றமளித்ததாம் கிருஷ்ண நண்பர் களுக்கு.வெளிச்சம் தெரிந்தாலும், எப்படி குருகுலத்துக்கு செல்ல முடியும்? தனித்து இரவு வேளையில் காட்டுக்குள் சென்றால் புலி, சிங்கம் போன்ற மிருகங்களிடம் சிக்கிக் கொள்ள நேரிடுமே! விடிந்த பிறகு செல்லலாம் என குழந்தைகள் அங்கேயே அமர்ந்திருந்தார்கள். மறுநாள் விடிந்தது.அப்போது, குருகுலத்தில் இருந்த சாந்தீபனி முனிவர், கண்ணனையும், சுதாமாவையும் எங்கே? என்று மாணவர்களிடம் கேட்டார். குருபத்தினி, முதல் நாள் மதியமே அவர்களை விறகு பொறுக்கச் சொல்லி அனுப்பினார்கள், என்றார்கள் மாணவர்கள். காட்டுக்குச் சென்றவர்கள் இரவில் வீடு திரும்பவில்லையா? ஐயையோ! நேற்று இரவில் கடும் மழை கொட்டியதே! இரவில் குழந்தைகள் விலங்குகளிடம் சிக்கியிருந் தால்... அவர் மனைவியைக் கடிந்து கொண்டார். மாணவர்களை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் ஓடினார். அங்கே பாறையின் கீழ் அமர்ந்திருந்த தன் சீடர்களைக் கண்டு ஆனந்தம் கொண்டார்.கண்ணா, சுதாமா! என் அன்புக்குரியவர்களே! பதைபதைத்து போனதடா என் மனம்! விறகை நனையாமல் காப்பாற்ற, இரவு முழுவதும் காட்டில் வதைபட்டீர்களே! எனக்கு தொண்டு செய்த மாணவர்களில் நீங்களே உயர்ந்தவர்கள். என்னிடம் கற்ற கடனைக் கொடுத்து விட்டீர்கள். எல்லாவிதமான பாவங்களில் இருந்தும் நீங்கி விட்டீர்கள். நீங்கள் உத்தமர்கள். உங்களுக்கு பெரும் செல்வமும், சிறந்த மனைவியரும், மழலை பேசும் ஏராளமான குழந்தைகளும், சிறந்த சுற்றத்தாரும் கிடைப்பார்கள். நீங்கள் தீர்க்காயுளுடன் வாழ்வீர்கள், என்று நல்லாசி கூறினார். அவரது ஆசி பலித்தே விட்டது. எப்படி?