பதிவு செய்த நாள்
14
டிச
2013
10:12
சென்னை: பல்வேறு துறைகளில், சிறந்து விளங்கும் நபர்களுக்கு, விருது வழங்கி கவுரவிப்பது போல், எந்த எதிர்பார்ப்புமின்றி பணிபுரியும், சிவாச்சாரியார், பட்டாச்சாரியார், பூசாரி ஆகியோரின் பணிகளை பாராட்டி, விருது வழங்கி, கவுரவிக்க வேண்டும் என, திருக்கோவில் பணியாளர் நலச் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில், திருவாரூரில் நடந்த, திருக்கோவில் பணியாளர் நலச் சங்க மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அறநிலையத் துறையில் பணிபுரியும் அர்ச்சகர் முதல் பணிப்பெண் வரை, பணியாளர்கள் தங்களது குறைகளை, துறையின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில், மாதந்தோறும், துறை வாரியான கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும். சமூகச்சேவை, கலை, அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில், சிறந்து விளங்கும் நபர்களுக்கு, விருது வழங்கி கவுரவிப்பது போல், எந்த எதிர்பார்ப்புமின்றி பணிபுரியும், சிவாச்சாரியார், பட்டாச்சாரியார், பூசாரி ஆகியோரின் பணிகளை பாராட்டி, விருது வழங்கி, கவுரவிக்க வேண்டும். முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அறநிலையத் துறையின் பணியாளர்களையும் இணைக்க, ஆவன செய்ய வேண்டும்; பசுமை வீடு கட்டும் திட்டத்தில், கோவில் பணியாளர்களுக்கும், வீடு கட்ட நிதி வழங்க வேண்டும். அர்ச்சகர் முதல் பணியாளர்கள் வரை, அனைவரையும், அரசின் அடிப்படை நான்காம் பிரிவு ஊழியராக அறிவிக்க வேண்டும். கோவில்களின் வருவாயில், 40 சதவீதம், கோவில் பணியாளர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை ரத்து செய்து, புதிய ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.