ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி நடராஜ தேவார பக்த பஜனை, சைவ சித்தாந்த சங்கம் ஆகிய இடங்களில் திருவாதிரை 10 நாள் திருவிழா துவங்கியது. ஆறுமுகநேரி லெட்சுமிமாநகரம் ஸ்ரீநடராஜ தேவார பக்த பஜனை ஆலயத்தில் 123ம் அண்டு திருவாதிரை திருவிழா துவங்கியது. இதனை முன்னிட்டு தினமும் இரவு திருவெம்பாவை பாடி, பக்தி சொற்பொழிவு நடைபெறும். இதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடக்கிறது. வரும் 17ம் தேதி மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு 9 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறும். இதனைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு அலங்கார சப்பரத்தில் ஸ்ரீநடராஜ பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.10ம் திருநாளான 18ம் தேதி அதிகாலை சப்பரம் பஜனை ஆலயம் வந்தடைந்ததும் திருவெம்பாவை பாடி சிறப்பு பூஜை நடைபெறும். ஏற்பாடுகளை ஸ்ரீநடராஜர் தேவார பக்த பஜனை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர். ஆறுமுகநேரி விநாயகர் கோயில் தெரு சைவ சித்தாந்த சங்கத்தில் திருவாதிரை 10நாள் திருவிழா ஆரம்பமானது. தினமும் இரவு நடராஜர் சன்னதியில் ஓதுவாமூர்த்திகள் திருவெம்பாவை 20 பாடல்கள் பாடி சிறப்பு தீபாராதனை நடைபெறும். திருவாதிரை தினமான வரும் 18ம் தேதி காலை அலங்கார சப்பரத்தில் நடராஜர் திருவீதி உலா நடைபெறும். சைவ சித்தாந்த சங்கத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் வந்தடைந்து பின்னர் மீண்டும் கோயில் வந்தடையும். பின்னர் திருவெம்பாவை பாடி சிறப்பு பூஜை நடைபெறும். ஏற்பாடுகளை சைவ வேளாளர் சங்க தலைவர் சங்கரலிங்கம், துணைத் தலைவர் மாணிக்கவாசகம், செயலாளர் முத்துராமன், பொருளாளர் கற்பகவிநாயகம் ஆகியோர் செய்து வருகின்றனர். ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜர் சன்னதியில் தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது. மாணிக்க வாசகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். ஓதுவாமூர்த்திகள் திருவெம்பாவை பாடி தீபாராதனை நடக்கிறது.