பதிவு செய்த நாள்
14
டிச
2013
11:12
குற்றாலம்: குற்றாலம் குற்றாலநாதர் கோயில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. குற்றாலம் குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள் கோயில் சித்திர சபையில் உள்ள நடராசபெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்க மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, சுவாமி, அம்பாள் வீதியுலா. இதனை முன்னிட்டு நேற்று காலை நடராசர் மற்றும் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடந்தது. இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் எழுந்தருளினர். இன்று (14ம்தேதி) சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்னம் வாகனத்திலும், நாளை (15ம்தேதி) நடராசர் வெள்ளை சாத்தியும், வரும் 16ம்தேதி காலை பச்சை சாத்தி, தாண்டவ தீபாராதனையும் இரவு பூங்கோயில் வாகனத்தில் எழுந்தருளலும் நடக்கிறது. 17ம்தேதி இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளல் நடக்கிறது. 18ம்தேதி அதிகாலை 4 மணிக்கு சித்ர சபையில் நடராசர் ஆருத்ரா தரிசன தாண்ட தீபாராதனையும், 5.20 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது. தேரோட்ட விழாவில் கோயில் உதவி ஆணையர் கண்ணதாசன், செயல் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் மண்டகபடிதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.