பதிவு செய்த நாள்
19
டிச
2013
10:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சுகாதார வளாகம் உள்ளிட்ட பல வசதிகள் இல்லை. தினமும் இங்கு வரும் பக்தர்கள், அலைமோதுகின்றனர். வேறு வழியின்றி, ரோட்டோரம் இளைப்பாறி அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்ய, மற்றும் தனுஷ்கோடியை காண, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணி, பக்தர்கள் வருகின்றனர். தற்போது அய்யப்ப பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. மேலும், மாதம் 5 லட்சம் பேர், வருகின்றனர். ராமேஸ்வரத்தில் இருக்கும் சில மணி நேரத்திற்கு கழிப்பறை, சிறிது நேரம் ஓய்வு எடுக்க அறை, குடிநீர் வசதி இருந்தால் போதுமானது. ஆனால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், கோயில் நான்கு ரதவீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை, கார் "பார்க்கிங் உள்ளிட்ட முக்கிய இடங்களில், கோயில் நிர்வாகம், நகராட்சிக்கு சொந்தமான இலவச கழிப்பறை, இலவச தங்கும் விடுதி, குடிநீர் வசதி முற்றிலும் இல்லை. அக்னி தீர்த்த கடற்கரை, "கார் பார்க்கிங்கில் 30 லட்ச ரூபாயில் நகராட்சி அமைத்துள்ள சுகாதார வளாகம், பயன்பாட்டிற்கு வராமல் பல மாதங்களாக மூடிக்கிடக்கிறது. இப்பகுதியில் உள்ள தனியார் கழிப்பறைக்கு குளிக்க, கழிப்பறை செல்லும் ஒரு நபருக்கு 20 ரூபாய் வசூலிக்கின்றனர். கோயில் நிர்வாகம் மற்றும் தனியார் லாட்ஜில் 300 முதல் 1800 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இதற்கு கூட வசதியில்லாதவர்கள், திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் அக்னி தீர்த்த கடற்கரை, பஸ் ஸ்டாண்ட் அசுத்தமாகிறது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமல், பக்தர்களை கோயில், நகராட்சி நிர்வாகங்கள் அலைக்கழிக்க வைக்கின்றன. மேலும், அக்னி தீர்த்தக்கடலில் குளித்த பின், வெட்ட வெளியில், உடை மாற்றும் அவலம் தொடர்கிறது. கோயிலுக்கு உண்டியல் காணிக்கை மாதம் 40 முதல் 45 லட்சம் ரூபாயும், நகராட்சிக்கு டோல் கேட், இதர வரி மூலம் மாதம் 17 லட்ச ரூபாய் வருவாய் கிடைக்கும் நிலையில், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஏன் தயக்கம். கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் கூறியதாவது: ரயில்வே ஸ்டேஷன் அருகில் ரூ.1.22 கோடியில் இலவச தங்கும் விடுதி அமைக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அக்னி தீர்த்த கடற்கரை, "கார் பார்க்கிங்கில், 45 லட்ச ரூபாயில், இலவச கழிப்பறை அமைக்கப்பட உள்ளது. தெற்கு ரதவீதியில் சேதமடைந்த சுகாதார வளாகம், விரைவில் சீரமைக்கப்பட உள்ளது, என்றார்.