பிறர் பகைத்தாலும் நேசித்தாலும் நம்பினாலும் புகழ்ந்தாலும் வஞ்சித்தாலும் எவன் கவலைப்படுவதில்லையோ அவன் உயர்ந்தவன், புற அழகையும் சிறப்பையும் நாடும் உள்ளத்தில் புலன்கள் அடங்கா, ஐம்புலன்களை அடக்கி ஆளத் தெரியாதவன் தூய்மையற்ற உணவை உண்பவன், சோம்பேறி, கடமையில் ஊக்கமில்லாதவன் இத்தகையோர் வேரற்ற மரம் பெருங்காற்றில் முறிந்து விழுவது போல் அறியாமையாலும் துயரத்தாலும் சாய்க்கப்பெற்று வீழ்ந்து அழிவார்கள்.
எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்ற மேலும் அது கொழுந்துவிட்டு எரிவது போல் ஒருவன் உள்ளத்தில் பாவச் சிந்தனைகள் இடம்பெற்று விட்டால் அவன் மீண்டும் மீண்டும் தீமைக்கே ஆளாகிறான். தீய எண்ணத்துடன் சிந்தித்தாலும் செய்தாலும் தீமை அவனைத் தொடர்கிறது. எரியும் விளக்கில் விழுந்து மடியும் விட்டிலைப் போன்று தீமையிலேயே அவனும் மடிகிறான். அறியாமையில மூழ்கிக் கிடக்கும் ஒருவன் தன் அறியாமையை உணர்ந்தகணத்திலேயே அறிவாளியாகிறான். ஆனால் அறியாமையில் கிடந்து கொண்டே தன்னைப் புத்திசாலி என நினைக்கும் அறிவிலி உண்மையிலேயே மூடனாவான்.
பிறர் குற்றத்தைக் கூறுபவர்கள் தம் குற்றத்தை அறிவதில்லை. ஆகையால் தம்முடைய சொந்தக் குற்றம் மறைந்துவிடுகிறது. தம் குற்றத்தையும் பிறர் குற்றத்தையும் எடை போட்டுப் பார்க்க வேண்டும். அறியாமை ஒருவனை பந்தப்படுத்தும். நீதிமானாகிய ஞானியை நிந்திக்கச் செய்யும். தீயவன் வானத்தை நோக்கி எச்சில் துப்புவனுக்கு ஈடாவான். அவன் உமிழ்ந்த எச்சில் வானத்தை அசுத்தப்படுத்துவது இல்லை. மாறாக, அவன் முகத்திலேயே விழுந்து அவனை அசுத்தமாக்கும்.
காமத்தினின்றும், அகந்தையினின்றும் விடுபட்டவன் அடக்கமுடையவனாய் பேரின்பமுற்றவனாய் உறுதியாய் இருப்பான். நம்பிக்கையும் நல்லொழுக்கமும் ஒருவனிடம் இருந்தால் அவனை எல்லோரும் மதிப்பார்கள்.